கிழவியைத் தூக்கி மனையில் வை!
ஜுலை இரண்டாம் தேதி.. மதுரையில் சேது சமுத்திரத் திட்டம் தொடக்க விழா..
சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மீனவர்களும் கடல்வாழ் உயிரினங்கள் மீது அக்கறை கொண்டோரும் எழுப்பிய எதிர்ப்புக் குரல்கள் புறந்தள்ளப்பட்டன.
தமிழகத்திற்குப் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்த போது சுற்றுச் சூழலைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போட்டவர் டி.ஆர்.பாலு. இப்போது சேது சமுத்திரத் திட்டம் குறித்து எழுப்பப்படும் நியாயமான ஐயங்கள் கூட ஒதுக்கப்படுகின்றன. ஜெயலலிதா இப்போது சுற்றுச் சூழல் குறித்துப் பேசுவதும் பாலு பெருந்திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதும் வாழ்க்கை முரண்.
எப்போதுமே இருவருக்கும் சுற்றுச் சூழல் குறித்து உண்மையான அக்கறை இருந்திருக்காது. ஏதேனும் ஒரு கோணத்தில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுவது மேலதிக வேடிக்கைக் காட்சி.
கிணற்றைத் தூர்வாரினால், சாலைகள் போட்டால், வேலை நடந்ததா இல்லையா என்று மக்களுக்குத் தெரியும். கடலை ஆழப்படுத்தினார்களா இல்லையா என்பதை யார் பார்ப்பார்கள்? ஆழப்படுத்தப்படும் மண்ணின் தன்மை, எடுத்த மண் எங்கு கொட்டப்படும், விளைவு, கப்பல் பழுது, விபத்து, எண்ணெய்க் கசிவு, ஒருவழிப்பாதை, கட்டணங்கள் என்று அலைஅலையாய்க் கேள்விகள் .. தூத்துக்குடி அருகே உள்ள பவளப்பாறைகள், சின்னச் சின்னத் தீவுகள் கதி என்ன என்பதும் விவாதத்திற்கு உரியவை என்கிறார்கள் நிபுணர்கள்..
குரல் கொடுத்த வைகோவுக்கு முக்கியத்துவம் இல்லையா இருக்கா விவாதம் ஊடகங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை..
13 Comments:
சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவு.
மனிதம் என்றொரு அரசு சார்பற்ற இயக்கம் (NGO) இது குறித்து போராடி வருகிறார்கள். இத்திட்டம் என்னென்ன இன்னல்களை விளைவிக்கக்கூடுமென்று அவர்களது வலைத்தளத்தில் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்கள். அவசர கதியில் இத்திட்டத்தை செயல்படுத்துமுன், மேற்கூறிய சுட்டியில் எழுப்பப் பட்டுள்ள நியாயமான சந்தேகங்களுக்கும் கவலைகளுக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர், இதற்குத் தொடர்புடையவர்கள்.
ஆனால், 'கள்ளிக்காட்டு இதிகாசங்கள்' தொடர்கதைகள் போல் அரங்கேறும் இந்நாட்டுச் சூழலில், இத்திட்டமும் அதன் இன்னொரு அத்தியாயமே எனத் தோன்றுகிறது.
இந்த விவகாரத்தைக் குறித்து வெளிவந்த செய்திக் குறிப்புகளின் தொகுப்பு இதோ.
சந்திரமுகி, அந்நியன், போலிப் பின்னூட்டங்கள், புத்தகப் பட்டியல்கள், இவற்றைப் போன்ற முக்கியமான விஷயமொன்றும் கிடையாது இந்த சேது சமுத்திரப் பிரச்சனை. ஏதோ, தென் மாவட்டங்களில் சில இலட்சம் மீனவர்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆகவே, மேற்கூறிய விஷயங்கள் குறித்துப் பதிவிட முயலுங்கள் :)
VOW,
1998 முதல் இந்தப் பிரச்னை குறித்து பேசியும் எழுதியும் வந்தபோதிலும் இந்தப் பதிவை இந்நேரத்தில் இடுவதற்கு உங்கள் பதிவே காரணமாக இருந்தது. நன்றிகள். பிரச்னை இல்லாத பிரச்னைகளுக்கு மயிர் பிளக்க விவாதிப்பதும் மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்னைகள் குறித்துப் பேசுவோர் மீது முத்திரை குத்துவதும் நமது கலாச்சாரமாகிவிட்டது குறித்த உங்கள் வேதனையை உங்கள் பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பெருந்திட்டங்கள் புனிதமானவை என்று கருதப்படுகின்றன. அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசக்கூடாது என்று நீதி மன்றங்களும் கூறுகின்றன. தொழில் வளர்ச்சியும் வணிகமும் சுற்றுச்சூழலை விட முக்கியமானவையாம்!
