Tuesday, January 17, 2006

எஸ்ரா மீது கல் எறிய அரிய வாய்ப்பு

எஸ்ரா மீது கல் எறிய அரிய வாய்ப்பு!

நழுவ விடாதீர்கள்!!

சண்டக் கோழி விவகாரம் புதிய வடிவங்களை எடுத்து வருகிறது. தேவநேயப் பாவாணர் அரங்கில் கடந்த 16.01.2006 மாலை நடந்த கூட்டத்தைப் பற்றி ரஜினி ராம்கி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்தப் பதிவின் பின்னூட்டங்கள் நமது தமிழ் இலக்கியச் சூழலை நினைவுபடுத்துகின்றன. இலக்கியத்துக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு பெருமையைக் கொடுக்கலாம் என்று நமது சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து விடப்போகிறார்கள்.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது. குட்டி ரேவதியின் கவிதைத் தொகுதிக்கு எதிராக ஆண் ஆதிக்க சிந்தனையாளர்களின் வக்கிரமான வெளிப்பாடே சண்டக்கோழியில் இடம் பெற்ற வசனம் என்பதே எனது கருத்தும்.

சர்ச்சைக்குரிய இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் குட்டி ரேவதி என்ற பெயர் பொதுவாக இடம் பெற்றது என்ற எஸ்ரா, லிங்குசாமி வாதத்தை ஏற்பதற்கில்லை. அதேசமயம் நான் எழுதவில்லை என்று எஸ்ரா பகிரங்கமாகச் சொன்னதே எனக்கு வியப்பளிக்கிறது. நாம் எழுதாவிட்டாலும், வசனத்திற்கு நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். லிங்குசாமிக்கும் எஸ்ராவிற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது போலும்.

ஒரு படத்துக்கு வசனம் எழுதுவதற்கு கூலி பெற்ற பிறகு அதில் இடம் பெறும் ஒவ்வொரு வசனத்தையும் இது நான் எழுதியது, இது நான் எழுதாதது, இது நான் அற்புதமாக எழுதியதைத் தூக்கிவிட்டு யாரோ அற்பமாக எழுதியது என்று கூறுவது கூட்டுப் பொறுப்புடன் சிலர் இணைந்து செய்யும் எந்த பணியிலும் முறையல்ல என்றே கருதுகிறேன். இப்படி இருக்க அந்த வசனத்தை நான் எழுதவில்லை என்ற முழக்கத்துடன் லிங்குசாமிக்கும் தயாரிப்பாளருக்கும் எதிரான போராட்டத்தில் உன்னையும் இணைத்துக் கொள் என்று எஸ்ராவுக்கு அறைகூவல் விடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. நமது பணியிடங்களில் நேர்ந்துவிடும் ஒரு தவறை எதிர்த்து நீதிமன்றத்திற்கு அழைத்தால் நம்மில் எத்தனை பேர் அதற்குத் தயார் என்று ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி எஸ்ரா பேச முடியாது. ஏனெனில் அவருக்கு அடுத்த சினிமா வாய்ப்பு வேண்டும். தான் ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் செய்வதெல்லாம் சமரசம் என்று ஜேகேத்தனமாக பேசிக் கொண்டிருக்க முடியாது. யார் சமரசம் செய்து கொள்ளவில்லை? சமரசம் என்ற சொல்லே ஒப்பீட்டளவிலானது என்றே கருதுகிறேன். தனது கலை மற்றும் இலக்கிய அறிவை முதலீடாகக் கொண்டு சினிமா மற்றும் வெகுசன ஊடகச் சந்தையில் போட்டியிடத் தீர்மானித்த பிறகு அவர் அந்த விதிகளின் படிதானே செயல்பட முடியும்?

நாளிதழ் ஒன்றுக்கு தினம்தோறும் நன்றி கூறி வலை பதிக்கும் நண்பர்கள் நம்மில் இருக்கிறார்கள். வெளிச்சம் மகிழ்ச்சி தருகிறது அவர்களுக்கு. சிலர் அத்துடன் நின்றுவிடலாம். வேறு சிலர் வெளிச்சம் நோக்கி ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளாகலாம்..

ஊடகங்களில் பணிபுரியும் சில நண்பர்களுக்கு ஞானத்தந்தையாக சிலர் இருக்கிறார்கள். இவர்களது சொந்த வாழ்க்கையில் இவர்கள் செய்யும் சமரசங்களுக்கு எல்லையே கிடையாது. ஆனால் பொதுப் பிரச்னைகளில் இவர்களது சத்திய ஆவேசம் நம்மை மயிர்க் கூச்செறியச் செய்யும்.

இப்படிப்பட்டவர்களே குட்டி ரேவதி போன்றோரைத் தீயில் இட்டுப் பொசுக்க வேண்டும் என்று முரசு கொட்டியவர்கள். "காமாலைக் கண் கொண்டு பார்த்துவிட்டு" உலகம் மஞ்சளாகவே இருக்கிறது என்று முழங்குபவர்கள்.. தனக்கு ஏற்பட்ட அஜீரணக் கோளாறுக்குக் கூட யாரையாவது குற்றம் சொல்லத் தெரிந்தவர்கள்.. எனக்குத் தெரிந்து இந்த வரிசையில் நிச்சயம் எஸ்ராமகிருஷ்ணன் இல்லை. இந்த வரிசையில் இருப்பவர்களை நான் பட்டியலிட விரும்பவில்லை. அது விவாதத்தை வேறு தேவையில்லாத தளத்திற்கு இட்டுச் செல்லும்.

எந்த முகாமில் காரியம் ஆக வேண்டுமோ அந்த முகாமின் அதிகாரம் மிக்கவரைத் திடீரென அருவருக்கத்தக்க அளவில் பாராட்டும் அறிவு வறுமை இங்கே பலரிடம் இருக்கிறது. இதில் எஸ்ராவை மட்டும் ரஜினி சார் என்று எழுதியதற்கு ஏன் வசை பாடுகிறோம்? இன்று உரிமை பேசும் என் மரியாதைக்குரிய எழுத்தாளர் பிழைப்புக்காக விகடனிலும் குமுதத்திலும் பெண்ணுரிமை தேடித் திரிந்த காலம் யாருக்கும் தெரியாதா என்ன?

முறைகேடான வழியில் சம்பாதித்த பணம் வைத்திருக்கும் பலரிடம் இந்த அறிவுஜீவிகள் (திருமா மன்னிக்கவும், உங்கள் பங்களிப்பான மூளைவீங்கி என்ற சொல்லை நான் பயன்படுத்த விரும்பவில்லை) செய்து கொள்ளும் சமரசங்கள் ஊரறிந்த ரகசியம்.. கவிஞர் இன்குலாப் போன்ற சில விதிவிலக்குகள் இவர்களில் உண்டு. அந்த விதிவிலக்கான சிலர் மட்டுமே போற்றுதலுக்குரிய சொந்த வாழ்க்கையைக் கொண்டவர்கள். மற்றவர்களின் உணர்ச்சிகரமான பேச்சில் மெய்சிலிர்ப்பவர்களைப் பார்த்து வருந்துவதைத்
தவிர வேறென்ன செய்ய முடியும்?


பணிபுரியும் அலுவலகத்திலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பொறுக்கிகள் பலரிடமும் ஏராளமான பல்லிளிப்புகளையும் சமரசங்களையும் செய்து கொள்ளும் நாம் எஸ்.ராமகிருஷ்ணன் செய்யும் சமரசங்களைக் கேள்வி கேட்கிறோம். வாழ்க நமது சுய ஆய்வுகள்!

உயிர்மை விழாவில் பெண்கவிஞர்களுக்கு ஆதரவாக பிரபஞ்சன் வெளிநடப்பு செய்தாராம்.. எப்போது செய்தார்? குட்டி ரேவதியும் மாலதி மைத்ரியும் மற்ற தோழியரும் குரல் கொடுத்து வெளியேறியவுடன் அவரும் அவரது கருத்தைப் பதிவு செய்து வெளியேறினாரா? அவர் பெற இருந்த கு. அழகிரிசாமியின் கடிதங்கள் நூலைப் பெற்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அதன் பின் வெளியேறினாரா? உயிர்மை வெளியிட்ட 10 நூல்களின் ஆசிரியர்களில் பிரபஞ்சன் பெற்றுக் கொண்ட நூலின் ஆசிரியர் மட்டும் இன்று நம்மிடையே இல்லை. அவர் இருந்து அழைத்திருந்தால் பிரபஞ்சன் வெளியேறி இருப்பாரா என்பது சந்தேகமே என்று வாதிப்பவர்களுக்கு என்ன பதில்?

