எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும் |
நடுத்தரக் குடும்பங்களில் தங்கள் வீட்டு வேலைக்கு உதவுவதற்கு பெண்கள் நியமிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அவர்களை நடத்தும் விதம் குறித்து பத்மா அரவிந்த் தனது பதிவில் எழுதப்போக, அதை சாதிரீதியாக சில நண்பர்கள் எடுத்துக்கொண்டார்கள் . அது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம்.
ஆனால் அதையெல்லாம் படித்தபோது எனக்குள் எழுந்த கேள்விகளை இங்கு முன் வைக்கிறேன் . அவர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படுகிறதா?
பொதுவாகக் கூலியை நியாயமான கூலி, குறைந்தபட்ச கூலி என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது வீட்டைத் துடைத்து சுத்தம் செய்யும் ஒரு பெண்ணுக்கு வேலை நேரம் 1 மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே ஒரு மணி நேரம் செலவழித்து நமது அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பெண்ணுக்கு நமது நிறுவனங்கள் வழங்கும் கூலியை நாம் நமது வீடுகளில் உதவுபவர்களுக்குக் கொடுக்க முன்வருகிறோமா? அப்படி முன்வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் "ஏன் நீங்கள் இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள்? உங்களால் எங்கள் வீடுகளில் பிரச்சனை எழுகிறது. நாங்களும் உயர்த்திக் கொடுக்க வேண்டியதிருக்கிறது" என்று ஏன் சொல்கிறார்கள்?
அமைப்பாக்கப்படாத இந்த வீட்டு வேலையில் உதவும் பெண்களுக்கு எந்த அரசாங்கமும் குறைந்த பட்சக் கூலியை நிர்ணயம் செய்யாதது ஏன்? சந்தையே அதற்கான விலையை Demand and Supply Theory மூலம் தீர்மானித்துக் கொள்ளட்டுமே என்ற தாராளமயக் கொள்கைதான் காலங்காலமாக நடைமுறையில் இருக்கிறதா?
சங்ககாலத்தில் இருந்து தொழிற்சங்க காலம் கடந்து ஸ்வயம் சேவக் சங்க பரிவார் காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலுக்கு எதிராக ஏதேனும் இயக்கங்கள் நடந்திருக்கிறதா ?
இந்தியா தவிர மற்ற நாடுகளில் அவர்களது ஊதியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? உங்கள் அனைவரிடம் இருந்தும் அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே கேள்விகளாக எழுப்பியுள்ளேன்.
அப்பாடா இதற்குச் சாதி மூலாம் பூசமுடியாதென்று நிம்மதி. ( சாதியம் வேரோடி இருக்கும் ஒரு சமூகத்தில் அதைப் புறந்தள்ளித் தப்பி ஓடுவது ஆதிக்க சாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் வேலைதான் என்று உள்ளிருந்து ஓர் அந்நியன் குரல் கொடுக்கிறான். இருந்தும் வலைப்பதிவுகளில் நாகரீகம் கருதி சமரசம் செய்து கொள்ள வேண்டியது தான் என்று அவனை அடக்குகிறேன்).
17 Comments:
அமெரிக்காவில் நான் வாழும் பகுதியில் வேலைக்காரர்களுக்கான அமைப்பு இருக்கிறது.அவர்கள் மூலம் நாம் பணிக்கு அமர்த்தினா, மணிக்கு 10-15$ வரை ஊதியம் தரவேண்டும். அது minimum wagesஐ விட அதிகம். நிறுவனங்கலில் இவர்கள் ஒரு குறிப்பிட்ட சந்தா கட்டுகிறார்கள். நிறுவனங்கள் இவர்கள் பேரில் காப்பீடு எடுத்துள்ளது. அதனால் அவர்கள் வேலை செய்யும் போது ஏதேனும் உடைந்து விட்டால், அல்லது பழுதாகி விட்டால் பெற்று கொள்ள முடியும். தேவை ஏற்படும் போது அமைப்புக்கு அழழத்து சொன்னால், அவர்கள் யாரையேனும் அனுப்புவார்கள். தேவையான உபகரணங்கள், வேதிப்பொருட்கள், துடைக்கும் காகிதம், இன்னும் பல அவர்களே எடுத்து வருவார்கள். வருடத்திற்கு ஒருமுறை 3% கட்டணம் உயரும். இது பணவீக்கத்தை ஒட்டி ஏற்றப்படும் அளவு.
