Friday, October 07, 2005

தமிழ்நாட்டை விட்டு ஓடு

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை.

பிற ஊடகங்களுக்கு முன்பே வலைப்பதிவில் மிக நீண்ட விவாதம் நடந்து முடிந்துவிட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் குஷ்பூ விவாதம் தொடர்கிறது.

திண்ணையில் இருந்து விஸ்வாமித்ரா என்பவரது எழுத்தை நெய்வேலி விச்சு அவரது பதிவில் போட்டிருக்கிறார். விஸ்வாமித்ராவின் நோக்கில் வேறு காழ்ப்பு தெரிகிறது. அதற்கு பதிலாக குழலி ஒரு பதிவு போட்டிருக்கிறார். இன்று வந்த ஆனந்த விகடன் மற்றும் குமுதம் குஷ்பூவின் கருத்தை வெளியிட்டிருக்கின்றன.

ஆண் திமிர் அடக்கு என்று அ.மார்க்ஸ் தீராநதியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாராம். நான் இன்னும் படிக்கவில்லை.

தாமரை தலையங்கம் எழுதியிருக்கிறது.

ஞாநி "தீம்தரிகிட" இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்..

இதில் எனக்கு இருக்கும் உடன்பாடு, வேறுபாடு வேறு விஷயம். அ.மார்க்ஸ், ஞாநி, மாலன் போன்ற ஜனநாயக அடிப்படையிலான கருத்துப் போரை நான் ஆதரிக்கிறேன். விஸ்வாமித்ரா போன்றவர்களின் காழ்ப்பு அரசியலை நான் அறவே வெறுக்கிறேன்.

இங்கு ஞாநியின் பத்தியை பதிவு செய்கிறேன்.

குஷ்பு, கற்பு
தமிழ்நாட்டின் கற்பனை அரசியல்
ஞாநி

முதலில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்புக்கு நன்றி சொல்ல வேண்டும். திருமணமாகாத நகர்ப்புறத்து இளம் பெண்களின் பாலியல் பார்வை பற்றிய கருத்துக் கணிப்பின் மீது குஷ்புவிடம் கருத்து கேட்டதற்காக.

குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடந்திருக்கும் அராஜகங்களில், தமிழ்நாட்டு அரசியல் ஆம்பளை சிங்கங்கள் பலரும் அம்பலப்பட்டிருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதியின் "தமிழ் முரசு' பேரக் குடும்பம் முதல் இங்கிலீஷ் தாத்தா' ராமதாஸ், "எல்லாரும் விபசாரி' புகழ் தங்கர்பச்சான், "ஜக்கி பக்தர்' திருமாவளவன், நடிகர் சங்க கேப்டன்' விஜயகாந்த், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் என்று பலரும் தங்கள் ஆம்பளைத் திமிரை வெவ்வேறு விதங்களில் அம்பலப்படுத்திக் கொண்டார்கள்.

குஷ்புக்கு எதிர்ப்பைத் தூண்டிவிட்டது திரைமறைவில் யார் யார் என்பது தெரிய வராமலே போகலாம். ஆனால் "தமிழ்முரசு' பத்திரிகை தினசரி முதல் பக்கத்தில் குஷ்புக்கு எதிரான திரிப்பு வேலையை செய்தது. எந்த சன் டி.வி.க்கு ஆங்கிலப் பெயர் இருப்பதை நியாயப்படுத்தி அறிக்கை கொடுக்குமளவுக்கு பேரப் பாசம் கலைஞர் கருணாநிதிக்கு பொங்கி வருகிறதோ, அதே சன் டி.வி. குழுமம்தான் "தமிழ் முரசு' ஏட்டை தமிழர்களுக்காக "டக்கராக' நடத்திக் "காட்டிக்' கொண்டிருக்கிறது.