சினிமாவின் பெண்கள் மீதான வன்முறை என்பதற்காக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் நான் மதிக்கும் பலர் பேசியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை எஸ்.ராமகிருஷ்ணன் சினிமாவுக்கு வசனம் எழுதப் போன பிறகுதான் தொடங்கியது என்று அந்தக் கூட்டத்தின் பேச்சு மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி. அதற்கு முன் சினிமாக்கள் பெண்களை உயர்த்தின என்று கொள்வோமாக!

சண்டக்கோழி விவகாரத்தில் எனது சார்பு குட்டி ரேவதி பக்கம்தான்..குட்டி ரேவதி பொதுப்பெயர் என்று கொள்ள முடியவில்லை. அது சில சில்லுண்டிகளின் (ரஜினிராம்கி மன்னிக்கவும்) அற்பத்தனமான வக்கிரத்தின் வெளிப்பாடு. தனது கலை மற்றும் இலக்கிய அறிவை முதலீடாகக் கொண்டு சினிமாவில் பணிபுரிய முடிவு செய்துவிட்ட எஸ்ரா வால் இதற்கு மேல் பேசுவதும் பகிரங்கமாக வெளிவருவதும் சாத்தியம் என்று தோன்றவில்லை. நாம் கணினி வல்லுநர்களாக, பேராசிரியர்களாக மற்றும் பல துறைகளில் பணிபுரிந்து பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டு பத்திரிகைகள், சினிமாக்கள், அரசியல்வாதிகள் குறித்து புரட்சிகரமான கருத்து மழை பொழிவோம்! வாருங்கள்..

இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு பதிப்பகம் எதுவும் இல்லை என்று நம்புவோமாக!

உங்களில் எவனொருவன் தூயவனோ அவன் முதலில் கல்லெறியுங்கள் என்ற இயேசுவின் வாசகங்கள் நமக்கு மறந்து போகட்டும்!

"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்"
என்ற திரைப்படப் பாடலை நாம் கேட்டதே இல்லை.

குறுகிய கால நினைவு மறதி சஞ்சய் ராமசாமியை மட்டுமல்ல அனைவரையும் ஆட்கொள்ளட்டும்..

வாருங்கள்..அரிய வாய்ப்பு..இன்னொரு முறை கிடைக்குமா கிடைக்காதா தெரியவில்லை..பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

பெண்களுக்கு எதிரான இன்றைய அனைத்து சமூக அவலங்களுக்கும் எஸ்ராமகிருஷ்ணன் வசனம் தான் காரணம்..

எறியுங்கள் கல்லை!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

30 Comments:

At 1:46 PM, Blogger ஜோ/Joe said...

"பெண்களுக்கு எதிரான இன்றைய அனைத்து சமூக அவலங்களுக்கும் எஸ்ராமகிருஷ்ணன் வசனம் தான் காரணம்" என்பது எவ்வளவு அபத்தமோ அது போல ,அந்த வசனம் குட்டி ரேவதியை குறிக்கவில்லை என்று வாதிடுவது "தூங்குறவன எழுப்பலாம் .ஆனா தூங்குற மாதிரி நடிக்குறவன எழுப்ப முடியாது" என்பதை நினைவு படுத்துகிறது.

 
At 2:12 PM, Blogger ஜெ. ராம்கி said...

//இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு பதிப்பகம் எதுவும் இல்லை என்று நம்புவோமாக!

:-) கால் சுடுகிறது!

 
At 6:56 PM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

தெருத்தொண்டன்,
இந்த விவகாரத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் அய்யோக்கியத்தனத்தை நியாயப்படுத்த முடியாமலும், அதே சமயம் அவரை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஒரு குழப்ப மனநிலையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள். இந்த இரண்டுங்கெட்டான் நிலையிலிருந்து எழுதிய பதிவுக்கு பதில் சும்மாவே இருந்திருக்கலாம். இதற்கு எஸ்ராவின் பக்கத்தில் நின்றுக்கொண்டு கல்லெறியும் ரஜனி ராம்கியின் தெளிவே பரவாயில்லை.

 
At 7:28 PM, Blogger தெருத்தொண்டன் said...

மு.சுந்தரமூர்த்தி:

ஒரு விவகாரத்தில் ஏதேனும் ஒரு அணி செய்யும் அனைத்தையும் ஆதரிப்பதுதான் தெளிவு என்று நீங்கள் கருதினால் அந்தத் தெளிவு என்னிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு நிகழ்வை - ஒரு பிரச்னையை-பல பக்கங்களில் இருந்து பார்க்க விரும்புகிறேன். ஏதேனும் ஒரு பக்கத்தைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

எஸ்ராவை நியாயப்படுத்தவோ விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாறவோ எனக்கு எந்த அவசியமும் இல்லை.

ஒவ்வொரு விஷயத்திலும் அதன் பின்னால் இருக்கும் நுண் அரசியல் குறித்துப் பேசும் பல நண்பர்கள் சில விஷயங்களில் பாராமுகமாக இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

எஸ்.ராமகிருஷ்ணன் சினிமா என்ற ஆட்டம் ஆடப் போனால் அந்த ஆட்டத்தின் விதிகளைத் தான் பின்பற்ற முடியும் என்பதே என் கருத்து.மாறாக சினிமாவை அவர் புரட்டி எடுத்து விடுவார் என்ற பாமரத்தனமான நம்பிக்கை எனக்குத் துளியும் இருந்ததில்லை. புதுமைப்பித்தனையும் பாரதிதாசனையும் சவைத்துத் துப்பிய துறை சினிமா. அந்த விளையாட்டின் விதிகளை ஆடப் போகிறவர்கள் புரிந்து கொள்வார்கள்..

ஆனால் எஸ்ராவுக்கு எதிராக அனல் கக்கிய பெருமக்களில் இன்குலாப், பா.செ., அரசு போன்ற சிலரைத் தவிர வேறு சிலரின் நோக்கம் என்ன என்பதைச் சுட்டிக் காட்டவே முயன்றேன்.

பதிவு போடாமல் சும்மா இருப்பது சுகமான சோம்பல்தான். பெரும்பாலும் அதைத் தானே செய்கிறேன்?

இன்று எஸ்ராவுக்கு எதிராக நிற்கும் எத்தனைபேர் முலைகள் கவிதைத் தொகுதி வரும்போது குட்டி ரேவதிக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.

 
At 7:31 PM, Blogger தெருத்தொண்டன் said...

ஜோ: நீங்கள் கூறுவது உண்மை.

ரஜினிராம்கி: வம்பு:-))

 
At 8:42 PM, Blogger தாணு said...

எஸ்ரா மீது கல்லெறியச் சொல்லியதைப் பார்த்து- எஸ்ரா சற்குணம் பற்றி தெருத்தொண்டனின் திருவிளையாடல் எதுவோ ஆரம்பிக்கிறது என்று நினைத்து எட்டிப் பார்த்தேன், ஏமாந்தேன். ஆண் சண்டைச்சேவல்கள் ஏதோ ஒரு வகையில் பெண் ஏய்ப்பை மையமாக வைத்து விவாதிக்கும் விவாதமேடையில் பங்கேற்பது வேஸ்ட் என்று நழுவி ஓடுகிறேன்.

 
At 10:12 PM, Blogger நியோ / neo said...

>> ஒவ்வொரு விஷயத்திலும் அதன் பின்னால் இருக்கும் நுண் அரசியல் குறித்துப் பேசும் பல நண்பர்கள் சில விஷயங்களில் பாராமுகமாக இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. >>

குஷ்பூ - சுகாசினி விவகாரத்தில் இந்தக் கருத்தை முன்வைத்தவர்களையும் 'ஆணாதிக்கவாதிகள்' என்று சுண்ணாம்பு அடித்தார்களே சில 'மூளை வீங்கிகள்'? அப்போது இதை நீங்கள் சுட்டிக் காட்டியதை எனக்கு படிக்கத் தருகிறீர்களா?

தங்கமணி அவர்களின் அப்போதைய பதிவில் நானும் வேறு சிலரும் (சுந்தரமூர்த்தி அவர்கள் உட்பட) இந்த 'நுண் அரசியல்' குறித்துப் பேசினோம் - ஆனால் அப்போது Rightwing puritans திடீரென்று leftwing liberalism வந்து சாமியாடியபோது உங்களைப் போன்றவர்கள் இந்த வார்த்தையையாவது பயன்படுத்தினீர்களா?