இன்னும் சிலர் சொந்தமாக சுத்தம் செய்ய வருவது உண்டு. அவர்களுக்கும் இதே போல மணிக்கு 10-15$ வரை தர வேண்டும். ஆனால் வேலை பார்க்க தேவையான கடவு சீட்டு இல்லாமல் வேலை பார்ப்பவர்கள் பணமாக 5$ பெற்று கொள்வது உண்டு. இதில் ஏதேனும் உடைந்தால் அவர்கள் பொறுப்பு இல்லை. அப்போது தீ போன்ற ஏதேனும் நிகழ்ந்தால் அவர்கள் மட்டும் இல்லாமல் நாமும் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும். இதில்
ஊ ரிலிருந்து வரும் வயதான பெற்றோர்கள் (நாடு, இனம், மதம் நிறம் மொழி இன்னபிற வேறுபாடின்றி)வேலை செய்ய சொல்லி, ஏஜெண்டுகள் பணம் சுரட்டுவதும் உண்டு.வரும் 5$ இல் 3 $ ஊதியமாக தந்து விட்டு 2$ தான் எடுத்து கொண்டு கணக்கில் வராமல் சம்பாதிப்பது உண்டு.காசோலை தர முடியாது. பணமாகத்தான் தரவேண்டும்.
குழந்தைகளை பார்த்துக்கொள்வதும் இப்படியே. மணிக்கு 2 -4 $ வரை. குழந்தைகள் மன நலம் படித்து அதற்கான சட்டப்படி லைசென்ஸ் வைத்திருந்தால் மணிக்கு $8 ஊதியம்.
நன்றி தேன் துளி. தகவல்களைக் கொட்டி விட்டீர்கள்..நன்றி
உருப்படியான விவாதத்துக்கு ஏற்ற தலைப்பு.
கூலி நியாயமானதா இல்லையா என்பது அது வழங்கப்படும் சூழலுக்கு ஏற்றவாறுதான் நிர்ணயிக்கப்படுகிறது. இன்றளவும் கிராமப்புறங்களில் பெருந்தனக்காரர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள் மிகக் குறைவான ஊதியத்துடன் விவாதத்திற்கே கொண்டு வர முடியாத அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.Mere exploitation of poverty.
நகர்ப்புறங்களின் நிலைமை தலைகீழாகவே உள்ளது. இருவரும் வேலைக்கு செல்வது கட்டாயமாகவுள்ள சூழலில் மிக அத்தியாவசியமான வேலைகளுக்காவது உதவிக்கு ஆள் தேவைப்படுவது, மத்திய தரக் குடும்பத்துக்குக் கூட தவிர்க்கமுடியாதது. அலுவலகங்களின் கடை நிலை ஊழியர்களுடன் வீட்டு வேலை செய்ய வருபவர்களை ஒத்து நோக்குவது சரியாக வராது என்பது என் கருத்து. அவர்களுக்கும் ஒரு ஊதிய வரைமுறை செய்யப்பட்டால் சந்தோஷப்படப் போவது ஊதியம் கொடுப்பவர்கள் தான், நிச்சயமாக வாங்குபவர்கள் அல்ல. ஏனெனில் வேலைக்கு வருபவர்களால் நிர்ணயிக்கப்படும் ஊதியம் எதிராளியின் அத்தியாவசியத்தைப் பொறுத்து சில நேரங்களில் சந்திர மண்டலத்துக்குக் கூட ஏறிவிடும்.Exploitation of dependability!!
ஊதிய நிர்ணயமும், முறைப்படுத்தப் படும் வேலை ஒழுங்குகளும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று, ஆனாலும் வரண் படுத்த முடியாத கனவு, நம் தலைமுறையில். நமது குழந்தைகளுக்காவது அது வாய்க்க நாம் முயற்சிக்கலாம் (அடுத்த தலைமுறையிலும் “வேலைக்கார” சாதி தொடர வழி வகுப்பதாக பின்னூட்டமிட தயாராகிவிட்டவர்களுக்கும் பதிலடி இருக்கிறது)
தாணு.
நன்றி தாணு..
//(அடுத்த தலைமுறையிலும்
“வேலைக்கார” சாதி தொடர வழி வகுப்பதாக பின்னூட்டமிட தயாராகிவிட்டவர்களுக்கும் பதிலடி இருக்கிறது)//
என்னை விட்டுவிடுங்கள்..நான் இதில் புதிதாகப் பின்னூட்டமிடுவதாக இல்லை.
