Sunday, September 04, 2005

தங்கரின் ‘டங்’ ஸ்லிப்

தயாரிப்பாளர் தங்கர் பச்சான் அவர்களுக்கு,

வணக்கங்க..

உங்களை எப்படி விளிக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பம்ங்க. ஒளி ஓவியர்னா, இயக்குனர்னா, நடிகர்னா எப்படி விளிக்கணும்னு ரொம்ப யோசிச்சேன்ங்க. அப்புறம்தான் போனவாரம் முழுக்க சினிமா உலகத்தையே ஒரு கலக்கு கலக்கினீங்களே..அதுக்கு நீங்க தயாரிப்பாளர் ஆனதுதானே காரணம்னு புரிஞ்சு அப்படியே உங்களை இந்தக் கடிதத்துல விளிச்சு இருக்கேன். தப்புங்களா?

எனக்கு ஆரம்பத்துல உங்களை ரொம்பப் புடிச்சிருந்ததுங்க. வணிக மயமான சினிமா உலகத்துல நீங்க ரொம்பத் தமிழ் உணர்வோட இருந்தீங்க. சினிமாங்கற சூதாட்டத்துல நாம தாய்மொழியைப் பறிகொடுத்துடக் கூடாதேங்கற உங்களோட ஆதங்கம் சரின்னுதான் நான் நினைச்சேன்ங்க.

ஆனா நாம நினைக்கறதைச் சொல்றதுக்கு ஒரு வழிமுறை இருக்குது இல்லீங்களா? நீங்க பட்னு போட்டு உடைச்சுடறீங்க. அதுபோக நீங்க மட்டும்தான் புதிய மாற்றங்களுக்காக முயற்சி செய்யற மாதிரியும் உங்க சக படைப்பாளிகளும் முன்னோடிகளும் ஏற்கனவே இருக்கற சினிமா நீரோட்டத்துல கரைஞ்சு போனவங்க மாதிரியும் அடிக்கடி பேசறீங்க. சரி விடுங்க..அது உங்க சுதந்திரம்.. ஆனா உங்க சுதந்திரம் மத்தவங்களோட மூக்கு நுனி வரைக்கும்தான் இல்லீங்களா?

அதுதான் இப்போ பிரச்னை ஆயிடுச்சு.. ஒரு நடிகனும் நடிக்க வரமாட்டேங்கறான், அதனால நானே நடிக்கணும்னு முடிவு பண்ணினேன்னு சொல்லி நடிகர்கள் மேல கல்லெறிஞ்சிருக்கீங்க. ஒரு 'தலை சீவி விடற பொம்பளை' 600 ரூபாய்க்காக படப்பிடிப்பையே நிறுத்தறான்னு சினிமாவுல வேலை பார்க்கற தொழிலாளர்களைப் புழு மாதிரி துச்சமா மிதிச்சிருக்கீங்க.. பணத்துக்காக மட்டுமே நடிக்கற நடிகை விபச்சாரின்னு பெரிய அணுகுண்டையே எடுத்து நடிகைகள் மேல வீசியிருக்கீங்க..

இந்த மூணு விஷயமும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினன்னு சொல்றதில எந்தவிதமான மிகையும் இல்லீங்க. ஒருவேளை இப்படி எல்லாம் நீங்க பேசாம பத்திரிகையில தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டிருப்பாங்களோன்னு உங்க விழாவுக்கு வந்த நண்பர்கிட்டேயும் உங்க பேட்டியை வெளியிட்ட பத்திரிகை தொடர்பானவங்க கிட்டேயும் விசாரிச்சேன்ங்க. நீங்க பேசினது எல்லாத்துக்குமே டேப் ஆதாரம் இருக்குதாம்..அப்புறம்தான் சரி, நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு தப்புத் தப்பா பேசிட்டாருன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்ங்க..

ஒரு படத்துல நடிக்கறதும் நடிக்காததும் ஒரு நடிகனோட விருப்பம். அவங்க உழைப்புக்கேத்த கூலியாக அவங்க கேட்கறதை நீங்க கொடுத்தீங்கன்னா அவங்க நடிக்க சம்மதிச்சு உங்க கூட ஒப்பந்தம் போட்டுக்கப் போறாங்க.. சம்பளம், கதை ஒத்துவரலைன்னா என்னை விட்டுடுங்கன்னு சொல்லி விலகியிருப்பாங்க.. அவங்க சில பேரு நடிக்க சம்மதிக்காத படத்துல நீங்க நடிக்கறதும் நடிக்காததும் உங்க விருப்பம். அதுக்காக நாம நடிகர் மேல ஏன் சேறை வாரி வீசணும்?