'மேட்டுக்குடியினர்' அல்லாத சில பெண் வலைப்பதிவாளரும் கூட இந்த 'நுண் அரசியலை' புரிந்து கொள்ளாமல் பேசிய வேடிக்கைதான் அப்போதும் நிகழ்ந்தது.

'குட்டி ரேவதியின்' இலக்கியத்தரம் பற்றியெல்லாம் முழ நீள விசாரிப்புகள் இப்போது நடப்பதுவும், குஷ்பாம்பிகை/ சுகாசினி அய்யங்காரின் நோக்கங்கள் பற்றிப் பேசினாலே தூக்குத் தண்டனை என்று மிரட்டப்பட்டுகொண்டிருந்த அந்த விவாதத்தையும் ஒப்பிடுகையில் - வறட்டு அறிவுஜீவிகளால் ஒருபோதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென்கிற துணிபு மேலும் வலுப்படுகிறது.

மேலும் தூய கலகவாதிகள் எத்தனை காரட் தங்கமென்றாலும், கூர்த்த அரசியற்-சமூக Strategy என்கிற 'செம்பு' கலக்காவிட்டால் 'அணிகலனாய்' மாறாதென்பதும் நிதர்சனம்.

'இவாள்கள்' இன்னும் எத்தனை உருவத்தில் வந்தாலும் - மண்கவ்வச் செய்யும் தமிழ்மண்.

 
At 11:00 PM, Blogger ஜெ. ராம்கி said...

//எஸ்ராவின் பக்கத்தில் நின்றுக்கொண்டு கல்லெறியும் ரஜனி ராம்கியின் தெளிவே பரவாயில்லை.

பக்கத்தில் நின்று கொண்டு கல்லெறிந்தேனா? வரவர எனக்கு தமிழ் படிக்கவும் வரமாட்டேங்குது!

நான் சில்லுண்டி என்பது உண்மைதான். அதுக்காக எஸ். ராவை பார்த்தும் விசிலடிப்பேன்னு முடிவே பண்ணிட்டீங்களா ஸார்?! சுஜாதா மாதிரியே எஸ். ராமகிருஷ்ணனும் சுயபுராண நாயகன்தான். அதுக்காக அவரது படைப்பையெல்லாம் விமர்சிக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்பது அடியேனின் அபிப்பிராயம். இந்த சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்துக்கொண்டிந்தோம் என்று எளக்கியவாதிகள் நினைத்தால்... தராளமாக பண்ணிடலாம்!

 
At 3:54 AM, Blogger நியோ / neo said...

>> இன்று எஸ்ராவுக்கு எதிராக நிற்கும் எத்தனைபேர் முலைகள் கவிதைத் தொகுதி வரும்போது குட்டி ரேவதிக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். >>

இதே போல் (ஞாநி, மார்க்ஸ் போன்றவர்கள் தவிர) குஷ்பூ-சுகாசினி விவகாரத்தில் பெரியாரியத்தைத் திடீரென்று கண்டுபிடித்த போது - திருமணம் அதுவும் வைதீக முறைப்படி திருமணம் செய்தவர்கள், இந்திய தேசியத்தை கண்மூடித்தனமான அதன் பார்ப்பனீய வடிவில் ஆத்ரிப்பவர்கள், பக்த சிரோன்மணிகள் - போன்றோரெல்லாம் திடீரென்று out of context Quoting of Periyar செய்கிறார்கள், ஒரு உள்நோக்கத்தோடு - என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது 'ராம்கி'யாக வந்த்த நீங்கள், தங்கமணியின் பதிவில் - அந்த மாதிரியாகத்தான் கேட்பார்கள் என்று 'கோல்' அடித்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

உங்கள் தோழியர் பத்மா அரவிந்த் 'அடித்தட்டு சேரிப் பெண்களின் குழந்தைகள் - பல ஆண்களுக்கு பிறந்திருப்பதை காண முடிந்தது - என் ஆராய்ச்சி மாண்ணவ வாழ்வில்' என்று சந்தடி சாக்கில் இஷ்டத்துக்க்குப் 'வுட்டு தாக்கியதை' கண்டிக்கிற நேர்மை உங்களுக்கு இருந்ததா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

குஷ்பூ தேஎர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக நிறுத்தப்படக் கூடுமென்பதால் திமுக 'குளிர்காய்ந்தது'' என்றெல்லாம் "உள் குத்து" பேசிய நீங்கள் இப்போ ஈப்படிச் சொல்கிறீர்கள்.

இடதுசாரி ஏந்தல்'பிரளயன்' அன்பே சிவத்தில் பணியாற்றியது போல "திரை ஊடகத்தில்" உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக - நீங்களும் உங்கள் நண்பர் எஸ்.ராவுக்காக 'Spin Doctoring' செய்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் - அதை எப்படி எதிர்கொள்வீர்கள்??

 
At 9:13 AM, Blogger தெருத்தொண்டன் said...

நியோ:
உங்கள் பார்வையில் எனது பதிவையும் என்னையும் விமர்சனம் செய்தமைக்கு மிக்க நன்றி.

அவரவர் சார்ந்து நிற்கும் அல்லது சரி என நினைக்கும் குழுவின் அரசியலைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.நீங்கள் குறிப்பிடும் தங்கமணியின் பதிவில் நான் ராம்கி என்ற பெயரில் எழுப்பிய கேள்வியைத்தான் நான் மீண்டும் முன்வைக்கிறேன்.

இரு கூறாகப் பிரிந்து கிடக்கும் ஒரு சமூகத்தில் (அது எப்படிப் பிரிந்து கிடக்கிறது என்ற பார்வையில் நாம் வேறுபடுகிறோம்) அமைப்பு சாராத ஜனநாயகவாதிகளுக்கு - பிரச்னையின் அடிப்படையில் ஆதரவு தரும் சக்திகளுக்கு- ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பதே அது. நான் இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள்..இதில் எனக்கு வியப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்த இயக்கங்களும் சமூக அளவில் இப்படித்தான் செயல்படுகின்றன. நம்மோடு இல்லை என்றால் அவன் எதிரிதான் என்பதே நடைமுறை. இதில் வலதுசாரி தூயவர்கள், இடதுசாரி தாராளவாதிகள், இன்ன பிறருக்குள் எந்தவித வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த அடிப்படையே நம்முள் இருக்கும் வேறுபாடு என்னும்போது அதை அப்பொழுது செய்தாயா, இதை இப்போது செய்தாயா என்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். முழுநேரமும் கணினியுடன் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.கிடைக்கும் நேரத்தில் படிக்கிறேன், வலை பதிக்கிறேன் என்பதே எனது நேர்மையான பதில். ஆனால் அதைப் புரிந்து கொள்ள மறுத்துத் தான் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள்.

//'இவாள்கள்' இன்னும் எத்தனை உருவத்தில் வந்தாலும் - மண்கவ்வச் செய்யும் தமிழ்மண்// மகிழ்ச்சி. எனது விருப்பமும் அதுவே.

//இடதுசாரி ஏந்தல்'பிரளயன்' அன்பே சிவத்தில் பணியாற்றியது போல "திரை ஊடகத்தில்" உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக - நீங்களும் உங்கள் நண்பர் எஸ்.ராவுக்காக 'Spin Doctoring' செய்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் - அதை எப்படி எதிர்கொள்வீர்கள்??//
நான் ஏற்கனவே அதன் சிறிய வடிவத்தில் பணிபுரிந்து வருகிறேன். அதற்காக எஸ்ராவுக்கு பரிந்து பேசவில்லை.

//உங்கள் நண்பர் எஸ்.ராவுக்காக//
அவருடன் எனக்கு பரிச்சயம் இல்லை. அவரது விகடன் பத்திகள் சில தவிர வேறெதையும் நான் படித்ததும் இல்லை. அவர் வசனம் எழுதிய பாபாவை நான் பார்க்கவே இல்லை. அவரிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

மனைவி, துணைவி மற்றும் பலருடன் இருப்பவர்கள் கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு பாலர்க்கும் பொது தான் என்று பேசுவது எப்படி முரணோ,அப்படித்தான் வைதீக முறைப்படி திருமணம் செய்து கொண்டவன் பெரியாரை மேற்கோள் காட்டுவதும் என்பது சரியா?