நல்ல விவாதத்திற்கான தலைப்புதான். அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் குறித்து ஆராய வேண்டியதுதான். ஆனால் எனக்கு இதிலுள்ள சாதிய அம்சங்களே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீட்டிலுள்ளவர்கள் பயன்படுத்தும் கோப்பைகளில் / தட்டுகளில் அவர்களது பணியாளர்களுக்குத் தேநீரோ, உணவோ பரிமாறப்படுவதில்லை. அவர்களுக்கென்றுத் தனியாக நிர்ணயிக்கப் பட்டத் தரக்குறைவானப் பாத்திரங்களிலேயே இவை வழங்கப் படுகின்றன. அவர்கள் வீட்டின் முன்வாசல் வழியாக வரக்கூடாதாம், பின்புறம் வாயிலாகவே வீட்டிற்குள் நுழைய வேண்டுமாம். தீண்டாமையை இன்னும் வலுவாகப் பிடித்துக் கொண்டு அதனை (வெளியில் முடியாததால்) வீட்டிற்குள் கவனத்துடன் பின்பற்றுவதையே பெரும்பாலும் காண முடிகிறது. சாதி ஒழிந்துவிட்டது என்றக் கூற்றெல்லாம் பொய்யே.
மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் என்றால் சிறு வயதிலேயே வீட்டோடு வேலைக்கமரும் சிறுமிகள்தான். அவர்கள் சந்திக்கும் கொடுமைகளும் மனித உரிமை மீறல்களும் கணக்கிலடங்காதவை. குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவது சட்டப்படிக் குற்றம்தானே? இருந்தும் பலரை இந்நிலையில் காண நேரிட்டும் ஒன்றும் செய்ய இயலாதக் கையாலாகாதத் தன்மை, நமக்கு மிகுந்த விரக்தியை அளிக்கக் கூடியது.
VOW,
//சாதி ஒழிந்துவிட்டது என்றக் கூற்றெல்லாம் பொய்யே. //
மறுக்க முடியாத உண்மை.
//பலரை இந்நிலையில் காண நேரிட்டும் ஒன்றும் செய்ய இயலாதக் கையாலாகாதத் தன்மை, நமக்கு மிகுந்த விரக்தியை அளிக்கக் கூடியது.//
மறுக்க முடியாத உண்மை.
நன்றி..VOW.
//அதே ஒரு மணி நேரம் செலவழித்து நமது அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பெண்ணுக்கு நமது நிறுவனங்கள் வழங்கும் கூலியை நாம் நமது வீடுகளில் உதவுபவர்களுக்குக் கொடுக்க முன்வருகிறோமா?
//
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், atleast, ஓரளவு வசதி படைத்தவர்களாவது !!!
எங்கள் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வரும் பெண்மணியை எங்கள் வீட்டில் ஒருவராகத் தான் பார்க்கிறோம், முடிந்த அளவு உதவிகள் செய்கிறோம்.
பழகிய பிறகு, சாதியாவது, ரீதியாவது !!!!
உருப்படியான விவாதத்துக்கு ஏற்ற தலைப்பு கூட !!!
எ.அ.பாலா
நான் சென்னை செல்லும் பொழுது என் தாயிடம் 'சம்பளத்தை கூட்டிக் கொடுத்தால் வேலைக்கு வருபவள் நன்றாக வேலை செய்வாள்' என்று சொல்லுவேன். எங்கம்மா 'அவள் நன்றாக செய்யட்டும் நான் கூட கொடுக்கிறேன்' என்பாள்!