உங்களுக்கு பல நடிகர்கள் மேல விமர்சனம் இருக்கலாம். உங்க மனக்குறைகள் நியாயமாகக் கூட இருக்கலாம். நீங்க விமர்சனம் பண்ற நடிகர்களோட – நடிகைகளோட எண்ணிக்கை அதிக பட்சம் போனா இருபது இருக்குமா? ஆனா தயாரிப்பாளர் கையில இருக்கற பணம் ஒரு திரைப்படமா உருமாறி வர்றதுக்கு எத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் தேவைப்படுது. யாரோ சிலரை மனசுல வைச்சுக்கிட்டு நீங்க போற வர்ற ஆளுங்களை எல்லாம் போட்டுத் தாக்கறது சரிதானுங்களா? அதனால, நடிகர்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு பொதுமைப்படுத்திப் பேசறது என்ன நியாயம்னு எனக்குப் புரியலீங்க.

நீங்க வாழற இந்த சமூகத்துல மத்தவங்களும் வாழறதுக்கு இடம் கொடுக்கணும் இல்லீங்களா? இந்த சமூகத்துல தனிமனித வழிபாடு உச்சத்துல இருக்கு..சினிமாவுல மட்டும் இல்லீங்க, எல்லாத் துறைகள்லயும் இருக்கு. சினிமாவுல அதிகமா இருக்கா அரசியல்ல அதிகமா இருக்கான்னு பட்டிமன்றம் வைக்கலாம். ஆனா நீங்க நடிகர்களைப் பத்தி மட்டுமே தான் "வாய்ஸ்" குடுக்கறீங்க. "கூலி நான் கொடுக்கறேன், இவன் வேலைக்கு வரமாட்டேன்ங்கறானே " ங்கற உங்க மனப்பான்மைக்கு என்ன பேருங்கறதை நல்லா யோசிச்சுப் பாருங்க..

அடுத்தது ‘தலை சீவி விடுற பொம்பளை’ விவகாரம். நீங்க பேசியிருக்கற வார்த்தைகள், தொனி இதெல்லாம் விவகாரமானதுதாங்க..எத்தனையோ தயாரிப்பாளர்கள் சினிமாத் தொழில்ல வேலை செய்யற தொழிலாளர்களுக்கு அவங்க செய்த வேலைக்கு கூலி கொடுக்காம இழுத்தடிக்கறாங்க அல்லது ஏமாத்தியிருக்காங்க.. இதையெல்லாம் பார்த்துத்தானே அவங்க ஓர் அமைப்பாகத் திரண்டாங்க. சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு சம்பள பாக்கின்னா படப்பிடிப்பை மட்டும் இல்ல படம் வெளியிடறதையே நிறுத்தற அளவு பலம் பெற்றாங்க..

ஒடுக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கற நீங்க இந்தத் தொழிலாளர்களுக்கும் ஆதரவாத்தானே குரல் கொடுக்கணும்? ஏன் எதிர்நிலையில் இருந்து பேசறீங்கன்னு புரியலீங்க..உங்களுக்குத் தலை சீவி விடற பொம்பளை கேவலமாகத் தெரியலாம்.. 600 ரூபாய் பிச்சைக் காசாகத் தெரியலாம்..ஆனா அவங்களுக்கு இதை வைச்சுத்தானேங்க வாழ்க்கை? உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் கொடுக்கற சம்பளத்தை வைச்சுத்தானேங்க அவங்க வீட்டுல அடுப்பெரியணும்? தமிழர் நலன் பத்திப் பேசற நீங்க மனிதாபிமானம் இல்லாம பேசலாமான்னு எனக்குள்ள கேட்டுக் கேட்டு மாய்ஞ்சு போயிட்டேன்ங்க..

