Sunday, October 02, 2005

பாதை மாறியது ஏனோ?

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முதலில் இந்தியாவில் பிரிட்டனின் காலனி ஆதிக்கக் காலத்தைப் போற்றிப் பேசியது. அடுத்ததாக இந்திய அணு உலைகளுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு ஒப்புதல் தெரிவித்தும் உலைகளை சர்வதேச அணுசக்திக் கழகம் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்தும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டது. இப்போது சர்வதேச அணுசக்திக் கழகத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறது. இது ஒன்றும் எதிர்பாராத செயல் அல்ல.

ஆனால், இதன் மூலம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு கட்டி எழுப்பப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளில் மேலும் ஒன்றில் இருந்து மத்திய அரசு விலகி இருக்கிறது. அதாவது இதுவரை இந்தியா தனது கொள்கையாகக் கொண்டவற்றில் இருந்து மேலும் ஒரு கொள்கையை மன்மோகன் சிங் அரசு கைவிட்டுள்ளது.

அணிசேராக் கொள்கைகளில் இருந்து மத்திய அரசு விலகிச் செல்வதை ஏதோ தனிப்பட்ட நிகழ்வாக நாம் கருத முடியாது. மாறாக ராஜீவ்காந்தி காலத்தில் இருந்து அரசியலிலும் நரசிம்மராவ் காலத்தில் இருந்து பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க முடிகிறது.

ஆனால், அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பணியாமல் 1998 மே மாதம் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பொக்ரானில் அணு சோதனை செய்தது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால் அப்போதே கூடிய விரைவில் அணிசேராக் கொள்கையை இந்தியா கைவிட்டு அமெரிக்க அணியை நோக்கி நகர்வதற்கு இந்த அணு சோதனை இட்டுச் செல்லும் என்று கருத்துக் கூறியவர்களும் உண்டு. இவர்கள் தெரிவித்த அச்சத்தை உறுதி செய்யும் விதமாகவே இப்போது ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்திக் கழகத்தின் உறுப்பினர் கூட்டத்தில் இந்தியா வாக்களித்த செயல் இருக்கிறது.

இந்தச் செயலின் காரணமாக நாம் ஆசைப்பட்ட அல்லது பேராசைப்பட்ட ஈரானில் இருந்து இந்தியா வரையிலான பெட்ரோல் குழாய் இணைப்புத் திட்டம் பாதிப்படையும். பேராசை என்று சொல்வதற்குக் காரணம், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே பதற்ற நிலை இல்லாத அமைதிச் சூழல் உருவாகும். தொடர்ச்சியாக இந்தக் குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வருவதாக இருந்தால், எரிவாயுவையும் நிலக்கரியையும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும். இதன்மூலம் மின் தடைகளையும் மின்சக்தி பற்றாக் குறையையும் சமாளிக்க இயலும்.

இருந்தபோதிலும், இத்திட்டம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது. இத்திட்டத்தை அமெரிக்க அரசு விரும்பவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி இன்றி பதற்றமான சூழலிலேயே தொடர்ந்து இருப்பதை அமெரிக்கா விரும்புகிறது. இந்தப் போர்ச்சூழலே அமெரிக்க ஆயுத வியாபாரிகளுக்கு பெரிய சந்தையைப் பெற்றுத் தரும். இதுபோக இந்தியாவை மேலும் மேலும் அணுமின் உலைகளை நிறுவச் செய்தால், அவற்றிற்கு எரிபொருளை அமெரிக்கா விற்க முடியும். மின் உற்பத்திக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவதை ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக கைவிட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நமக்கு அமெரிக்கா இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது!

அணுமின் உலைகளுக்கான செலவும் இந்தியாவுக்குத் தாங்காது. அவற்றில் ஏதேனும் விபத்து நடந்தால் ஏற்படும் சேதமும் நம்மால் தாங்க இயலாது. சுற்றுச் சூழலுக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் இந்த உலைகள் ஏற்படுத்த இருக்கும் ஆபத்தை மன்மோகன் சிங் அரசு புறந்தள்ளியுள்ளது.

