Friday, August 26, 2005

தோப்பில் ஒரு நாடகம் நடக்குது..ஏலேலங்கிளியே..

தோப்பில் ஒரு நாடகம் நடக்குது..ஏலேலங்கிளியே..

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டுவிடும் போலத் தெரிகிறது. நாடாளுமன்றத்திலேயும் சட்டமன்றங்களிலேயும் பெண்களுக்கு 33 சதவீதம் இடத்தை ஒதுக்குங்கன்னா ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொண்ணா சொல்லுது. வீட்டுல ஒரு சாதாரண விஷயத்துக்குக் கூட முடிவெடுக்கற அதிகாரத்தைக் கொடுக்க மறுக்கற இந்த ஆம்பிளைங்களா இந்த சட்டத்தை நிறைவேற்ற விடப் போறாங்கன்னு வீட்டுல எல்லாம் சொன்னாங்க..ஆனாலும் நம்ம அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரும் சமூக நீதில ரொம்ப ரொம்ப அக்கறை கொண்டவர்களாச்சே..அவங்க வந்து பெண்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படறதுக்கு எதிராகவா இருப்பாங்கன்னு நினைச்சேன்ங்க.. ஆனா ஆளாளுக்கு ஒவ்வொரு கம்பை எடுத்துல்லா சுத்தறாங்க..

1996 ஆம் வருஷம் நாடாளுமன்றத்துக்கு இந்த மசோதா வந்துச்சு.. ஐக்கிய முன்னணி, பாஜக கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, இப்போ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி.. எல்லா அரசாங்கத்தையும் பார்த்தாச்சு.. எல்லாரும் பேசுவாங்க.. கருத்தொற்றுமைன்னு சொல்வாங்க.. அது வராது.. அப்படியே கிடப்பில் போட்டுடுவாங்க..நாம கொஞ்ச காலத்துக்கு டீக்கடை வாசல்ல நின்னு ஒரு டீயைக் குடிச்சுட்டு ஒரு "தம்"மைப் போட்டுட்டு அரிப்பு தீர பேசிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போயிடுவோம்..இப்போ சிலபேரு வலைப்பதிவு போட்டும் அரிக்கற இடத்துல சொறிஞ்சுக்கறாங்களாம், பக்கத்து வீட்டு படிச்ச தம்பி சொல்லுது.

2000 டிசம்பர் 26 ஆம் தேதி இதே மேட்டரைப் பத்தி நான் புலம்பி இருக்கேன்..

1996- 2005 கிட்டத்தட்ட 10 வருஷம் ஆகப்போகுது..
நினைச்சுப்பார்க்கறதுக்கு முன்னாடி படிச்சே பார்க்காம எத்தனை மசோதாவை நம்ம தலைவருங்க நிறைவேத்தி சட்டமாக்கறாங்க.
இந்த விஷயத்துல மட்டும் ஏன் இப்படி இருக்காங்க..கருடபுராணத்துல இதுக்கெல்லாம் தண்டனை இல்லையா?

அப்படி 33 சதவீத இடம் ஒதுக்கிட்டாலும் இவங்களுக்கு பதிலா இவங்க மனைவியோ துணைவியோ தானே அந்தத் தொகுதில நின்னு ஜெயிக்கப் போறாங்க..அப்புறம் ஏன் அதுக்குக் கூட விட மாட்டேங்கறாங்கன்னு பக்கத்து வீட்டு படிச்ச தம்பி கிட்ட போய்க் கேட்டேன்.. அது சொல்லிச்சு.." இவங்க இவங்களோட நிழலைக் கூட நம்ப மாட்டாங்க..அப்புறம்ல மனைவியை நம்பறது... வாக்களிக்கற மக்கள்கிட்ட தான் நடிக்கறாங்கன்னு பார்த்தா வீட்டுக்குள்ளேயே கூட நடிப்பாங்க போல.. இவங்க மட்டும் இல்ல..சாதாரணமாவே மனைவிதான் புருஷனை நம்பணும்..புருஷன் மனைவியை நம்பமாட்டான் " அப்படிங்களா?

ஆனா இந்த ஏமாற்று வேலையைப் பத்தி பொம்பளைங்க வேகமாப் பேசப் போறது எப்போ? எல்லா கட்சிலேர்ந்தும் பெண்கள் வெளியேறி பெண்களுக்கான கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கு வந்தாத்தான் இந்த மசோதா நிறைவேறும் போலிருக்கு. அட, அதுக்கு ரொம்ப காலம் ஆகுமேன்னு நீங்க முணுமுணுக்கறது எனக்குக் கேட்குதுங்க..அதுக்கு முன்னாடி மட்டும் இவங்க நிறைவேத்திடப் போறாங்களா என்ன?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At 1:25 PM, Blogger தாணு said...

பெண்களை weaker sex என்று விவாதங்களுக்காகப் பேசினாலும், உண்மையில்
அவர்களின் பலம் என்னவென்பதை உணர்ந்தவர்கள் ஆண்கள். அவ்வளவு சீக்கிரம் எங்கள் வர்க்கத்தை மேலெழும்ப விடுவார்களா? ஒரு வீட்டையே திறம்பட நிர்வாகிக்க பெண்கள் துணையின்றி ஒன்றும் இயலாத இவர்கள்
நாட்டைக் கொடுத்துப் பார்க்கட்டும், காணாமல் போய்விடுவார்கள்!! பயத்தின் அடிப்படயில்தானே இத்தனை சல்ஜாப்புகளும் தடைகளும்.
முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஞானத்தையும் நடைமுறைப் படுத்தல்களையும் புறம் தள்ளிவிட்டு அவரது ஆளுமையைப் பாருங்கள், எத்தனை வேஷ்டிகள் மண்ணில் புரளுகின்றன.
ஹாலில் அரசியல் அலசப்படும்போது, சமையலறையில் காய்கறிகள் அலசுவதோடு பெண்களின் கடமை உணர்வு முடிந்து போவதால் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் வேளை இன்னும் வரவில்லை.
ஆனந்தவிகடனின் இந்தவார தலையங்கமே பெண்கள் சமுதாய ஒட்டு மொத்த
பிரதிநிதியாக வெளிவந்துவிட்டது.

 
At 11:30 AM, Blogger ENNAR said...

அண்ணே திரு. தெருத்தொண்டன்
33 விழுக்காடு கொண்டு வந்தால் என்ன கொண்டு வராவிட்டால் என்ன நாம் என்ன செய்யமுடியும் பஞ்சாயத்து தேர்தலில் நின்று ஜெயிச்தற்கே பஞ்சராகியிருக் குன்னேன், தமிழ் நாட்டுல மனைவி பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப் பட்டாலும் பெயரளவிற்கு தான் மனைவி தலைவர் மற்றெல்லாம் கணவர்தான்.
மாவட்ட ஆட்சிதலைவர் முன்னே கணவர் தான் தான் தலைவர் என பல இடங்களில் முன் நிற்கின்றனர்.
மனைவி பாராளுமன்றத்துக்குப் போகையில் நல்ல கூஜாவை தூக்கிக்கொண்டு கணவர் போகமுடியுமா தொகு ராஜாவாயிருப்பவர் மனைவி கூஜவாயிருப்பானா? என்னண்ணே ஞாயம்

இது தேவையற்றது
என்னார்.

 
At 12:33 PM, Blogger தெருத்தொண்டன் said...

தாணு, நன்றி.

என்னார் : தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

 

Post a Comment

<< Home