அப்புறம் நீங்க ஒரு பத்திரிகைக்காக கொடுத்த பேட்டியில் காசுக்காக மட்டும் நடிக்கற நடிகைகள் விபச்சாரிகள்னு சொன்னீங்களாம். கூலி இல்லாம நடிகைகள் கலைச் சேவை பண்ணணும்ங்கறீங்களா? எத்தனையோ விஷயம் பேசற உங்களுக்கு “விபச்சாரம்”ங்கற வார்த்தையைப் பயன்படுத்தறதுல எந்தக் கூச்சமும் இல்லையா? ராஜராஜ சோழன் காலத்துலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நீங்க சொல்ற ‘விபச்சாரிகள்’ ஒரு சமூகத்துல இருந்து வர்றதுக்கு அந்தப் பெண்கள்தான் காரணமா? யாருடைய எந்தப் பசியைப் போக்கறதுக்கு அவங்க இந்தப் பாடு படறாங்கன்னு யோசிக்க மாட்டீங்களா?

மத்தவங்க இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா பரவாயில்லைங்க.. உங்களை மாதிரி சமூக மாற்றம் பத்திப் பேசறவங்களோட “டங்” ஸ்லிப் ஆயிடுச்சுன்னா எப்படா சிக்குவாருன்னு காத்திட்டு இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பிடி பிடிச்சுடுவாங்க. அதோட மட்டும் இல்லீங்க உங்களுக்குப் பின்னால இந்த மாதிரி குரல் கொடுக்க வர்றவங்களையும் இது பாதிக்கும்.

எப்படியோ ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்கறதே பெரிய விஷயம்தான். நீங்க கேட்டிருக்கீங்க. அதுவும் யார் முன்னால? தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு ரமணா படத்துல டயலாக் பேசுன கேப்டன் முன்னால மன்னிப்பு கேட்டிருக்கீங்க. இதன் மூலமா சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள பிரச்னை தீர்ந்து போகலாம். ஆனா உங்க கிட்ட இருக்கற பார்வை மாறணும்ங்கறது நான் இது தொடர்பா பேசிப் பார்த்த பலரோட கருத்துங்க..

இதைப் பத்தி நான் எங்க பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பி கிட்ட கேட்டுப் பார்த்தேன். “தமிழ் அரசியலை மன்னர்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா அல்லது மக்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா என்பதைப் பொறுத்தே அவர்களது வார்த்தைகளும் பேச்சும் இருக்கும். அதுவும் உணர்ச்சி வசப்பட்ட நிலைல ஒருத்தர் வாயில் இருந்து என்ன வருதோ அதுதான் அவர் மனசுல இருக்கற கருத்து.. மத்ததெல்லாம் வேஷம்..இதுல ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ யாருக்கு சேவை செய்யுதுன்னு தனி விளக்கம் வேற குடுக்கணுமா”ன்னு கேட்டுச்சு..எனக்கு ஒண்ணுமே புரியலீங்க..உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா?

அக்கறையுடன்,
தெருத்தொண்டன்.

நன்றி: தினமலர் செய்திமலர்
(திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் இலவச இணைப்பு.)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

At 8:00 AM, Blogger தெருத்தொண்டன் said...

தங்கர் பச்சான் நடிகர் சங்க வளாகத்திற்கு வந்து நடிகர் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட நாள் இரவில் எழுதியது. இன்று காலை செய்திமலர் வெளியான பிறகு பதிவாகப் போடுகிறேன்.இதற்கிடையில் பல வலைப் பதிவுகளில் இது குறித்த அனல் பறக்கும் விவதங்கள் நடந்து முடிந்தன(?) என்பதையும் அறிவேன்.
எதற்கும் யுனிகோடிலும் இருக்கட்டுமே என்று போட்டிருக்கிறேன்.

 
At 9:13 AM, Blogger dondu(#11168674346665545885) said...

"இதற்கிடையில் பல வலைப் பதிவுகளில் இது குறித்த அனல் பறக்கும் விவதங்கள் நடந்து முடிந்தன(?) என்பதையும் அறிவேன்."

அந்த விவாதங்களையும் உள்ளிருத்தி உங்கள் பதிவை இற்றைப் படுத்தி வெளியிட்டிருக்கலாமே. தங்கர் நடிகைகளைப் பற்றிப் பேசியதற்கு ஆதரவாக வந்த சப்பைக் கட்டுகளைப் பற்றிய உங்கள் நிலைப்பாட்டைகயும் கூறியிருக்கலாமே.