இதில் பெரிய சோகம் என்னவென்றால், அரசியல் தளத்தில் உள்ள இடதுசாரிகளும், வலதுசாரிகளும் அணு ஆற்றலைக் கொண்டாடுகின்றன என்பதுதான். அணுமின் உலைக்காகும் செலவை நாம் ஏற்றுக் கொள்ள இயலும் என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். ஆனால் இந்தக் கூற்றை அவரால் ஆதாரபூர்வமாக விளக்கிச் சொல்லி நிரூபிக்க முடியாது.

அணு உலைகளைச் சுற்றி இருக்கும் ரகசியம் காரணமாக அவற்றிற்கு ஆகும் செலவை நாம் கணக்கிட முடியாது. ஆனால் இந்திய அணுசக்தித் துறை செலவளிக்கும் நிதியையும், உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் அளவையும் பார்க்கும்போது, அணுமின் உற்பத்திக்கான செலவு மிகவும் அதிகம் என்ற முடிவுக்கு நாம் வரலாம். அணுக் கழிவுகளை வெளியேற்ற இன்னமும் பாதிப்பில்லாத ஒரு முறையை நாம் கண்டுபிடிக்காத காரணத்தால், இந்த அணுமின் உற்பத்தி முறையே சுத்தமானது இல்லை என்று கருத இடமுண்டு.

வாஜ்பாய் அரசைப் போலவே மன்மோகன்சிங் அரசும் இந்தியாவை அமெரிக்காவின் மடியில் தவழும் குழந்தையாக மாற்றுகிறது. இந்தப் போக்கு இந்தியப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாகவும், நிதி அமைப்புகளில் கூட அந்நிய நேரடி முதலீட்டைப் அனுமதிக்கும் விதத்திலும் போகும் போதே தொடங்கிவிட்டது.

இதன் விளைவாக சந்தைப் பொருளாதாரத்தையும் சூப்பர் மார்க்கெட்களையும் ஆதரிக்கும் சக்தி மிக்க ஒரு சமூகப்பிரிவு தோன்றியது. இந்தப் பிரிவினர் இந்திய அணிசேராக் கொள்கையை இந்தியா கைவிடுவதையும் அமெரிக்காவுக்கு அடிபணிந்து இந்தியா செல்வதையும் ஆதரிக்கிறார்கள். பாண்டுங் மாநாட்டின் உணர்வைக் கைவிடுவது குறித்து இவர்களுக்கு ஒரு கவலையும் கிடையாது.

இந்தத் தாக்குதலில் சிறு தொழில்களும் சிறு வியாபாரிகளும் நசிந்து போனார்கள். நமது சோடா, சர்பத் கம்பெனிகள் அழிந்து எங்கெங்கு காணினும் பெப்சியும், கோக்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. உள்ளூர் உருளைக் கிழங்கு வறுவல்கள் மறைந்து பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்த "சிப்ஸ் பாக்கெட்'கள்தான் கடைகளில் கிடைக்கின்றன.

இந்தக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு நமது மருத்துவ நிபுணர்கள் சுத்தம், சுகாதாரம் குறித்து புதிய விளக்கங்கள் தருகிறார்கள்.வேப்பங்குச்சிக்குப் பதில் பற்பசை, தரை மெழுக புதிய திரவங்கள் அறிமுகமாகியுள்ளன. ஐஸ்வர்யா ராய்களும், சுஷ்மிதா சென்களும் குளியல் சோப்புகளும், ஷாம்புக்களும்தான் மேனி எழிலுக்குக் காரணம் என்கிறார்கள். சீயக்காயும் மூலிகைப் பொருட்களும் மூலைக்கு போயின. நமது காய்கறியில் இருந்து கிடைக்கும் எண்ணெயைவிட இறக்குமதி எண்ணெய் சிறந்தது என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். நமது விவசாயமும் வீரிய விதைகளும் புதிய உரங்களுமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ், அரசுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என்று பல தரப்பினரும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கலாச்சாரத்திற்குள் உறிஞ்சப்பட்டு வருகிறார்கள். இப்போது அமெரிக்க நலன்களுக்கு இணக்கமாக இந்தியா செல்வதை ஆதரிப்பதில்தான் இவர்கள் நிற்பார்கள்.