 
At 9:36 AM, Blogger rajkumar said...

மிகவும் நியாயமான முறையில் எழுதப்பட்ட கட்டுரை.இருதரப்பு நியாயங்களையும் கேட்க வேண்டும் என்று பொதுவாக கூறுவார்கள். நீங்கள் இருதரப்பு அநியாயத்தையும் கூறியிருக்கிறீர்கள்.இது குழப்பமான நிலையாக சிலருக்கு படுகிறது.

இந்த விவகாரத்தில் ஜெயலலிதா-சங்கராச்சாரியார் விவகாரம் போல வெளிவராத உண்மைகள் பல இருக்கிறது. அதை விவாதிப்பதற்கான நேர்மை இருதரப்பினருக்குமே இல்லை.

 
At 10:43 AM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

தெருத்தொண்டன்,
முதலில் உங்கள் பதிவின் தலைப்பே உங்கள் சார்பை வெளிப்படுத்திவிடுகிற மாதிரி தோன்றி தொடர்ந்து முதல் பத்தியில் ரஜனி ராம்கியின் பதிவு, அதன் பின்னூட்டங்களைப் பற்றிய குறிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பிறகு எழுதிய
"ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது..." என்று கொட்டை எழுத்தில் ஆரம்பித்து "... கூட்டுப் பொறுப்புடன் சிலர் இணைந்து செய்யும் எந்த பணியிலும் முறையல்ல என்றே கருதுகிறேன்." என்று வண்ண எழுத்துக்களுடன் முடியும் வரை ராமகிருஷ்ணனின் அய்யோக்கியத்தனத்தை தோலுரிப்பதைக் காணமுடிந்தது.

அதற்கு பிறகு எழுதியதைப் படித்தால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் (victim) குட்டி ரேவதியா ராமகிருஷ்ணனா என்ற மயக்கம் ஏற்பட்டது போலுள்ளது.

1. படத்தின் முதன்மை வசனகர்த்தா என்ற அளவில் குறிப்பிட்ட வசனத்தையும் ராமகிருஷ்ணனே எழுதியிருக்கலாம். இந்த பகுதியையும், இன்னம் சில சிறுபகுதிகளையும், யாராவது துணை வசனகர்த்தா எழுதி, அது ராமகிருஷ்ணனின் பார்வைக்கும் வந்திருக்கலாம். துணை வசனகர்த்தா ராமகிருஷ்ணனை ஓரங்கட்டி இயக்குநரிடம் கொடுத்திருக்கலாம். அல்லது இயக்குனரே, நடிகர்கள் என்று யாரோ கூட இதை எழுதி சேர்த்திருக்கலாம். ஆகையால் இங்கு ராமகிருஷ்ணனுக்கு சந்தேகத்தின் பலனை அளிக்கலாம்.

2. படமெடுத்த பிறகு, வசனகர்த்தா என்ற முறையில் தணிக்கைக்கு அனுப்பும் முன்னும், தணிக்கை செய்யப்பட்டு வந்த பின்னும் என்று குறைந்தபட்சம் இரண்டுமுறையாவது படத்தி முன்னோட்டத்தினைப் (premiere) பார்த்திருப்பார். அப்போதாவது தான் எழுதாத, சக எழுத்தாளரின் பெயர் -- புழக்கத்தில் அதிகம் இல்லாத ஒரு அபூர்வமான பெயர் -- ஏளனமான தொனியில் பயன்படுத்தப்பட்டது அவரது காதுகளில் ஒலித்திருக்கும். குறிப்பிட்ட வசனம் பேசப்படும்போதெல்லாம் தூங்கிவிட்டிருப்பார் என்ற சந்தேகத்தின் பலனை இன்னொரு முறையும் அளிப்போம்.

ஆனால் படம் பொதுமக்களின் பார்வைக்கு வந்து, இதனால் பாதிப்படைந்த நபர் ஒரு பொதுவிடத்தில் இதை சுட்டிக்காட்டி "" நீங்கள் வசனம் எழுதியிருக்கும் சண்டக் கோழி படத்தில் என் பெயரை ஒரு காட்சியில் பயன்படுத்தி வசனம் எழுதியிருக்கிறீர்கள்.என் பெயரை இப்படிப் பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. என் பெயரைப் பயன்படுத்தியதை நான் ஆட்சேபிக்கிறேன்" என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அதற்கு "அந்த வசனத்தை நான் எழுதவில்லை.அந்தப் படம் வெளியான போது அதை நான் பார்க்கவில்லை. என்றாலும் எனக்கு இப்படி ஒரு விஷ்யம் இருக்கிறது எனத் தெரியவந்தது. என் பெயரில் அது வெளியாகியிருந்தாலும் கூட நான் அதை எழுதவில்லை. ஒருபடத்திற்குப் பலர் வசனம் எழுதுகிறார்கள். டைரக்டர் எழுதுகிறார்; ஹீரோஎழுதுகிறார்; டப்பிங் போது எழுதுகிறார்கள். நான் அந்த வசனத்தை எழுதவில்லை. அதற்குப் பின் எந்த உள்நோக்கமும் கிடையாது.நான் எவரைப் பற்றியும் உள்நோக்கத்தோடு எழுதுவதில்லை" என்று மழுப்பியிருக்கிறார்.

சக எழுத்தாளர் ஒருவர் இதனால் புண்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டும்போது, சாதித்த எழுத்தாளராக இல்லை, ஒரு சராசரி மனிதராக "... அதற்கு பின் எந்த உள்நோக்கமும் கிடையாது. இதனால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என்று கூடுதலாக சில வார்த்தைகளை சொல்லியிருந்தால் அவர் செய்த சாதனைகளுக்கு அர்த்தமிருக்கும். சில்வியா ப்ளாத், அன்னா அக்மதோவா பற்றி அறிமுகம் செய்யும் தகுதியுமிருக்கும்.

அதற்கு பிறகும் யாராவது கூட்டம் போட்டு அவர் மீது கல்லெறிந்துக்கொண்டிருந்தால் ரஜனி ராம்கியும், தெருத்தொண்டன் ராம்கியும் ஆளுக்கொரு பதிவைப் போட்டு அவர்களின் வண்டவாளங்களையோ, நேர்மையையோ பற்றி விமர்சனமோ, கிசுகிசுவோ அல்லது இரண்டையும் கலந்தோ எழுதுவதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் தான் எழுதியிருக்கக்கூடிய அல்லது கேட்டிருக்கக்கூடிய வார்த்தைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சாதித்து கூடவே "அதற்கு பின் எந்த உள்நோக்கமும் கிடையாது" என்று மழுப்பிவிட்டு நழுவி ஓடியிருக்கிறார். அவருடைய செயலில் தெரிவது தனக்கு கிடைத்துள்ள பிரபலத்தினால் ஏற்பட்ட திமிர் என்பதைத் தவிர வேறில்லை.

தன் புத்தகத்தை வெளியிட்ட நல்லக்கண்ணு அவர்களையும், பெற்றுக்கொண்ட பி.ஏ.கே.வையும் பாதியில் விட்டுவிட்டு ஓடிய இவரது ஓட்டம் ஒன்றும் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட சக எழுத்தாளருக்காக பரிந்து "என்னால் இப்பொது பேச முடியாது. குட்டி ரேவதியின் குரல் என்னை மிகவும் பாதித்து விட்டது. அவரது ஆட்சேபணை நியாயமானது. அவருடைய குரலோடு என்னுடைய குரலையும் இணைத்துக் கொள்கிறேன்" என்று பிரபஞ்சன் செய்த வெளிநடப்பு நல்லக்கண்ணு அவர்களை அவமானப்படுத்திவிடுகிறது. இப்படி சிலர் தும்பை விட்டு வாலைப்பிடித்து முறுக்கும் தொனியே தான் உங்கள் பதிவிலும் இருக்கிறது.

