வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்
வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்,அங்கே ஈகோ தான் ஆட்சி செலுத்துகிறது என்கிறார் இண்டெர்நெட் பற்றி புத்தகம் எழுதிய விஞ்ஞான எழுத்தாளர். அவர் யார் என்று சொல்லாமலேயே தரம் எளிதில் விளங்கும். தமிழில் எழுதுபவர்களுக்கு ஈகோ இருக்கலாமோ? இருந்தால் கமலுடனும் ஷங்கருடனும் “குப்பை” கொட்ட முடியுமோ?
(கேள்வியில் ஓகார இறுதி ஈழத் தமிழுக்கு உரியது என்று ஒரு பதிவில் படித்தேன். Break the rules!)
வலைப்பதிவுகளில் நேரம் செலவழிப்பது வீண்தானோ? சில விவகாரமான பின்னூட்டங்கள் வந்த காலத்தில்(அது இறந்த காலம் தானே?) சில நண்பர்கள் “இதற்குத்தானா ஆசைப்பட்டாய்” என்று வெறுத்தும், படிப்பதற்கு நேரம் செலவழிக்கிறேன் என்றும் தங்கள் பதிவுகளுக்குத் தற்காலிக விடுமுறை அளித்தனர்.
படிக்கும்போது பரீட்சை வந்துவிட்டால் வழக்கமாக நண்பர்கள் கூடிப் பேசும் ஸ்டேஷன் பெஞ்ச், மணிக்கூண்டு, மரத்தடி, திண்ணை, தேரடி, குட்டிச்சுவர், வாகையடி முக்கு (ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு இடம்) ஆகிய இடங்களுக்குப் போய் படிக்கிற நேரத்தை வீணாக்காதே என்று அம்மா சொல்வது மாதிரி இவர்களும் வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்க்காதீர்கள் என்று சொல்கிறார்களோ?
சரி..வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்க வேண்டாம். வேறென்ன செய்வது? உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டாமோ?
கணேஷ், வசந்த் அரட்டையில் வல்கர் ஜோக்ஸ் படிக்கலாம்; உலக மகா இலக்கியம் சலவைக் குறிப்பு பார்க்கலாம்; சென்னை நகர வீதிகளில் ‘பையன்கள்’ (வலையில் உள்ள பொடியன்கள் இல்லை) அடிக்கும் லூட்டியை ரசிக்கலாம்; ஜவுளிக்கடைகளில் அம்மாவைப் போன்ற பெண்களின் பின்புறம் இடிக்கும் பையன்களின் ‘குறும்பை’ப் பார்த்து மகிழலாம்; வாழ வழியின்றிப் பாலியல் தொழில் செய்யும் பெண்ணைப் பள்ளி மாணவர்கள் பக்கத்து வீட்டுப் ‘பள்ளி’க்கு அழைத்து வருவதை ஓரக்கண்ணால் பார்த்து ‘மலரும் நினைவுகளில்’ மூழ்கித் திளைக்கலாம்.
“ச்சீ” என்று இதையெல்லாம் ஒதுக்கி எறிந்து வீதிக்கு வந்தால், காலில் மிதிபட்ட எறும்பை மிருக மருத்துவமனைக்கு அழைத்துப் போ என்று யாரேனும் அம்பி உங்களிடம் கெஞ்சிக் கூத்தாடலாம். இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் உதாசீனப்படுத்தினால் தலையை விரித்துப் போட்ட அந்நியன் உங்களைத் தாக்கக் கூடும். (தாக்குதலில் நீங்கள் உயிர் பிழைப்பதும் பிழைக்காததும் உங்கள் பிறப்பைப் பொறுத்தது என்பார் உண்மை விளம்பும் காஞ்சி பிலிம்சார்)
லாஸ் ஏஞ்சல் ராம்/மயிலாடுதுறை சிவா கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைக் காம்பு கிள்ளிக் கீழே போட முடியாது. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மிஞ்சுவதைக் கடையைத் தாங்கும் கம்பில் தடவ முடியாது. இவற்றிற்கெல்லாம் தண்டனைகளாகக் கருட புராணத்தில் தீர்ப்புகள் இருக்கலாம்.
ஆலோசனையை மீறி (அதுவும் கறுப்பி போன்ற அற்புதக் கலைஞர் விடைபெற்ற பின்) வலைப்பதிவுகளில் “வீணாக” நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு என்ன தண்டனை?
5 Comments:
அதாகப்பட்டது சுஜாதாவின் தலைக்கு பின்னுள்ள ஒளிவட்டம் அப்படி பேச சொல்கிறது. சுஜாதாவின் இலக்கியத் தரம் வாய்ந்த, சமூக அக்கறையான எழுத்துக்களை இப்படி போய் எழுதுகின்றீரே சுஜாதா வாசகர் வட்டம் வந்து இப்போ தர்ம அடி போடப்போகின்றதே!!!
அடா அடா ஒவ்வொரு எழுத்தாளனின் முகத்திரையும் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து கொண்டே வருகின்றது
This comment has been removed by a blog administrator.
நன்றி குழலி.
வலைப்பதிவுகள் நேரம் எடுத்துக்கொள்கின்றன என்ற உணர்வை நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாகப் பதிவு போட்டீர்களே..அது ஏற்படுத்தியது. அன்றே பதில் போட நினைத்தேன்.
அப்புறம் கறுப்பி..
அலுவலகத்தில் வாய்ப்பு இருந்தால் பதிவு.. இல்லையேல் குட்பை என்றார் அவர்.
அலுவலகத்தில் வாய்ப்பு இல்லாமல் வீட்டுக்கு வந்து குடும்பத்தோடு இருக்கும் நேரத்தை இதற்கு செலவழிப்பதும், தட்டுத் தடுமாறித் தமிழில் தட்டச்சு செய்வதும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பது உண்மைதான்.ஆனால் அது "பார்" போய் அலுவலக அரசியல், நண்பர் வட்ட அரசியல், உண்மையான அரசியல் இதெல்லாம் பேசி நேரத்தை வீணடிப்பதைவிட மோசமில்லை என்ற உணர்வே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.
ஆமாம்.. ஒளிவட்டம் என்பது குறிப்பிட்ட ஒருவருக்கும் மட்டும் சொந்தமா என்ன குழலி? சரியாகச் சொன்னீர்கள்! பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களை எச்சரிக்கும் அரசியல்வாதியின் ஒளிவட்ட கமெண்ட் போல இதையும் விட்டு தள்ள வேண்டியது தான் என்று சொல்லாமல் சொன்ன உங்களை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன்.
மாயவரத்தான் வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home