தன் பேரக் குழந்தைகளை டெல்லியில் (தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும்) ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிட்டு, இங்கே "டமில் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மருத்துவர் மாலடிமையின் குடும்பக் கட்சியின் மகளிர் அணிதான் குஷ்புவுக்கு எதிராக தமிழ்ப் பெண்களின் கற்பைப் பாதுகாக்க வழக்குகள் போட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்ஸ்.. பெரியார், அம்பேத்கர் மூவருமாக ஓருருவில் அவதரித்த ஜக்கி வாசுதேவரிடம் யோக நிஷ்டை பயின்ற திருமாவளவனுக்கு, திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதிக்காரர்கள் வீடு நோக்கியோ, மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள் வீடு நோக்கியோ, கழுதை ஊர்வலம் நடத்தத் தோன்றவில்லை. அவருடைய கட்சி மகளிர் அணி குஷ்பு வீட்டுக்கு கழுதை ஊர்வலம் நடத்துகிறது.

உழைத்த தொழிலாளி தினசரி பேட்டா கேட்டதை ஆதரித்த நடிகையை, காசுக்காக வேலை செய்யும் விபசாரியுடன் ஒப்பிட்ட "தமிழ் சினிமாவின் ஒரே அறிவுஜீவி' தங்கர்பச்சான், தன் படங்களில் எல்லாம் தான் தமிழ்ப் பெண்களின் கற்பையே போற்றி வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்து தங்கரை மன்னிப்பு கோரவைக்கச் செய்த நடிகர் சங்க கேப்டன், குஷ்பு வீட்டுக்கு கழுதை ஊர்வலம் சென்றதையோ, குஷ்புவை மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்ததையோ, நடிகர் சங்கத்துக்குள் துடைப்பக்கட்டைகளை வீசியதையோ எதிர்க்காமல் மௌனமாக இருந்து தானும் "ஆம்பள'தான் என்ற நிரூபித்திருக்கிறார்.

குஷ்பு சொன்னது என்ன? அவர் சொன்னதாக தமிழ் முரசும் மற்றவர்களும் சொன்னது என்ன?

"பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது'' என்று 23.9.05 இதழில் முதல் பக்கத்தில் தன் "பொய்யை'த் தொடங்கிய தமிழ் முரசு தொடர்ந்து "தமிழ்ப்பெண்கள் கற்பு இல்லாதவர்களா?' என்று தலைப்பிட்டு இந்த செய்திகளை வெளியிட்டு வந்தது.

ஆனால் இந்தியா டுடே இதழில் குஷ்புவின் பேட்டியில் ஒரு இடத்தில் கூட "தமிழ்ப் பெண்கள்' என்ற சொற்றொடரே கிடையாது. இந்தியா டுடே நடத்திய சர்வே நகரங்களை மட்டுமே பற்றியது. எனவே குஷ்புவின் பேட்டியிலும், "பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை, பெங்களூரை விட பின்தங்கியே இருந்தது. இப்போது சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள்'' என்று ஆரம்பிக்கிறது.

குஷ்புவின் கருத்தைத் திரித்து, இதில் தமிழ்ப் பெண்களின் கற்பு என்ற சொற்றொடரை ஏற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்தது தமிழ் முரசு. குஷ்பு பேட்டிக்கு "காலாவதியாகும் கற்பு' என்ற தலைப்பை இந்தியா டுடே அளித்தது வசதியாகப் போய்விட்டது.

குஷ்புவின் இந்தியா டுடே பேட்டியில் அவர் ஒன்றும் பெண்கள் திருமணத்துக்கு முன்னால் யாரோடும், பலரோடும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அப்படி அவர் சொன்னார் என்கிற பொருள் வருவது போல தொடர்ந்து பிரசாரம் நடத்தப்பட்டது, நடத்தப்பட்டு வருகிறது.

""என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல.... அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய் பிரண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்றுதான் குஷ்பு சொல்லியிருக்கிறார்.

திருமணத்துக்கு முன்னால் உறவு வைப்பதைப் பற்றி குஷ்பு சொன்னது என்ன?

"ஒரு பெண் தனது பாய் பிரெண்டைப் பற்றி உறுதியாக இருக்கும்போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம்... நான் காதலித்த நபரைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால், திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்'' என்று சொல்லியிருக்கிறார்.

குஷ்புவின் இந்த நேர்மை பாராட்டப்பட வேண்டியதே தவிர, கண்டிக்கப்பட வேண்டியது அல்ல. அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய ஏற்பாடு செய்த, தூண்டிய ஒரு அரசியல் தலை கூட இதே நேர்மையோடு தங்கள் காதல், திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேச மாட்டார்கள்.