இங்கு முதன்மை பிரச்சினை சம்பத்தப்பட்ட சினிமா வசனம். பிரச்சினையின் மூலம் எஸ். ராமகிருஷ்ணன். அதில் பாதிக்கப்பட்டவர் குட்டி ரேவதி. இருவருமே எழுத்தாளர்கள். இங்கு நேர்மையான இலக்கிய வாசகர்களுக்கு முன் இருக்கும் சிக்கல் யார் சிறந்த எழுத்தாளர், யார் சாதனையாளர் என்ற விமர்சனப் பார்வையின்பாற்பட்டதல்ல. புண்பட்டவருக்கு ஆதரவாகப் பேசும், புண்படுத்தியவரைக் கண்டிக்கு சராசர் மனித மனத்தின்பாற்பட்டது. ஆனால் நீங்களும், ரஜனி ராம்கியும்,அவர் பதிவில் பின்னூட்டமிட்ட பிகேஎஸ், சன்னாசி, சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட இலக்கியம் பேசும் பலரும் சேர்ந்து ராமகிருஷ்ணனை பாதிக்கப்பட்டவராக்கி அவரை விமர்சித்தவர்களைப் போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

"உங்களில் எவனொருவன் தூயவனோ அவன் முதலில் கல்லெறியுங்கள் என்ற இயேசுவின் வாசகங்கள் நமக்கு மறந்து போகட்டும்"

"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்"

இந்த வசனங்கள் எல்லாம் கேட்க நன்றாகத்தானிருக்கின்றன. இவற்றை முழு அர்த்தத்துடன் பின்பற்ற ஆரம்பித்தால் ராமகிருஷ்ணன்கள் குட்டிரேவதிகளை ஜாம்ஜாமென்று கிண்டலடித்துக்கொண்டிருக்கலாம். பிறகு தேவநேய பாவணர் நூலக அரங்கக் கூட்டத்துக்கும் தேவையிருக்காது. உங்களுக்கு பதிவு எழுதவேண்டிய அவசியமும், எனக்கு பின்னூட்டம் எழுதும் தகுதி கூட இருக்காது. துரதிர்ஷ்டவசமாக நாம் எல்லோரும் இயேசுக்களோ, சினிமாப் பாடலாசிரியர்களோ அல்ல.

(மேற்கோள்கள் மாலனின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டன).

ரஜனி ராம்கி,
//பக்கத்தில் நின்று கொண்டு கல்லெறிந்தேனா? வரவர எனக்கு தமிழ் படிக்கவும் வரமாட்டேங்குது! //

பக்கத்தில் என்றால் அந்த 'பக்கத்தில்' என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்கள் பதிவையும், ஆதரித்து வந்த பின்னூட்டங்களையும் படித்தபோது இன்னொரு 'பக்கத்தில்' என்று புரிந்துகொண்டேன். அதுவும் சரியில்லை என்று நீங்கள் சாதித்தால், பிரச்சினை உங்கள் தமிழில் இல்லை. எனக்குதான் படிக்கவரமாட்டேங்குது போல!

ராஜ்குமார்'
//.இருதரப்பு நியாயங்களையும் கேட்க வேண்டும் என்று பொதுவாக கூறுவார்கள். நீங்கள் இருதரப்பு அநியாயத்தையும் கூறியிருக்கிறீர்கள்.இது குழப்பமான நிலையாக சிலருக்கு படுகிறது.//

இந்த பிரச்சினையின் இரண்டு தரப்புகள்: 1. குட்டி ரேவதி; 2. எஸ். ராமகிருஷ்ணன். மற்றவர்கள் தரப்பே அல்ல. ராம்கி எழுதியது பெரும்பாலும், ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை விமர்சித்தவர்களைப் பற்றியது. இது இரண்டாம்பட்சப் பிரச்சினை. இப்படியே போனால் மூன்றாம்பட்சமாக ராம்கி, நான்காம் பட்சமாக நான், ஐந்தாம்பட்சமாக நீங்கள் என்று வளர்ந்துகொண்டே போய் இரண்டு தரப்புகளுக்கும் பங்குபோட்டு கொடுக்கவேண்டியதுதான்.

 
At 11:32 AM, Blogger குழலி / Kuzhali said...

//தெருத்தொண்டன்,
இந்த விவகாரத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் அய்யோக்கியத்தனத்தை நியாயப்படுத்த முடியாமலும், அதே சமயம் அவரை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஒரு குழப்ப மனநிலையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள். இந்த இரண்டுங்கெட்டான் நிலையிலிருந்து எழுதிய பதிவுக்கு பதில் சும்மாவே இருந்திருக்கலாம். இதற்கு எஸ்ராவின் பக்கத்தில் நின்றுக்கொண்டு கல்லெறியும் ரஜனி ராம்கியின் தெளிவே பரவாயில்லை.
//
I agree this,
I didnot expect this from theruthondan.... hm.... once again proved 'karuthu sudhanthiram' differ from persons to persons.... alavukol differs for thangar, kushboo and SR

 
At 12:29 PM, Blogger ஜெ. ராம்கி said...

//பக்கத்தில் என்றால் அந்த 'பக்கத்தில்' என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்கள் பதிவையும், ஆதரித்து வந்த பின்னூட்டங்களையும் படித்தபோது இன்னொரு 'பக்கத்தில்' என்று புரிந்துகொண்டேன். அதுவும் சரியில்லை என்று நீங்கள் சாதித்தால், பிரச்சினை உங்கள் தமிழில் இல்லை. எனக்குதான் படிக்கவரமாட்டேங்குது போல!

I'm not clear about the "side". Anyway, let us leave it! i've been criticised in such a way that i'm trying to "sideline" the voice of women poet?!

//வார்த்தைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சாதித்து கூடவே "அதற்கு பின் எந்த உள்நோக்கமும் கிடையாது" என்று மழுப்பிவிட்டு நழுவி ஓடியிருக்கிறார். அவருடைய செயலில் தெரிவது தனக்கு கிடைத்துள்ள பிரபலத்தினால் ஏற்பட்ட திமிர் என்பதைத் தவிர வேறில்லை.

Is this applicable to Kushboo & Suhashini?

I don't see any similarity between Thangar, Kushboo, Suhashini & Kutti Revathi issues. If you can find any similarity then it will be useful for Kuzhali to get it cleared! :-)

 
At 1:51 PM, Blogger தெருத்தொண்டன் said...

மு.சுந்தரமூர்த்தி:
எனக்கு சில விஷயங்களை அறிவுறுத்துவதற்காக நீங்கள் நேரம் செலவழித்தமைக்கு முதலில் எனது நன்றிகள்.

முதன்மைப் பிரச்னையில் எனது நிலையைத் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் எஸ்ராவை சினிமாவில் வசனம் எழுதிய ஒருவர் என்று தான் பார்க்கிறேன். வேறுவிதமான எதிர்பார்ப்புகள் இல்லை. சிறுபத்திரிகைகளில் அவரது மொழி பார்த்து அவருக்கு கிரீடம் சூட்டியவர்கள் இன்று அவர் இப்படி இருப்பது குறித்து வருந்தலாம்.

சினிமாவின் அமைப்பு குறித்து சிறிய அளவு தெரிந்ததால், பொறுப்பில் இருந்தும் நான் எழுதவில்லை என்று சொன்னதே எனக்கு வியப்பளிக்கிறது.(இதையே மீண்டும் மீண்டும் சொல்லி தயாரிப்பாளர்கள் மத்தியில் எஸ்ராவைப் போட்டுக் கொடுத்து நீ வாய்ப்பு தேடுகிறாய் என்று நண்பர்கள் யாரேனும் சொன்னாலும் வியப்பதற்கில்லை)

நீங்கள் சரியாகக் குறிப்பிட்டபடி 16.1.2006 கூட்டத்தில் பேசிய சிலரது பேச்சே எனது பதிவின் பொருள். பெண்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பது என்று வ்ரும்போது - சினிமா தாக்குதல் என்றால் சிலர் வருவார்கள் - வேறு தளத்தில் என்றால் வேறு சிலர் வருவார்கள் - சிலரின் முரண்பாடான நடைமுறையைச் சுட்டிக் காட்டவே முயன்றேன்.
அதற்கான அவசியம் என்ன என்பதே உங்கள் கருத்து என்று புரிந்து கொள்கிறேன்.

சண்டக்கோழி விவகாரம் என்று கூட்டத்திற்கு ஏன் தலைப்பிடவில்லை? சினிமாவின் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமாக ஏன் சித்தரிக்கப்படுகிறது? ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஏன் இந்தக் கூட்டம் நடைபெறவில்லை என்று கேட்பதைப் போல் உள்ளது சில நண்பர்களின் கேள்விகள்.

சுந்தரமூர்த்தி, உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அந்தக் கூட்டத்தில் நான் மதிக்கும் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்..ஆனால் பெரும்பாலோரின் பேச்சுக்குப் பின் தனிமனித காழ்ப்பும், தன்னைப் பாராமல் பிறர் மீது கல் எறியும் மனப்போக்கும் இருப்பதாகத் தோன்றியது.
நன்றி சுந்தரமூர்த்தி.