சிங்கப்பூரில் பக்கத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து வேலை செய்ய work permitல் பெண்கள் வருகிறார்கள். இரண்டு வருட contract. அவர்கள் வரும் நாடு மற்றும் வேலையில் முன் அனுபவத்தை பொறுத்து சம்பளம். இதை தவிர அரசாங்கத்திற்கு மாதம் ஒரு தொகை maid levy ஆக கொடுக்க வேண்டும். சமயத்தில் இந்த லெவி maidன் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் (உதாரணமாக ஒரு Indian maid ன் சராசரி சம்பளம் மாததிற்கு $260, லெவி $290)
என்னை பொறுத்தவரை இந்தியாவில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகும் சூழ்நிலையில் ஒரு நல்ல maid training institute ஆரம்பித்து அவர்களுக்கு சுத்தமாக வீட்டை வைத்துக் கொள்வது, குழந்தை பராமரிப்பு, போனில் பேசுவது, சமைப்பது எல்லாம் சொல்லிக் கொடுத்து நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்தலாம். இதனால் இரண்டு சாராருக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
இந்த idea வை யாராவது செயல்படுத்தினால் மறக்காமல் கம்பெனிக்கு என் பெயர் வைங்கப்பா!! :-)
சாதி ஒழிந்துவிட்டது என்ற கூற்றே பொய்மையானதுதான்.அதுவே தனி விவாதத்திற்குரியது.ஆனால் வேலைக்காரர்கள் என்று கூறப்படுபவர்கள் எல்லோருமே பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தைப் புகுத்தியது யாரோ? எல்லா இனத்தவரிலும் ஏழை என்றோர் சாதி உண்டு, அவர்கள்தான் வேலைக்கார சாதியின் மூதாதையோர். அந்தந்த சாதியினரின் பணக்காரக் குடும்பத்தினரிடம், அவர்களது சொந்தக்கார ஏழைகளே வேலைக்காரர்களாக இருப்பதைப் பார்த்ததில்லையா?``தூரத்து சொந்தம், உதவிக்கு அழைத்து வந்தேன்”என்ற போர்வையில் வேலைக்காரர்களை விடக் கேவலமாக நடத்தும் `உயரிய’ பண்புகளை சந்தித்ததில்லையா?
பிறப்பால் வரும் சாதிப் பிளவுகளை விட, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் வரும் பிரிவினை இன்னும் அதிகமென்பேன்.
அண்மையில் ஒரு திருமணத்துக்கு சென்றபோது நடந்தது. ஒரு முக்கிய வேலையின் இடையில் சென்றதால், வேலை நிமித்தம் அணிந்திருந்த சாதாரண உடையில் சென்றிருந்தோம், நானும் என் கணவரும். அங்கிருந்த பணக்கார சூழலுக்கு எங்கள் உடை அல்பமாகத் தோன்றியதால், வீடியோகிராபர் எங்களை தாவிச் சென்றதையும், எங்கள் அருகில் இருந்த நாற்காலியில் அமர சிலர் தயங்கியதையும், வெகுவாக ரசித்தேன். எங்கள் பணியிடை வர நாங்கள் மேற்கொண்ட சிரமத்தினை உணர்ந்த மாப்பிள்ளையின் தகப்பனார் ஓடிவந்து எங்களை உபசரித்தது கண்டு வீடியோ எங்களையே விடாமல் படமெடுத்தது தனிக்கதை!
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமனிடப்படாதவரை, சாதிகள் ஒழிவது கடினமே.
சிறார்களை வேலைக்கமர்த்தும் கொடுமை வருந்தவேண்டிய ஒன்றுதான். சிவகாசி போன்ற ஊர்களில் குடும்பக்கட்டுப்பாடு, சிறு குடும்பம் போன்றவை கடைப்பிடிக்கக் கூடாத ஒன்றாகப் போற்றப் படுகின்றன. குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குடும்ப வருமானத்துக்கு வளமானது, அங்குள்ளவர்களைப் பொறுத்தமட்டில்..
தாணு
எல்லா இனத்தவரிலும் பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களை கேவலமாக நடத்து உண்மைதான். நீங்கள் சொல்வது போல தூரத்து சொந்தம் என்று அழைத்து வந்து கேவலமாக நடத்துவதும், ஏதேனும் பொருள் காணாமல் போனால் முதலில் குற்றம் சாட்டப்படுவதும் நடக்கிறது. தொழிலில் ஏற்ற தாழ்வு இல்லை. மனிதர்களை மனிதர்களாக நடத்த வேண்டும் என்று சொல்ல வந்தால் (கடைசி வரி என் பதிவில்)எல்லா இனத்திலும் மேற்கோள் காட்டவில்லை என்று திசைமாறிப்போய்விட்டது. நன்றி தோழி தாணு.
எ.அ.பாலாவுக்கு நன்றி(மீனாவின் கண்களை மாற்றுங்களேன்.)
பாலா,
//பழகிய பிறகு, சாதியாவது, ரீதியாவது !!!!//
நீங்கள் சொல்வதுபோல் எளிதில்லை பாலா..நீங்கள் அப்படி இல்லை எனும்போது மகிழ்ச்சி அடையலாம்.