குஷ்பு விஷயத்தில் இப்படி நடந்ததற்கு காரணம் என்ன? ஒவ்வொருவரின் உள்நோக்கமும் என்ன? அதில் ஏதாவது நியாயம் உண்டா?

தமிழ் முரசு திமுக தலைவர் குடும்பத்திலிருந்து வரும் பத்திரிகை. சன் டி.வியைப் போலவே அதுவும் தாங்கள் அடுத்து மாற்றி வெளியிட இருக்கும் தினகரனும் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டுமென்பது "நிதி'களின் விருப்பம். "தினமலர்' பின்பற்றிய அத்தனை மட்டரகமான உத்திகளையும் தாமும் பின்பற்றி அந்த இடத்தை அடைந்துவிடலாம் என்று நம்புகிறார்கள் என்பது பத்திரிகையைப் பார்த்தாலே தெரியும். தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கொச்சைப் படுத்துவதாக சொல்லும் இந்தப் பத்திரிகை பக்கத்துக்குப் பக்கம் தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, எல்லா பெண்களையும் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

சேலை தலைப்புகளை நீக்கிவிட்டு படம் வெளியிட்டு அவற்றுக்கு இவர்கள் தரும் தலைப்புகள் ஆபாசமானவை. இதைச் செய்யும் திறமையுள்ள தினமலர் உதவி ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தினகரன் தமிழ் முரசு வளாகத்தால் வலைவீசி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தினகரனில் பல்லாண்டுகளாகப் பணியாற்றியவர்கள் வேலையை விட்டு பல வழிகளில் துரத்தப்படுகிறார்கள். எந்த பத்திரிகையாளர் யூனியனும் இதைப் பற்றிவாயைத் திறக்கவில்லை.

பத்திரிகையாளர்களிடம் மனு வாங்காமல் முதலமைச்சர் ஜெயலலிதா சென்றதைக் கண்டித்து காரை மறித்துப் போராடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அப்போது அதை திரும்ப திரும்ப காட்டிய சன் டி.வி.தான் இப்போது தினகரனில் பத்திரிகையாளர்களை வேலையை விட்டு துரத்துகிறது.

தினமலரைப் போலவே தமிழ் முரசு பின்பற்றும் பத்திரிகை உத்திகள் தனி மனித உரிமை மீறல்களாகவும் உள்ளன. சென்னை பார்க் ஹோட்டலில் நடனக் களத்தில் ஜோடிகள் முத்தமிட்டுக் கொள்வதை அவர்கள் அனுமதியின்றி படம் எடுத்து வெளியிட்டது முற்றிலும் அராஜகமானது. அத்துமீறலானது.

இதுபோன்ற நடவடிக்கையை வெளி நாடுகளில் செய்தால், நஷ்ட ஈடு கோரி சம்பந்தப்பட்டவர்கள் போடும் வழக்கில் சன் டிவியே திவாலாகிவிடும். நம் நாட்டில் இத்தகைய தனி நபர் உரிமைகளுக்காக சட்டப்படி நீதி பெறக் கடும் முயற்சிகள் தேவை என்பதால், தப்பித்துக் கொள்கிறார்கள். (பொது மக்கள் எதிர்ப்பினால்தான் இதற்கு முன்பு இதேபோல கேண்டிட் கேமரா நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் நிறுத்த வேண்டி வந்தது.)

சன் டிவியின் எதிரி சேனலான ஜெயா டிவியின் முக்கிய ஸ்டார் குஷ்பு. அவருடைய இமேஜைக் குலைப்பது தொழில் போட்டிக்கு உதவக்கூடியதுதான். இப்படி தமிழ் முரசும் சன் டிவியும் குஷ்பு பிரச்னையை வியாபார உத்தியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது ஒரு புறம்.

அதை நடத்தும் குடும்பத்தின் கேடயமான திமுக கட்சி இந்தப் பிரச்னையை எப்படி பார்க்கிறது? கூட்டணிக் கட்சியான பட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி தெருவுக்கு வந்து போராடும் இந்த பிரச்னையில் திமுகவின் நிலை என்ன? வாயைத் திறக்கவில்லை.