 
At 1:55 PM, Blogger தெருத்தொண்டன் said...

குழலி:
//I agree this,
I didnot expect this from theruthondan.... hm.... once again proved 'karuthu sudhanthiram' differ from persons to persons.... alavukol differs for thangar, kushboo and SR//

கருத்துக்கு நன்றி குழலி. என்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றிருக்கிறீர்கள்.. அடிப்படைப் பிரச்னையில் குட்டி ரேவதிக்கு ஆதரவளிப்பதை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா?

 
At 1:58 PM, Blogger தெருத்தொண்டன் said...

ராஜ்குமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 
At 4:24 PM, Blogger நியோ / neo said...

தெருத்தொண்டன்,

சுந்தரமுர்த்தி அவர்கள் குறிப்பிட்டபடி உங்கள் 'சார்பை' ஒருபக்கமாகத் தெரிவிப்பதுபோலத்தான் இந்தப் பதிவின் தலைப்பு உள்ளது. நான் எழுப்பிய சிலவற்றுக்கு நீங்கள் பதிலளிக்காதது பற்றி எனக்கு வருத்தமில்லை.

'அந்தப் பழம்தாங்க இது' ரேஞ்சுக்கு நீங்கள் தோசையைத் திருப்பிப் போட வேண்டியதில்லை. 'நுண் அரசியல்' பற்றி அங்கலாய்த்த நீங்கள் உங்களுக்கும் அதேதான் உள்ளுக்குள் செயல்படுகிறது என்பதை இன்னும் நேர்மையாக ஒப்புக்கொள்ளலாம்.

எனினும், இந்த விஷயத்தில் 'சிலம்பம்' ஆடத் துடிக்கிற 'மற்றவர்களோடு' உங்களை நான் சேர்த்துப் பார்க்கவில்லை.

ஆனால், கடந்த நான்கு மாதங்களாக - தமிழகத்து அறிவுஜீவிகள், சிற்றிதழ் எழுத்தாளர்கள், அதிதீவிர இலக்கியவாதிகள, "நடுநிலையாளர்கள்" ஆகியோர் மீதான Holy Halo உடைந்து நொறுங்கிவிட்டது என்பதைக் காலம் பதிவு செய்யும்.

"Either you are with me or against me" என்பது இப்போது 'முற்போக்குவாதத்தின்' குணாம்சமாகவும் மாறிவிட்ட அவலத்தை கூடிய விரைவில் பல நிகழ்ச்சிகள் காட்டிக் கொடுக்கக் கூடும். நீங்கள் சொன்ன மாதிரியே 'எல்லோரும் எங்கே போய்விடப்போகிறோம்?'. நன்றி :)

 
At 9:21 PM, Blogger தெருத்தொண்டன் said...

நியோ:

//எனினும், இந்த விஷயத்தில் 'சிலம்பம்' ஆடத் துடிக்கிற 'மற்றவர்களோடு' உங்களை நான் சேர்த்துப் பார்க்கவில்லை.//
இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். இதற்கான காரணம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை. நான் எந்த இயக்கத்தையும் ஆதரிப்பவன் அல்லன். எனக்கு எந்தத் தீவிர இலக்கியமும் தெரியாது. கையில் கிடைக்கும் எதையும் எனது விருப்பமும் தேவையும் சார்ந்து படிக்கிறேன். வணிக ஊடகங்கள் என்று உங்களைப் போன்ற தீவிர சிந்தனையாளர்களால் அழைக்கப்படும் ஊடகங்களில் பணிபுரிகிறேன்.ஊடகங்களின் தேவைக்குத் தக்கவாறு பணிபுரியும் என்னிடம் நீங்கள் கருணை காட்டத் தேவையில்லை. அறிவுஜீவித்தனமான அரக்கத்தனத்துடன் (Intellectual arrogance?) வணிக ஊடகங்களில் பணிபுரிபவர்களை இழிபிறவிகளாகப் பார்க்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது.(இந்த பதில் நேர்மையாக இருக்கிறதா?)

//ஆனால், கடந்த நான்கு மாதங்களாக - தமிழகத்து அறிவுஜீவிகள், சிற்றிதழ் எழுத்தாளர்கள், அதிதீவிர இலக்கியவாதிகள, "நடுநிலையாளர்கள்" ஆகியோர் மீதான Holy Halo உடைந்து நொறுங்கிவிட்டது என்பதைக் காலம் பதிவு செய்யும்//

நல்ல வரிகள்..சமூக சீர்திருத்தம் பேசிய பலரது நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் இந்த நான்கு மாதங்களில் காண நேர்ந்தது. கூடியிருக்கும் கூட்டத்தின் தன்மை, வாய்ப்பு கிடைத்திருக்கும் மேடையின் தன்மையைப் பொறுத்து பேசும் வியாபாரிகளின் பேச்சை மட்டும் பார்த்து மெய்சிலிர்ப்பது அவரவர் உரிமை. அதுதான்ங்க இது மாதிரி அல்ல நியோ. பேச்சுக்கும் எழுத்துக்கும் செயலுக்கும் நடைமுறைக்கும் இடைவெளி இல்லாத வாழ்க்கை வாழும் சிலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களைப் பற்றி எள்முனையளவு கூட நான் விமர்சிக்கத் தயாரில்லை.

//'நுண் அரசியல்' பற்றி அங்கலாய்த்த நீங்கள் உங்களுக்கும் அதேதான் உள்ளுக்குள் செயல்படுகிறது என்பதை இன்னும் நேர்மையாக ஒப்புக்கொள்ளலாம்.// எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் நீங்கள் பொதிக்கும் 'நுண் அரசியல்' எனக்குப் புலப்படவில்லை.

எப்படியிருப்பினும் உங்கள் நேர்மையான விமர்சனத்திற்கு எனது நன்றி.நீங்கள் குறிப்பிடும் தன்மைக்கு நான் இரையாகி இருக்கிறேனா என்று மீண்டும் மீண்டும் யோசிப்பதற்கு உங்கள் விமர்சனம் எனக்கு உதவியது.

 
At 2:06 AM, Blogger நியோ / neo said...

>> சமூக சீர்திருத்தம் பேசிய பலரது நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறைப் பாதுகாக்கும் முயற்சிகளையும்.. >>


பெரியார் ஜீவானந்தத்தை விட்டுப் பிரிந்ததும், அண்ணா பெரியாரைப் பிரிந்ததும்,
'கண்ணீர்த்துளியானுங்க' என்று மறுநாள் காலையில் காங்கிரஸ் தேர்தல் மேடையில் திமுக-வை திட்டவிருக்கும் பாவேந்தர் முந்தைய நாள் இரவு முழுதும் திமுக-காரர்களின் இல்லத்தில் பாசத்தோடு தங்கி உண்டதும், பெரியார் இரண்டாம் மொழிப்போரை விமர்சித்ததும், அண்ணா ஆட்சி பீடம் ஏறிய உடன் 'இது தந்தை பெரியாரின் ஆட்சி' என அறிவித்ததுமான நிகழ்வுகளை - அவற்றின் ஆழ்ந்த உட்கிடைகளை - சரியாக வாசிக்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள்; அவைகளை 'முரண்'களாகப் பார்ப்பதில்லை.

தோழர் எம்.கல்யாணசுந்தரம், 'தோழர்' என். ராம், தோழர் ஜெயகாந்தன் போன்ற 'நொட்டாங்கைகளை' அடையாளம் காணத் தவறுவதும் இல்லை.

நான் தீவிர சிந்தனையாளன் அல்லன்; சிந்திக்கத் தெரிந்தவன் அவ்வளவே.

'வர்க்கப்' போராளிகள் '1975 நெருக்கடி நிலையை' ஆதரித்ததையும், இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் அதை எதிர்த்ததையும் - வரலாற்றின் போக்கில், எப்படிப் புரிந்து கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ள மாபெரும் சிந்தனையாளனாக இருக்கத் தேவையில்லை.

"கற்பழிப்பு என்பது என்ன? டீ குடிப்பது மாதிரிதானே" என்று தோழர் ஈ.கே.நாயனார் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட கதைகளும் அறிவோம்.

சம்பவங்கள், பேச்சுகள் பற்றியதல்ல - நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல 'ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் செயல்படும்' அல்லது இயங்கும் 'நுண் அரசியல்' குறித்ததே என் பார்வையும்.