பாதுகாப்பு விமர்சகரும், பிரபல பத்திரிகையாளரும் இந்தப் பிரிவினரின் பிரதிநிதியுமான சி.ராஜமோகன், இந்தியா தனது பழைய கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்காவுக்கு இணங்கிப் போவதில் தவறில்லை என்று வாதிடுகிறார். சர்வதேச அணுசக்திக் கழகக் கூட்டத்தில் ரஷ்யா சீனாவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று எழுதுகிறார். இது ஒரு செயல் தந்திரமாக இருக்கக்கூடும். ஆனால் இதுவும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே வகுக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கொள்கை இன்றைய அமெரிக்க அரசின் அராஜகங்களை ஆதரிக்கிறது. ஜனநாயக நடைமுறைக்கும் தத்துவத்திற்கும் விரோதமானது.

ஆங்கில மூலம்: பத்திரிகையாளர் கிருஷ்ணா ஆனந்த்
நன்றி: தினமலர் செய்திமலர்
02.10.05 தேதியிட்ட தினமலருடன் நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் மட்டும் இலவச இணைப்பு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 12:38 PM, Blogger Voice on Wings said...

அணுசக்தி, ஈரானுக்கு எதிராக வோட்டளித்தது, ஆகியவற்றில் இக்கட்டுரையுடன் முழுவதுமாக உடன்படுகிறேன். மேலும் கூறவேண்டுமென்றால், ஈராக் போர் நடந்த சமயத்தில் அமெரிக்கா இந்தியாவையும் துணைக்கழைத்தது. தேர்தல் ஆண்டாக இருந்ததால் நல்ல வேளையாக நம் அரசு அந்த வேண்டுகோளுக்கிணங்கவில்லை. அவ்வாறிருந்திருக்காவிட்டால் இன்று நம் ராணுவமும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக் மீது படையெடுத்திருக்கும் அவல நிலை நிகழ்ந்திருக்கும். சோவியத் ருஷ்யாவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரித்த இந்தியாவிற்கு இவையொன்றும் புதிதல்ல. வல்லவனுக்கு அடிபணிதல் நம் பாரம்பரியமே. ( Hugo Chavez மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையும் இங்கு பதித்து விடுகிறேன். :) )

இந்தக் கட்டுரையோடு வேறுபடுவது உலகமயமாக்கம் பற்றிய அதன் கருத்துக்களில். Protectionismஐ ஆதரிப்பதைப் போலத் தோன்றுகிறது அதன் தொனி. போட்டியிருந்தால்தான் தரம் உயரும் என்பது என் கருத்து. ஐம்பது வருடங்களாக ஒரே வகையானக் கார்களைத்தானே விற்றுக்கொண்டிருந்தார்கள், நம் உற்பத்தியாளர்கள்? இன்று ஏற்றுமதித் தரத்திலும் கார் உற்பத்திகள் முன்னேற்றமடைந்து விட்டதற்குக் காரணம் உலகளவிலானப் போட்டி நிலவுவதே.

 
At 3:08 PM, Blogger தெருத்தொண்டன் said...

VOW, கட்டுரையாளர் நம்மால் செய்ய முடிந்த தொழில்களில் பன்னாட்டு மூலதனத்தை ஆதரிக்காதவர்தான். அதனால் நீங்கள் குறிப்பிடும் தொனி அதில் தெரிகிறது.

//வல்லவனுக்கு அடிபணிதல் நம் பாரம்பரியமே// சு.ந.இருக்கு

 

Post a Comment

<< Home