இதைப் பெரிது படுத்த வேண்டாம் என்று "நிதி'த்தாத்தா "நிதி'ப் பேரன்களுக்கு சொன்னதாகவும் தெரியவில்லை. நிரூபிக்கப்படாத, நிரூபிக்கப்பட முடியாத பத்திரிகை வட்டார வதந்திகளின்படி வரவிருக்கும் தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக குஷ்புவை அதிமுக நிறுத்த திட்டமிட்டிருந்ததாம். ஜெயா டி.வி. மூலம் பெண்களிடம் கணிசமான செல்வாக்கு உடைய குஷ்புவுக்கு எதிராக பெண்களின் வாக்குகளை திருப்ப, இந்தியா டுடே பேட்டியை சன் டி.வி., தமிழ்முரசு முதலியன வாகாகப் பயன்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

சன் டி.வி., தமிழ் முரசு, குங்குமம் என்று தமிழ் நாட்டில் தொலைக்காட்சித் துறையையும், அச்சுத்துறையையும் மலினப்படுத்தும் வேளையில் ஈடுபட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கவிஞர் கனிமொழிதான். குஷ்பு சர்ச்சை தொடர்பாக அவர் "அவுட்லுக்' இதழில் பாலியல் உணர்வு பற்றிப் பெண்கள் பேசுவது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமாகாது என்றும் பண்பாட்டுச் சுமையை பெண்கள் மீதே சுமத்தும் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தும் கூறியுள்ளார்.

குஷ்புவுக்கு எதிராக ஏன் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தெருவுக்கு வரவேண்டும்? சினிமா துறையில் இருக்கும் தங்களுடைய முக்கிய ஆதரவாளரான தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்க வைத்ததாலும், அவரைக் கடுமையாக விமர்சித்ததாலும் குஷ்பு மீது இருக்கும் கோபமே காரணம் என்று கருதப்படுகிறது.

விஜய்காந்த் அரசியலில் நுழையும் தருணத்தில் சினிமாக்காரர்களின் மொத்தமான இமேஜை கொஞ்சம் காலி பண்ணுவது அவரையும் பலவீனப்படுத்த உதவும் என்பது இன்னொரு அரசியல் கணக்கு.

விஜய்காந்தும் "தமிழ்' பிம்பத்தைப் பயன்படுத்துபவர் என்பதால் தமிழ்ப் பெண்களின் கற்பு பக்கம் நிற்கப் போகிறாரா, அதை கொச்சைப்படுத்திய சக நடிகர் குஷ்பு பக்கம் நிற்பாரா என்ற தர்மசங்கடத்தை அவருக்கும் ஏற்படுத்தலாம். இந்த சிக்கலை உணர்ந்ததால்தான் விஜய்காந்த், நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் குஷ்பு சார்பாக எடுக்க வேண்டிய நிலையை எடுக்காமல் நழுவிவிட்டார்.

இந்த சர்ச்சையில் இவருடைய மௌனம் ஒரு டிராஜெடி என்றால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைமையின் அறிக்கைதான் காமெடி. குஷ்பு ஒரு முஸ்லிம் பெண்ணானாலும் அவரை நாங்கள் முஸ்லிமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். உலகளாவிய பார்வை இஸ்லாத்துக்கு உண்டு என்று சொல்லுகிறவர்களுக்கு குஷ்பு வட இந்தியப் பெண்ணாகத் தெரிகிறார். அவர் தமிழ் முஸ்லிம் பெண்ணாக இருந்தால் தமுமுக என்ன செய்யும்? அப்போதும் அவரை முஸ்லிமாக கருதவில்லை என்று சொல்லுமா? பாலியல் பிரச்னைகளில் குஷ்புவுக்கு நிகராக கருத்து தெரிவிக்கும் படைப்புகளை எழுதும் தமிழ் நாட்டு சல்மாவை தமுமுக ஏன் இன்னும் முஸ்லிம் அல்ல என்று அறிவிக்கவில்லை? யார் முஸ்லிம் என்ற நிர்ணயத்தை இவர்கள் எப்படி செய்கிறார்கள்? சோ "எங்கே பிராமணன்?'' என்று நிர்ணயித்த மாதிரியா?