மேலே நான் குறிப்பிட்டவை வெறும் விளக்கும் பொருட்டே; நான் ஏதும் உள்ளர்த்தம் கற்பிக்க முனைந்து அல்ல. மற்றபடி நன்றி :)

 
At 7:03 PM, Blogger தெருத்தொண்டன் said...

//மேலே நான் குறிப்பிட்டவை வெறும் விளக்கும் பொருட்டே; நான் ஏதும் உள்ளர்த்தம் கற்பிக்க முனைந்து அல்ல. மற்றபடி நன்றி :) //
நன்றி நியோ.. "நொட்டாங்கைகள்" உங்களிடம் படாதபாடு படுகிறார்கள்;படப்போகிறார்கள். சரளமாக "போட்டுத் தாக்கி" இருக்கிறீர்கள். புஷ்களுக்கும் ஒசாமாக்களுக்கும் சுதர்சனங்களுக்கும் வேண்டாதவர்கள் அல்லது பகையாளிகள் இப்போது உங்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்..அவர்கள் வரித்துக் கொண்ட தத்துவத்திற்கு வலிமை இருந்தால் தாங்கிக் கொள்கிறார்கள். அல்லது பொசுங்கிப் போகிறார்கள்..

இப்போதுதான் நீங்கள் எனது கடைசிப்பக்க கவர்ச்சிப்படம் பதிவில் பின்னூட்டம் இட்டதைப் பார்த்தேன். நன்றி.

 
At 10:08 PM, Blogger நியோ / neo said...

>> புஷ்களுக்கும் ஒசாமாக்களுக்கும் சுதர்சனங்களுக்கும் வேண்டாதவர்கள் அல்லது பகையாளிகள் இப்போது உங்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.. >>



நான் குறிப்பிட்ட 'வரலாற்று முரண்களை' நீங்கள் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்றே நம்புகிறேன்.

கொஞ்சம் எளிமையாகச் சொன்னால் இந்த "Trade off" எல்லா இயக்கங்களுக்கும், எல்லா தத்துவங்களுக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கும்.

நாஜிகளிடம் போய் உதவிக்கு நின்ற, பிறகு நாஜிகளின் நண்பர்களான சப்பானியர்களிடம் தஞ்சமடைந்த சுபாஷ் சந்திர போஸின் பெயரை முன்னிறுத்தும் "ஃபார்வர்ட் பிளாக்" இயக்கம் - இடதுசாரிகளிடம் குடித்தனம் இருப்பதுவும், அதன் தமிழகக் கிளை ஒரு குறிப்பிட்ட "நிலப்பிரபுத்துவப் பண்புகளை கண்மூடித்தனமாகத் தூக்கிப் பிடிக்கும்" சாதீயவாதிகளிடம் முழுமையாகச் சரணடைந்து இருப்பதுவும் கூட வரலாற்று உண்மைகளே.

புஷ், ஒசாமா - ஆகியோர் விவகாரத்தில் 'Idealogy' தளும்பி வழிவதுவும் உள்ளூர் விவகாரத்தில் 'சுத்த சன்மார்க்கம்' பேசுவதுவும் கூட 'நொட்டாங்கைத்தனமே'.

* ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க! ஹியூகோ சாவேஸ் வாழ்க! யாசர் அராஃபத் வாழ்க! அமேரிக்க எகாதிபத்தியம் ஒழிக! என்று பில்ட்-அப் காட்டுவது

* சுதந்திரக் கிழக்குத் தைமூர் வாழ்க! பங்களா'தேசம்' வெல்க! நேபாள மவோயிசம் வாழ்க! மியான்மர் ஆங் சாங் சூ கீ வாழ்க! என்பதுவும்

பிறகு

* விடுதலைப்புலிகள் pol potist, நெடுமாறனை ஏன் பொடாவில் இன்னும் கைது செய்யவில்லை, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை Talibanist, fundamentalist, chauvinist என்பதுவுமான - சர்க்கஸ் நாடகத்தை 'நொட்டாங்கைகள்' நடத்தும் போது - இடதுசாரிகள் 'மெளன விரதம்' இருப்பதுவும் கூட - புஷ், ஒசாமா, சுதர்சனம் - ஆகியோரிடம் இருந்து தமிழர்களைக் காக்கும் பொருட்டுத்தான் என்று நீங்கள் 'உரை' எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இடதுசாரிகளுக்கு 'political priorities' இருக்கலாமாம்! மற்றவர்களுக்குக் கூடாது என்பதுவும் "பாசிச அரசியலே" ( "தோழர்" சுபாஷிடம் கற்றுக் கொண்டதாக இருக்கலாம்).

 
At 4:38 AM, Blogger நியோ / neo said...

இந்த விவாததில் - ரோசா வசந்த் பதிவில் 'மதி' அவர்கள் என்னுடைய (இந்தப் பதிவிற்கான) பின்னூட்டம் ஒன்றைக் குறிப்பிட்டு எழுப்பிய கேள்விக்கு இங்கே யே பதில் தருகிறேன்.

மதி அவர்களே,

நான் கேட்டது 'பத்மா அரவிந்த' அவர்களின் இந்தப் பதிவு பற்றியது :

>>
மெஹ்ரோலி என்ற ஊரில் பல ஏழை குடும்ப குழந்தைகளுக்கு மரபணு பரிசோதனைகள் செய்திருக்கிறேன். குழந்தைகளின் த ந்தை ஒருவரே இருந்தது இல்லை. இது பற்றி அவர்களும் அறிவார்கள். இது சகஜமாக ஏற்று கொள்ள பட்டிருக்கிறது. >>

சுட்டி : "கற்பென்ற ஒரு கற்பனை"
http://www.domesticatedonion.net/blog/thenthuli.php?item=614#c


கற்பு பற்றிய விவாதத்தில் - திடீரென்று ஏதோ ஒரு ஊரில் இவருக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்கக் கூடிய ஒரு விஷயத்தை - இவருடைய பார்வைக்கான முட்டுக் கொடுக்க - பொத்தாம் பொதுவாக, பொறுப்புணர்வின்றி அந்த 'பல குழந்தைகளுக்கு' என்கிற ரீதியில் பேசுவது - எத்தனை பெரிய விடயம்?

அன்றிருந்த நிலையில் யாரும் இது பற்றிக் கேட்கவில்லை. இன்று, இவ்விவாதத்தில் பல கோணங்கள், னோக்கங்கள் அலசப்படுகிற போது - இந்த 'தார்மீக உரிமை மீறல்' ஏன் கண்டிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினேன்.

உண்மையில் இது போன்ற generalizing comments -தான் 'சுள்' என்ற கோபத்துக்குரியது என்பது எனது கருத்து.

மற்றபடி தனிப்பட்ட முறையில் நான் அவர் குறித்து ஏதும் சொல்லவில்லை.

 
At 6:14 AM, Blogger பத்மா அர்விந்த் said...

நியோ: என் பதிவில் நான் எழுதியதற்கான ஆதாரங்கள் இன்னமும் மெஹ்ரோலியில் உள்ள காசநோய் மருத்துவமனையிலும்( Cotact Dr. Sanjay Gupta) அகில் இந்திய வைத்திய விஞ்ஞான கழகத்திலும் உண்டு. நான் எழுதியதில் நான் பார்த்த பழகிய ஏழை குடும்பங்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். நான் பொதுவாக எல்லா ஏழை குடும்பம் என்றோ கீழ் மட்ட சேரி என்றோ பொதுப்படுத்தவில்லை. நான் வளார்ந்ததே சேரியில்தான் என்பதாலும் எனக்கு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஏர்ப்பு உண்டு. இன்னமும் நான் யாரிடமும் பிரச்சினை என்ன என்று கேட்பதுதான் வழக்கமே தவிர, மற்றபடி என்ன சாதி, கீழ்மட்டமா மேல் மட்டமா என்றெல்லாம் கேட்பதில்லை. என் வரிகளுக்கும் நீங்கள் பின்னூட்டத்தில் எழுதிய வரிகளுக்கும் இடையே பொருள் வித்தியாசம் உண்டு. பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. மெஹ்ரோலியில் நான் பார்த்த குடும்பங்கள் என்றுதான் கூறி இருக்கிறேன். அவர்களின் முகவரி, பெயர் கொடுப்பது நம்பிக்கை மீறலும் ஆகும்

 
At 11:14 AM, Blogger தெருத்தொண்டன் said...