//உருப்படியான விவாதத்துக்கு ஏற்ற தலைப்பு கூட //
விவாதத்துக்கு ஏற்ற தலைப்பு என்று ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல எனக்கு பகீர் என்கிறது.. அதாவது நடைமுறைக்கு ஏற்றதில்லை என்பதைத்தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார்களோ என்று கவலை வருகிறது. ஒவ்வொருவர் வார்த்தைக்கும் 3 அல்லது 4 பொருள் இருக்கும் என்று பல பதிவுகளையும் மறுமொழிகளையும் பார்க்கும்போது அறிய முடிகிறது.
நன்றி ரம்யா,
அதில் தான் தலைமுறை இடைவெளி, பரந்த பார்வை, அடுத்தவர் நிலைக்கும் இடம் கொடுத்தல், தனது நிலையில் இருந்து இறங்கி வருதல் ஆகிய பல விஷயங்கள் அடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன். அம்மாக்களின் நிலையை நாம் ஆதரிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது(நான் அம்மா என்று சொன்னது ஜெயலலிதாவை அல்ல).
தேன் துளி அமெரிக்க விபரங்களைச் சொன்னார். நீங்கள் சிங்கப்பூர் நிலையை விளக்கியுள்ளீர்கள்.. நன்றி ரம்யா.
முதல் மழையில் மும்பையில் சிக்கிய அவர் இரண்டாவது மழைக்கு முன்னதாகப் புறப்பட்டு வந்து சேர்ந்து விட்டாரா?
தேன் துளியும் தாணுவும் இரண்டாவது சுற்று இப்பதிவுக்கு வந்தமைக்கு நன்றி.
தாணு,
// பிறப்பால் வரும் சாதிப் பிளவுகளை விட, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் வரும் பிரிவினை இன்னும் அதிகமென்பேன்.//
இது அடித்தட்டு மக்களுக்கு முற்றிலும் பொருந்தும். தேன் துளியின் ஒரு பதிவில் இருந்த மறுமொழி மாதிரி," இந்த வேறுபாடுகள் சமூகத்தின் உற்பத்தி முறைகளைச் சார்ந்தவை. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை இருக்கும் ஒரு சமூகத்தில் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமே நிலவும். அந்த சமூகத்தில் முதலாளிய கலாச்சாரக் கூறுகளை சிலர் தேடுகிறார்கள். கிடைக்காதபோது சமூக அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சேதாரம் இல்லாமல் மேலோட்டமான காரணத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். சொந்த சாதிக்குள்ளேயே உற்பத்தி முறை காரணமாக எழும் முரண்பாடுகளை முனை மழுங்கச் செய்வதற்கு சாதி, மதம் போன்ற விஷயங்களைக் கொம்பு சீவி விடுகிறார்கள். இவை எல்லாம் எப்படி உண்மையோ அதே அளவு உண்மை சாதீயம் சமூகத்தில் வேரோடி இருப்பதும்.
// அங்கிருந்த பணக்கார சூழலுக்கு எங்கள் உடை அல்பமாகத் தோன்றியதால், வீடியோகிராபர் எங்களை தாவிச் சென்றதையும், எங்கள் அருகில் இருந்த நாற்காலியில் அமர சிலர் தயங்கியதையும், வெகுவாக ரசித்தேன். எங்கள் பணியிடை வர நாங்கள் மேற்கொண்ட சிரமத்தினை உணர்ந்த மாப்பிள்ளையின் தகப்பனார் ஓடிவந்து எங்களை உபசரித்தது கண்டு வீடியோ எங்களையே விடாமல் படமெடுத்தது தனிக்கதை!//
இது தான் உலகம்.. இந்த அனுபவம் எனக்கும் நிறைய உண்டு. டி.வி., சினிமாவில் சில நிமிடம் முகம் காட்டும் சிலருக்கு கிடைக்கும் மரியாதை அவர்களைத் திரையில் அப்படிக் காட்டும் மூளைக்குக் கிடைப்பதில்லை. ரஜினி,கமல் ரேஞ்ச் என்ன – கே.பாலசந்தர் நிலை என்ன என்பதில் இது விளங்கும்.
// சிவகாசி போன்ற ஊர்களில் குடும்பக்கட்டுப்பாடு, சிறு குடும்பம் போன்றவை கடைப்பிடிக்கக் கூடாத ஒன்றாகப் போற்றப் படுகின்றன// இது போன்ற விஷயங்களை மருத்துவர்கள்தான் பேச வேண்டும் போல் இருக்கிறது..