திருமாவளனைப் பொறுத்தமட்டில் அரசியலில் எந்த அணியிலும் சேர்க்கப்படாமல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் அவருக்கு இப்போதைக்கு தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பதாகையின் கீழ் நின்றால் தான் பாமக ஆதரவு என்ற நிலையாவது மிஞ்சும். எனவே தமிழ்ப்பெண்களின் கற்பைக் கொச்சைப்படுத்திய வட இந்திய நடிகை குஷ்புவை எதிர்த்து தன் தமிழ்த் தன்மையை காட்டிக் கொள்ள அவர் முயற்சிக்கிறார். ஜக்கி வாசுதேவின் சீடர்களில் குஷ்புவும் உண்டு என்ற தெரிய நேர்ந்தால் என்ன செய்வார் என்ற தெரியவில்லை.

திருமாவளவனின் ஓட்டையான இந்த அரசியல் நிலைப்பாட்டுக்கு இதே பிரச்னையில் இன்னொருவரைப் பற்றிய அவரது மௌனமே நிரூபணம். குஷ்புவின் பேட்டி வெளியான அதே இந்தியா டுடே இதழில் அதே சர்வே தொடர்பான இன்னொரு கட்டுரையை எழுதியிருப்பவர் தலித் கவிஞரான சுகிர்தராணி. உண்மையில் குஷ்புவின் கருத்தை விடப் புரட்சிகரமான கருத்துகளைச் சொல்லியிருப்பவர் சுகிர்தராணி. கற்பு என்பதை பெண்ணுக்கு மட்டும் சொல்லி ஆணை அந்த வட்டத்துக்குள் வைக்காத இந்த சமூகத்தை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார்.

"கற்பு என்னும் சொல்லாக்கத்தை ஆண் பெண் இருபாலுக்கும் பொதுத் தன்மை உடையதாக இச்சமூகம் மாற்றட்டும். இல்லையேல் அச்சொல்லையே அழித்தொழிக்கட்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கற்பு, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை பெண்களிடம் மட்டுமே எதிர்பார்ப்பது எந்த சமூகத்திற்கும் அழகல்ல. அவசியமும் அல்ல' என்று அழுத்தந்திருத்தமாக சுகிர்தராணி சொல்லியிருப்பதைப் பற்றி திருமா வாயையே திறக்காதது ஏன்? குஷ்புவைப் பற்றி மட்டும் குமுறுவது ஏன்? ஏன் துடைப்ப ஊர்வலம் சுகிர்தராணி வீடு நோக்கிச் செல்லவில்லை? ஆளுக்கொரு நீதியா?

குஷ்புவை விமர்சித்தவர்கள் எல்லாருக்கும் அடிப்படைப் பிரச்னையே இவர்கள் தங்களை மனிதர்களாகக் கருதாமல், ஆண்களாகவே கருதி வருவதுதான்.

"அழகி', "தென்றல்', "சொல்ல மறந்த கதை' போன்ற "புரட்சிகரமான' தமிழ்ப் படங்களை உருவாக்கிய தங்கர்பச்சான் அளித்த பேட்டி இந்த அடிப்படை உண்மையை வெளிப்படுத்திவிடுகிறது.

"குமுதம் ரிப்போர்ட்டரி'ல் அவர் சொல்லியிருக்கிறார். "ஒரு ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும். ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை என் திரைப்படங்கள் மூலம் பதிவு செய்து காட்டியிருக்கிறேன். குறிப்பாக எனது "தென்றல்' படத்தில் தாலி இல்லாமல் கூட, இந்த சமூகம் புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும் தன் மனதைப் பறிகொடுத்தவன் நினைவிலேயே வாழ்ந்த பெண்ணை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்போது வெளியாகியிருக்கும் "சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' படத்தின் ஹீரோயின் கூட பல சூழல்களிலும் தடம் புரளாமல் கற்பு நெறியோடு வாழ்வதைத்தான் எடுத்துக் காட்டுகிறேன். நம் தமிழர்களின் கலாச்சாரத்தை, தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மட்டுமே நான் பதிவு செய்து வந்திருக்கிறேன். அப்பேர்ப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் நேர்ந்துவிட்டது' என்கிறார்.