நியோ:
சிலரது Trade, on இலேயே இருப்பதை மறைக்க அல்லது நியாயப்படுத்த Trade Off குறித்துப் பேசுகிறீர்களா?

தேன் துளி / மதி:
(ரோசா வசந்த் பதிவில் மதி குறிப்பிட்டது குறித்து) இந்தப் பதிவில் நியோ தேன் துளி பதிவு குறித்து குறிப்பிட்டதன் நோக்கம், எனக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதால்தான் அங்கு நான் கண்டிக்கவில்லை என்பதை வலியுறுத்துவதற்காக என்று தான் நான் புரிந்து கொண்டேன்.என் மீது எழுப்பப்படும் ஒரு விமர்சனத்திற்கு தேன் துளி பதிவை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே புரிந்து கொண்டேன். அது தேன் துளியின் பதிவாக அவர் மேற்கோள் காட்டியிருப்பது தற்செயல் நிகழ்வு. அது முகமூடியின் பதிவாக இருக்கலாம்,அல்லது கற்பைக் கற்பிதம் என்று நிறுவ நினைக்கும் பதிவுகளில் ஏதேனும் "ஒரு குறிப்பிட்ட வகை"ப் பதிவாகவும் இருக்கலாம். அதன் மூலம் அவர் நிறுவ முயல்வது வேறு "நுண் அரசியல்" என்பதாகப் புரிந்து கொண்டேன். எனவே பொதுவான பதிலுடன் நிறுத்திக் கொண்டேன்.

மேலும் மேலே அவர் //தங்கமணி அவர்களின் அப்போதைய பதிவில் நானும் வேறு சிலரும் (சுந்தரமூர்த்தி அவர்கள் உட்பட) இந்த 'நுண் அரசியல்' குறித்துப் பேசினோம் - ஆனால் அப்போது Rightwing puritans திடீரென்று leftwing liberalism வந்து சாமியாடியபோது உங்களைப் போன்றவர்கள் இந்த வார்த்தையையாவது பயன்படுத்தினீர்களா?

'மேட்டுக்குடியினர்' அல்லாத சில பெண் வலைப்பதிவாளரும் கூட இந்த 'நுண் அரசியலை' புரிந்து கொள்ளாமல் பேசிய வேடிக்கைதான் அப்போதும் நிகழ்ந்தது.// என்று கூறியிருப்பதில் இருந்து அறிய முடிவது : சிலரது பிறப்பு குறித்த யூகங்கள் அல்லது விபரங்களும், அரசியல் சார்பு குறித்த யூகங்களும் அல்லது விபரங்களும் வைத்துக் கொண்டு என்னை சாதியவாதி என்றோ அல்லது சாதியவாதிகளுக்கு சாமரம் வீசுபவன் என்றோ அவர் நிறுவ முயல்கிறார் என்று நான் புரியும்நிலையில், அவர் முன்வைக்கும் திட்டத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

"பெயரில் தெரியும் அடையாளங்கள்" !:-))

 
At 5:10 PM, Blogger நியோ / neo said...

பத்மா :

>> இது சகஜமாக ஏற்று கொள்ள பட்டிருக்கிறது >>

நான் குறிப்பிட்ட அந்த மொத்த வாக்கியத்தையும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் பார்வைக்கு முட்டுக் கொடுக்கும் விதத்தில் பொறுப்பில்லாமல் 'சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது' என்பது மாதிரி அர்த்தச் சிக்கல்கள் நிறைந்த வாக்கியத்தை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது தெரியும்.

அந்த வாதத்தில் இதை பொறுப்பில்லாமல் கையாண்டிருக்கிறீர்கள் என்பதுதான் இப்போதும் என் பார்வை.

'நாம் சொன்னால் வாதம்; நீ சொன்னால் திரித்தல்' என்பதும் சுட்டிக்காட்டினால் ஆமா அதேதான் என்பதுமான infinite loop-இல் ஓடுவது அயர்ச்சியைத் தருகிற விஷயம். அவ்வளவே. நன்றி.

தெருத்தொண்டன்:

இடதுசாரிகள், தொழிற்சங்க வாதம், நொட்டாங்கைகள் என்று ஒரு 'கட்டமைப்ப்பு' இந்திய சமூக-அரசியற் தளத்தில் செய்து வருகிற எல்லாவற்றையும் 'வீரவணக்கம்' செலுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் குறிப்பிட்ட 'Trade-off' Trade unionists-கள் செய்வதையும் சேர்த்தே அடங்கும், பல்வேறு பிரச்சனைகளில்.

உங்களுக்கு எங்கோ இடிக்கிறது என்று புரிகிறது! :)

>> உங்கள் தோழியர் பத்மா அரவிந்த் >> என்று தெளிவாக பெயர் சொல்லி குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் -

>> அது தேன் துளியின் பதிவாக அவர் மேற்கோள் காட்டியிருப்பது தற்செயல் நிகழ்வு. அது முகமூடியின் பதிவாக இருக்கலாம்,அல்லது கற்பைக் கற்பிதம் என்று நிறுவ நினைக்கும் பதிவுகளில் ஏதேனும் "ஒரு குறிப்பிட்ட வகை"ப் பதிவாகவும் இருக்கலாம்... >>

என்று திரிக்கிறீர்கள் அப்பட்டமாக!!

சிரித்துவிட்டுப் போகிறேன் :)

'தர்க்க சுயமைதுனம்'(நன்றி : வசந்த அவர்கள்) யார் செய்கிறார்கள் என்று பார்த்தால் - ஒரு சாராரின் மீது பாய்ந்து குதறுவதையும் மற்றொரு சாராருக்கு 'பூச்செண்டால் அடிப்பதையும்' பார்க்கிறவர்களுக்கு சந்தேகம் வந்தால் - அது பார்க்கிறவர்களின் கோளாறு அல்ல, இரட்டைநிலைப்பாடு எடுப்பவர்கள்தான் அதற்குப் பொறுப்பாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றைத் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன் :

தங்கமணி, ரோசா வசந்த், ராம்கி (என் பெருந்தன்மை என்று வைத்துக் கொண்டாலும்) ஆகியோர் மீது பூச்செண்டை'கடிதோச்சி மெல்ல வீசுவேன்'; 'மற்றையோருக்கு' தேவைப்பட்டால் என் கால் செருப்பை தூக்கி வீசுவேன் என்பதையும் வெளிப்படையாகப் பதிவு செய்கிறேன்.

ஏனெனில் கடந்த 15 வருடங்களாக 'சுய தர்க்க மைதுனம்' மட்டுமே அதிகமாகச் செய்யும் ஞாநி, மார்க்ஸ் போன்றோரை விடவும் - சின்னக்குத்தூசியார் மேலானவர் என்றே பறையறைகிறேன்.

'சின்னக்குத்தூசியார்' - பெயரில் தெரியும் அடையாளங்கள் என்ன????!!!!

'ஜெயகாந்தன்' பெயரில் தெரியும் அடையாளங்கள் என்ன???!!! -

என்பதெல்லாம் - 'உலகளாவிய பார்வையிலான' மலட்டு அரசியல் பேசுகிற 'மேட்டிமைத்தனமே இல்லாத' நொட்டாங்கைகளுக்கு மட்டுமே
விளங்குகிற சங்கதியாக இருக்கலாம்!

நன்றி! :)

 
At 6:33 AM, Blogger doondu said...

This comment has been removed by a blog administrator.

 
At 8:24 AM, Blogger தெருத்தொண்டன் said...

மேலே வந்திருக்கும் பின்னூட்டம் போலி டோண்டுவுடையது என்றே கருதுகிறேன்.

 
At 9:29 AM, Blogger doondu said...

தெருத்தொண்டன்,

இனிமேல் நீங்கள் டோண்டு, மாயவரத்தான், முகமூடி போன்ற தெருப்பொறுக்கி பாப்பார பதிவில் பின்னூட்டம் இட்டால் எனது தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று சொல்லிப் போக வந்தேன்.

நலம் விரும்பி.

 
At 1:37 PM, Blogger தெருத்தொண்டன் said...

முந்தைய பின்னூட்டமிட்ட நண்பரே,
மட்டுறுத்தல் வேண்டாம் என்றிருந்தேன். இன்று நீங்கள் என்னை அந்த முடிவுக்குத் தள்ளிவிட்டீர்கள்.. நன்றி!

 

Post a Comment

<< Home