போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!
இட ஒதுக்கீடு பிரச்னை இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆள் நியமனத் தடை இருக்கிறது. சமமான கல்வி, சமமான வாய்ப்பு, சமூக நலனில் அரசின் பங்கு போன்ற எண்ணற்ற விஷயங்களில் அரசுகள் கைகழுவத் தொடங்கி விட்டன. இந்நிலையில்தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது. சமூகநீதி என்ற பார்வையில் நாம் பார்க்காத வரையில் ஒருவரது வாழ்க்கையை மற்றவர் பறித்த உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது. அதேசமயம் வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை நிகழ்காலத்தில் சரிசெய்ய முற்படுவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
தகுதியும் திறமையும் கிராமங்களில் இல்லை என்ற வாதமெல்லாம் எங்கும் எடுபடாது. நகர்ப்புறங்களிலும் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் சரியல்ல. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது கோபாலபுரம் டிஏவி, எஸ்பிஓஏ, பிஎஸ் போன்ற பள்ளிகளைப் போல் ஒருநாளும் வரப்போவதில்லை.
ராஜிவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பல கூறுகளாகப் பிரித்தது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அதிக திறன் கொண்டோரைத் தயாரிக்கும் கல்வி, குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி, கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதுடன் ஒரு கல்வி என்று.. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் எந்த சமூகத்திலும் சமத்துவத்தை விரும்புவதில்லை.
அந்த அடிப்படைப் பிரச்னைகளை விட்டுவிட்டு அந்தக் கொள்ளைக்கெல்லாம் உடனிருந்து ஆதரவு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தவுடன் இடஒதுக்கீடு, சமூகநீதி, கிராமப்புற மாணவர் நலன் என்று உதட்டளவில் பேசித் திரிபவர்களை –வலைஞர்களே, இனம் கண்டு கொள்ளுங்கள் !
போலி நளன்களைக் கண்டு ஏமாறும் தமயந்திகள் அல்ல என்பதை உணர்த்துங்கள்!!
0 Comments:
Post a Comment
<< Home