கண்களை விற்றுச் சித்திரம் வாங்க அவர்கள் தயார். ஏழ்மையும் வறுமையும் மீனவர்களுக்குப் புதிதா என்ன? வணிகக் கப்பல்களுக்கு தூரம் குறைகிறது, எரிபொருள் சிக்கனமாகிறது, பொருளாதாரம் தெரியாதவர்களே ஓரம் போங்கள்.. சில வணிகர்களின் லாபத்தைவிட சில லட்சம் மீனவர்களின் வாழ்க்கை முக்கியமா என்ன? விபரம் தெரியாமல் நீங்களும் என்னைப் போல இருக்கிறீர்கள்.. தமிழர்களின்145 வருட கனவு நிறைவேறப் போகிறது. மகிழத் தெரியாதவர்களே விலகி நில்லுங்கள் என்கிறது எமது மத்திய அரசு.
சுற்றுச்சூழல் பாதிப்படையும், வழியில் உள்ள குட்டித்தீவுகளுக்கு ஆபத்து, என்பது எல்லாம் எனக்குப் புரிகிறது.
ஆனால் மீனவர்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும் என எனக்கு (நிஜமாகவே) புரியவில்லை. பொதுவாய் ஆழமற்ற பகுதியை ஆழம் அதிகப் படுத்தினால் மீன் வரத்து அதிகரிக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
Voice on wings சுட்டியுள்ள செய்திக் குறிப்பிலும் இது குறித்து விளக்கமான தகவல் இல்லை.
மீனவர்களுக்கு இதனால் என்ன பாதிப்பு என்பதை தனிபதிப்பாய் பதித்தீர்களானால் எனக்கு சற்று தெளிவு பிறக்கும்.
நன்றி.
கோபி, நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு நன்றி. இன்று இரவு அல்லது நாளை பணிக்குச் செல்லுமுன் பதிவு செய்கிறேன்.
கோபி, உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. தெருத்தொண்டனின் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன். எனினும், இது குறித்த என் கருத்துக்களையும் கீழே இடுகிறேன்:
பாதிக்கப்படப் போகும் பாக் ஜலசந்திக் கடற்பரப்பு, உயிரினங்கள் மிக அதிக அளவில் வாழும் பகுதியாகும். இதற்கு முக்கியமானக் காரணம் அப்பகுதியில் காணப்படும் coral reef எனப்படும் பவளப்பாறைகள். பவளம் என்பது ஒரு வகையானக் கடல்வாழ் உயிரினம். சூரிய ஒளியை உட்கொண்டு, பிராண வாயுவை (oxygen) உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது இந்தப் பவளம். இந்தப் பிராண வாயுவே மீனினங்களுக்கு உயிர் மூச்சு. மற்றும் இந்த மீன்கள் உண்டு கொழிப்பது அப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படும் கடல்வாழ் நுண்ணுயிர்களை.
சேதுசமுத்திரத் தோண்டல்களால் நீர் கலங்கலடைந்தால் பவளங்களுக்குச் சூரிய ஒளி கிடைக்காது அவை அழிந்து போகும். கலங்கல் நீரில் நுண்ணுயிர்களும் வாழ வழியின்றி அழியும். மீன்களுக்குத் தேவையான உணவு, மற்றும் சுவாசம் இவையிரண்டும் மறுக்கப் பட்ட நிலையில் அவையும் அழிந்து போகும் சாத்தியங்களே அதிகம். மீன்கள் இல்லாது மீனவர்கள் எவ்வாறு பிழைப்பு நடத்துவார்கள்?