// ``தூரத்து சொந்தம், உதவிக்கு அழைத்து வந்தேன்”என்ற போர்வையில் வேலைக்காரர்களை விடக் கேவலமாக நடத்தும் `உயரிய’ பண்புகளை சந்தித்ததில்லையா?//
ஏதோ ஒரு விதத்தில் (அது சாதியாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை) தன்னைவிடக் குறைந்தவர்கள் என்று தாங்கள் கருதுவோரை இந்தியச் சமூகம் பெரும்பாலும் இப்படித்தான் நடத்துகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
என்ன பிரச்னை என்றால் சாதியும் இதில் சேர்ந்து கொள்ளும்போது கொடுமை அல்லது வேதனை அல்லது அவமதிப்பு அதிகமாகிவிடுகிறது. நன்றி தாணு.. உங்கள் மறுமொழியால் பதிவு மகிழ்கிறது.
தேன் துளி,
//ஏதேனும் பொருள் காணாமல் போனால் முதலில் குற்றம் சாட்டப்படுவதும் நடக்கிறது.//
பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்கள் தங்கள் தேவைக்குப் பிறர் பொருட்களைத் திருடுவர் என்ற கருத்தாக்கத்தில் இருந்து அல்லது உளவியலில் இருந்து இது நடக்கிறது. பெரும்பாலும் மறதி, அல்லது குடும்பத்தில் ஒருவர் அல்லது வந்த விருந்தாளி காரணமாக நடக்கும். ஆனால் அடி உதைக்கு பயந்து வேலை செய்பவரே செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வதும் அத்துடன் அந்த இடத்தை விட்டு அகல்வதும் நடைமுறை.
ஆனால், சமீபத்தில் நடந்த குற்றச் செயல்களில் 30 சதவீதம் Domestic help (வேலைக்காரி, சமையல்காரி, டிரைவர், தோட்டக்காரர், காவல்காரர் போன்றோர்) கொடுத்த டிப்ஸின் காரணமாகவே நடந்திருப்பதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.(தகவலுக்காக மட்டுமே).
நன்றி தேன் துளி.
இன்னும் ஒரு விஷயம் தோன்றியது.. நம் தாய்/தந்தை generationக்கு நம் அளவு பொருளாதார சுதந்திரமோ, social netsஸொ இல்லாததை நாம் மறக்ககூடாது. என் தாயை பொறுத்த வரை ஒரு பெரிய joint familyஐ கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு. அதனால், வேலைக்காரியிடம் மட்டுமில்லாமல் எல்லாவற்றையுமே இழுத்து பிடிக்க வேண்டிய நிலை. பாலா சொல்வது போல் நம் generation இவர்களை மனிதாபிமானத்தோடும், பரந்த மனத்தோடும் பார்க்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என் sample set சிறியது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
தெருத்தொண்டன், கணவர் மும்பையை விட்டு கிளம்பிவிட்டார். நாளை காலை வீட்டுக்கு வருவார் (God Willing!). உங்க விசாரிப்புக்கு நன்றி!
எல்லாத் திக்குகளிலும் விவாதத்தை முடுக்க வேண்டிய தெ.தொண்டர், கு.க. என்றதும் அதை ஒரு துறை சார்ந்தவர்கள் விமர்சிப்பது நல்லது போன்று தோற்றத்துடன் நழுவி விட்டது ஏன்? குழந்தை தொழிலளர்களின் ஆரம்பமே
கணக்கற்றுப் பெறப்படும் மழலைகள் இல்லையா? பெற்ற குழந்தைகளின் உழைப்பில் தண்டச் சோறும் தண்ணியடிப்பதுமாகத் திரியும் தகப்பன்களே குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நச்சுப் பாம்புகள்.
இது வடமாநிலங்களில் இன்னும் அதிகம். World vision மாதிரியான அமைப்புகள் அத்தகைய குழந்தைகளை நம் போன்ற சராசரி நண்பர்களின் பண உதவி மூலம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறார்கள். இது போன்ற ராமர் அணில்தனமான உதவிகளிலாவது நம் தலைமுறையினர் பொறுப்பேற்கலாம்.
தாணு
நன்றி ரம்யா.
நன்றி தாணு.
Post a Comment
<< Home