முக்கியமாக ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் விற்றது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 8:55 PM, Blogger தெருத்தொண்டன் said...

டோண்டு ராகவன்,
உறுதியான தீர்ப்பு வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.அதற்கு நான் யார்?க ருத்து சொல்வதற்கும் நீ யார் என்று கேட்டு விடாதீர்கள். நான் சாதாரணத் தொண்டன்.
அதனால் எனது பார்வையை மட்டும் முன்வைத்தேன்.

 
At 12:18 PM, Blogger வானம்பாடி said...

நல்ல கேள்விகள், தங்கருக்கு கேட்குமோ?

 
At 8:59 PM, Blogger தெருத்தொண்டன் said...

நன்றி சுதர்சன்..தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் அந்த இதழ் போகிறது. கேட்க வாய்ப்பு இருக்கிறது..

 
At 10:10 PM, Blogger aathirai said...

“தமிழ் அரசியலை மன்னர்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா அல்லது மக்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா என்பதைப் பொறுத்தே அவர்களது வார்த்தைகளும் பேச்சும் இருக்கும். அதுவும் உணர்ச்சி வசப்பட்ட நிலைல ஒருத்தர் வாயில் இருந்து என்ன வருதோ அதுதான் அவர் மனசுல இருக்கற கருத்து.. மத்ததெல்லாம் வேஷம்....

nandru sonneer.

innum ingu silar erigira kolliyil ennai vida thayaraga irukirargal endrum therigiradhu.

 
At 10:58 PM, Blogger தெருத்தொண்டன் said...

வருகைக்கு நன்றி ஆதிரை.

 
At 7:24 AM, Blogger குழலி / Kuzhali said...

//இதுல ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ யாருக்கு சேவை செய்யுதுன்னு
//
யாருக்கு சேவை செய்யுதுன்னு எனக்கு புரியலை

// தனி விளக்கம் வேற குடுக்கணுமா”ன்னு கேட்டுச்சு..
//
எனக்கு புரியவில்லை, கொஞ்சம் தனி விளக்கம் கொடுத்தால் எனக்கு புரியுமோ என்னமோ

//எனக்கு ஒண்ணுமே புரியலீங்க..உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா?
//
மேலே இருப்பதை படித்துவிட்டு எனக்கும் அப்படித்தான் இருந்தது, உங்களுக்கும் ஏதாவது புரிந்தா சொல்லுங்க,

விவாதம்,விதண்டாவாதம், பக்க வாதத்திற்கெல்லாம் வரவில்லை இதுல ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ யாருக்கு சேவை செய்யுதுன்னு தெரிஞ்சிக்கலாமேனு தான்

நன்றி

 
At 10:36 PM, Blogger தெருத்தொண்டன் said...

வருகைக்கு நன்றி குழலி..அந்தப் பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பியோட பார்வையில் தமிழ் தேசிய அரசியலைத் தங்கர் மக்கள் பார்வையில் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதும் பெண்களுக்கு எதிரான பார்வை உள்ளவர்களுக்கே அவரது சேவை பயன்படுகிறது என்பதும் தம்பியின் கருத்தாக எனக்குத் தோன்றுகிறது.

//விவாதம்,விதண்டாவாதம், பக்க வாதத்திற்கெல்லாம் வரவில்லை //
ஏன் குழலி இவ்வளவு பீடிகை எல்லாம்? என் கருத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கும் மற்றவர்கள் கருத்தை நான் அறிந்து கொள்வதற்குமான தளமாகவே நான் வலைப்பதிவைப் பார்க்கிறேன். உங்கள் இணைபிரியா நண்பர்களில் ஒருவருக்கு நான் மேலே சொல்லியிருக்கும் பதிலும் அதுதான்.. எனது கருத்துதான் சிறந்தது என்று நிறுவ முயல்வதில்லை என்பது உண்மைதான்.. ஆனால் நீங்கள் வாதத்திற்கு வரவில்லை என்று சொல்வதில் உள்குத்து ஏதேனும் இருக்குதா புரியவில்லை..

 

Post a Comment

<< Home