இதுமட்டுமல்லாது, கப்பல்கள் செல்லும் நேரம் போக மீதி நேரங்களிலேயே மீனவர்கள் அந்தக் கால்வாயைக் கடக்கலாம் என்ற விதிமுறைகள் திணிக்கப் படலாம். அல்லது, இந்தக் கால்வாயே ஒரு வரையப்படாத இந்திய - இலங்கை எல்லைக் கோடாக ஆட்சியாளர்களால் கருதப்படலாம். இவ்வாறானால் அது மீனவர்களுக்கு ஏற்படும் பேரிழப்பே. ஏனென்றால், மிகுதியான பிடிப்புகள் இலங்கைக்கு அருகில்தான் கிடைக்கின்றதாம். அங்கு செல்வதற்குத் தடை என்றானால் அவர்கள் வேறு தொழில் பார்க்க வேண்டியதுதான்.
தோண்டப்படும் மண்ணை எங்கு கொண்டு கொட்டுவார்கள் என்ற அச்சமும் மீனவர்களிடையே உள்ளது. அவர்கள் வாழும் பகுதிகளில் கொட்டி சீரழித்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்துக்குத் தேவையான கட்டுமானங்களை நிறுவ, தங்களை அப்புறப் படுத்தி விடுவார்களோ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
என்னுடைய இந்தப் பதிவில் சில சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன். விரும்பினால் படித்து மேலும் தெளிவடையுங்கள். நன்றி.
Gopi,என்னுடைய வாக்குறுதியை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். Voice of Wings பிரமாதமாக விளக்கியிருக்கிறார்.
நன்றி, VoW, நான் சொல்ல நினைத்ததை தெளிவாகவும் நன்றாகவும் விளக்கிவிட்டீர்கள்.
மீன்வளம் இல்லாத கடலில் மீனவர்கள்க்கு என்ன வேலை? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு மின்நிலையம், சேது சமுத்திரத் திட்டம் என்று வரிசையாக தென்மாவட்ட மக்களின் சுற்றுச்சூழல் வேறு மாதிரி ஆகிவிட்டது. உண்மையான மீனவர்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நமக்குத்தான் திட்டத்தின் நன்மைகள் புரியவில்லை போலிருக்கிறது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
vow இது குறித்து எழுப்பியுள்ள சந்தேகங்கள் நியாயமானவை தான். ஆனால் இந்தப் பாதிப்புகள் எல்லாம் முதலாண்டுகளில் மட்டுமே இருக்கக் கூடும். கூடியவிரைவில் பவழப்பாறைகளும் மீன்களும் புதிய சூழலை உணர்ந்து அதற்கேற்ப வாழத் தொடங்கிவிடும். பெரிய கடற்பரப்பில் தோண்டப்படும் பகுதி மிகச்சிறியதுதான். அமெரிக்க, ஐரோப்பியக் கண்டங்களில் இதுபோன்ற கால்வாய்கள் தோண்டப்பட்டு வெற்றிகரமாக அமைந்துள்ளன என்பதாலேயே இத்திட்டம் குறித்த எதிர்ப்புகளை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர்ச்சூழல் பாதிப்பு ஓரளவுக்கு எந்தப் பெரிய திட்டத்திலும் இல்லாமல் இருக்காது. அதேசமயம் சில பாதிப்புகள் விரைவிலேயே இயற்கையாலேயே சமன்செய்யப்பட்டு விடும்.
இலங்கைக்கு அருகில் போய் மீன் பிடிப்பது இப்போதே தடை செய்யப்பட்ட, பிரச்சினைக்குரிய ஒன்றுதான். கால்வாய் ஒருவேளை அடையாளக்கோடாக அமையலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
மீனவர்களின் பெரும்பாலான அச்சங்கள் வெறும் சந்தேகங்களே. திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகளாக குரல் கொடுக்கப்பட்டு வந்தபோதோ அரசியல்கட்சிகளால் இது ஒரு வாக்குறுதியாகவே முன்வைக்கப் பட்டபோதோ இதுகுறித்து ஒரு சந்தேகக்கேள்வி கூட எழுப்பப் படவில்லை. திட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள சூழலில் இன்று எதிர்ப்புக்குரல் எழுப்புவது வீண் விரயமாகவே தோன்றுகிறது.
அனுராக், உங்கள் கருத்துக்கு நன்றி. நான் இத்துறையில் வல்லமை பெற்றவனல்ல. இணையத் தேடல்களில் கிடைத்த செய்திகளையே மறுபதிப்பு செய்கிறேன். உயிரினங்களுக்கு ஆபத்து இருப்பதாகவே நிபுணர்கள் கருதுகிறார்கள் (பார்க: நானளித்த சுட்டிகளை்). பவளப்பாறைகள் உலகெங்கும் அழிந்து கொண்டிருக்கையில், இத்திட்டமும் அதனைத் துரிதப்படுத்தும் வகையில் அமைந்த நிலையில், நீங்கள் மிகுந்த நம்பிக்கையோடு அவை புது சூழலுக்கேற்றவாறு தம்மை மாற்றியமைத்துக் கொண்டு விடும் என்று கூறுவது சந்தேகத்துக்குரியதே. சூழல் சீர்கேடால் பல உயிரினங்கள் இவ்வுலகிலிருந்து அடையாளமின்றி அழிந்து கொண்டிருக்கும் செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன்.
மேலும், பாதிப்பு முதலாண்டுகளில் மட்டுமே என்ற உங்கள் கூற்றைப் பற்றி - இத்திட்டத்திற்கான அகழ்வுப் பணி ஒரு முறையோடு முடிவதல்ல. ஆழப்படுத்திய கால்வாயில் மீண்டும் மணல் படியாதிருக்க அடிக்கடி அகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய குறுக்கீடுகள் தொடர்ந்து நடைபெற்றால் உயிரினங்கள் எவ்வாறு அமைதியாக வாழவோ பெருக்கவோ முடியும்?
சூயஸ், பனாமா ஆகிய கால்வாய்களுக்கும் சேதுசமுத்திரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. முதலிரண்டும் நிலத்தை வெட்டி உருவாக்கப் பட்ட கால்வாய்கள், இருக்கும் கடலை ஆழப்படுத்தியல்ல. ஆகவே, அரிய உயிரினங்களின் அழிவு குறித்தெல்லாம் கவலைப்பட்டிருக்கத் தேவையிருந்திருக்காது. மேலும் பாதிப்படையும் பல இலட்சம் நபர்களைக் கொண்ட மீனவ சமூகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக, அவை கப்பல்களுக்கு மிச்சப் படுத்திய தூரம் மிக மிக அதிகம் (தென்னமரிக்க / ஆப்பிரிக்கக் கண்டங்களின் சுற்றளவு - ஆயிரக்கணக்கான கி.மீ). இங்கோ, சில நூறு கிலோமீட்டர்களே குறைவு. ஆகவே, இத்திட்டத்தை அவைகளுடன் ஒப்பிட முடியாது.
எதிர்ப்புக் குரல்கள் வெகு நாட்களாக இருந்து வந்திருக்கின்றன என்றே அறிகிறேன். திட்டம் தொடங்கியுள்ளதால் கொஞ்சம் அதிகமாகியிருக்கலாம்.
மீனவர்களின் அச்சங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும், இத்திட்டம் உண்மையிலேயே பயனுள்ளதா என்றக் கேள்வியும் எழுகிறது. விரைவுக் கப்பல்களை ஒரு சைக்கிள் ஓடும் வேகத்தில் நூற்று எண்பது கி.மீ. தூரத்திற்குப் பயணிக்க வைப்பதை கப்பல் நிர்வாகங்கள் வரவேற்குமா என்ற ஐயம் நிலைத்து நிற்கிறது.
அனுராக், VoW இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.விவாதத்தை நல்ல முறையில் எடுத்துச் செல்கிறீர்கள்.
இந்தத் திட்டத்திற்கு மாற்றுக் கருத்தாக 1998 இல் தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற வார இதழில் தெருத்தொண்டனின் பகிரங்கக் கடிதம் வெளியானது. பிரதான நீரோட்ட அரசியலில் இந்தக் கோரிக்கை 'இன உணர்வுடன்' எழுப்பப்பட்டபோதெல்லாம் சிறுசிறு குழுக்கள் எதிர்ப்பையும் பதிவு செய்து வந்துள்ளன. பத்திரிகையாளர் ஞாநி தொடர்ந்து ஏதேனும் ஒருவிதத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தமிழின விரோதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். இவர்களைப் பாருங்கள் இவர்களுக்கு மீனவர்கள் மீது என்ன அக்கறை என்று கேட்கப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்த விவாதம் ஏதோ என்.ஜி.ஓ சமாச்சாரம் என்ற பார்வையும் இருக்கிறது.
அரசியல் கட்சிகளில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே சேதுத் திட்டத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எச்சரித்தார். ஜெயலலிதா இன்று இந்தத் திட்டத்தை திமுக தத்தெடுத்துக் கொண்டுள்ளதே என்ற வருத்தத்தில் கூட எதிர்க்கலாம். சில மாதங்களுக்கு முன் வைகோ மறுமலர்ச்சி நடைப்பயணம் சென்ற போது இத்திட்டத்தின் நடைமுறைக்குப் பெருமை கொண்டாடுவதில் அருவருப்பான சுவரொட்டி யுத்தமே நடந்தது. (யுத்தத்தின் அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்து வரும் உலக மக்களிடம் இந்த இடத்தில் அந்த சொல்லைப் பயன்படுத்துவதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்).
//இத்திட்டத்திற்கான அகழ்வுப் பணி ஒரு முறையோடு முடிவதல்ல. ஆழப்படுத்திய கால்வாயில் மீண்டும் மணல் படியாதிருக்க அடிக்கடி அகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்//. கோடியக்கரை, நாகை பகுதியில் இருந்து இயல்பாகவே மணல் கொண்டுவரப்பட்டு இந்தப் பகுதி மேடாகும் தன்மை கொண்டது என்றும் எனவே அகழ்வுப்பணி தொடர்ந்து நடக்க வேண்டியது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இவை எல்லாமே சந்தேகங்கள் என்பதும் ஒரு பார்வை. Whether this project is economically viable and technically feasible என்பது குறித்து கடந்த காலங்களில் ஆய்வு செய்தவர்கள் கருத்தும் இதில் அடங்கும்.துறை நிபுணர்கள் கருத்துக்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். திட்டத்தை செயல்படுத்துபவர்களும் நிபுணர்கள்தானே என்று பின்னூட்டம் வரக்கூடும். அது அணுகுமுறை மற்றும் பார்வை வேறுபாடு.
எப்படியாவது பெரிய திட்டத்தைக் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இயற்கையையும் சமூகத்தையும் அணுகும் முறையில் உள்ள வேறுபாடே இதில் தெரிகிறது. உங்களிடம் அடிப்படையில் அக்கறை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்ததால்தான் VOW பதிவில் பின்னூட்டம் என்ற நிலையில் தொடங்கிய நான் அதைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறேன்.
VoW, இந்தப் பிரச்னையில் தன்னடக்கத்துடன் கூடிய உங்கள் பங்களிப்பு மிக அதிகம். அதைத் தனியாகவே ஒரு பதிவாக்கலாம் என்பது என் கருத்து.
மாற்றுக்கருத்துகளும் விவாதங்களுமே எந்த விஷயத்தநிலும் ஒரு தெளிவை உருவாக்க வல்லவை. உங்கள் தெளிவான கருத்துக்களுக்கு நன்றி. என்கருத்து இந்த எதிர்ப்புக்குரல்கள் அன்று பெரும்பாலும் NGO க்களால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்பட்ட நிலையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தத் தவறி விட்டன. எனவே இன்று திட்டம் செயல்பாட்டு நிலையை அடைந்துள்ள நிலையில் எதிர்ப்பது வீண் விரையமாகவே தோன்றுகிறது. நல்லதையே நினைப்போம் என்ற கருத்துடன் சாதகமான அம்சங்களை எடுத்துக்கூறினேன். எனினும் பாதிக்கப்படும் மக்களுக்கு இதனால் ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்ய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க இது உதவும் என்றால் எதிர்ப்புக்குரல்களும் விவாதங்களும் தொடர்வது நல்லதே.
அனுராக், இவ்விவாதம் பயனுள்ளதாக இருந்தது. மாற்றுக்கருத்துக்கள் விவாதிக்கப் பட்டால்தான் அனைவருக்கும் தெளிவு கிட்டும். கேரளத்தில் Silent Valley திட்டம் உலகளாவிய எதிர்ப்புக் குரல்களைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப் பட்டது. சேதுசமுத்திரத்தை அந்த அளவுக்கு எதிர்க்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி முடியாவிட்டாலும், நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு பாதிப்புகள் இருக்காதென நம்புவோம்.
தெருத்தொண்டன், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. பதிவுகளும் பின்னூட்டங்களும் பரவலாகப் படிக்கப் படுகின்றன என்று நினைக்கிறேன். ஆகவே, மேலும் இதனைத் தொடராது, இத்துடன் முடித்துக் கொள்கிறேன். உங்களுக்குப் பின்னூட்டிய ஒருவர் கூறியது போல், நல்லதே நடக்குமென்று நம்புவோம்.
VoW, அனுராக் மற்றும் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
Post a Comment
<< Home