இவருக்கு என்ன அவமானம் நேர்ந்தது? நடிகைகள் காசுக்காக வேலை செய்வதும் விபசாரம் தான் என்ற அரிய பொன்மொழியை உதிர்த்து அதற்காக மன்னிப்பு கேட்க நேர்ந்தது அவமானம் என்று, படம் ரிலீசாவதற்கு முன்பு மன்னிப்பு கேட்டவர் ரிலீசுக்குப் பின் சொல்வது ஏன்?

பாலியல் சுதந்திரம், பாலியல் உரிமை என்பது ஆணுக்கு மட்டுமே உரியது. பெண்ணுக்கு இல்லை என்றே இவர்கள் சொல்ல வருகிறார்கள். இதைத் தன்னை ஆணுக்கு சமமான மனிதப்பிறவியாக கருதும் எந்தப் பெண்ணும் ஏற்கமாட்டாள்.

இதுதான் தமிழ்ப் பண்பாடு என்கிறார்கள். இதை வரலாறு ஏற்காது. திருமணம் என்ற சடங்கை, தாலி கட்டுதல் என்ற சாங்கியத்தை உருவாக்கும் முன்னால், தமிழ்ச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவில்லையா? சேர்ந்து வாழாமலா தமிழரும் தமிழும் இத்தனை காலம் தழைத்தார்கள்?

இலக்கியம் சொல்லும் "களவு' என்பது என்ன? பெற்றோரும் உற்றாரும் ஊராரும் நடத்தாத திருமணம், இருவர் தமக்குள் தாமே நடத்திக் கொண்ட "திருமணம்' என்பது என்ன? அது premarital sex ஆகாதா? அகநானூறும் குறுந்தொகையும் பேசுவது எல்லாம் திருமணத்துக்குப் பின் செக்ஸா? தங்கர் பச்சானுக்கு சொந்த அப்பா போல விளங்குகிற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்துத் தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து விளைந்தவை?

இந்தியா டுடே வெளியிட்டது நகரப் பெண்களின் பார்வை பற்றிய கருத்துத் தொகுப்புதான். ஆனால் தமிழகத்தில் கிராமங்களில் பணியாற்றும் சமூக சேவை அமைப்புகள் பலரும் தெரிவிக்கும் உண்மை என்ன? வளர் இளம் பருவம் எனப்படும் adoloscent பருவத்தில் பாதுகாப்பான உடலுறவு (safe sex) பற்றி தெரியாமல் நிறைய பெண்கள் கருவுற்று கருச்சிதைவுக்கு வரும் சிக்கல் தமிழ் கிராமங்களில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆண் பெண் உறவை, கற்பின் பெயரால், கண்ணகியின் பெயரால் சிக்கலாக்கி வைத்திருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்புதான்.

அதிலிருந்து பெண்ணை விடுவிக்கும் குரல் முதலில் நகரங்களிலிருந்துதான் கல்வியின் விளைவால் எழும். அந்தக் குரலை நசுக்க ஆணாதிக்கவாதிகள் கிராமப் பெண்களையும், கல்வி பெறாத பெண்களையும் ஆணுக்கு சேவை செய்வதே தன் பிறவிப்பயன் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட அடிமைப் பெண்களையும் கேடயமாகப் பயன்படுத்துவார்கள்.

குஷ்பு சர்ச்சையில் குஷ்புவை எதிர்க்கும் விமர்சிக்கும் எல்லாரும் நமக்கு உணர்த்துவது என்ன? ""தமிழ் பண்பாடு என்பது தமிழ்ப் பெண்களின் கற்பில்தான் இருக்கிறது. தமிழ் ஆணுக்கு கற்பு கிடையாது. தேவையில்லை.''

கற்பு என்பது என்ன? பெண்ணின் கன்னித்தன்மையா? அவள் உடலிலா கற்பு இருக்கிறது.
இல்லை. கற்பு என்பது ஒழுக்கம், நேர்மை, அது மனமும் அறிவும் உணர்ச்சியும் சார்ந்தது. செக்ஸ் மட்டுமல்ல, மனித செயல்பாடு எல்லாவற்றுக்கும் இந்தக் கற்பு.

அது சுகிர்தராணி சரியாகவே சொன்னதுபோல, ஆண், பெண் இருவருக்கும் தேவையானது, பொதுவானது. ஆனால் கற்பு பெண்ணுக்குத் தான் ஆணுக்கு அல்ல என்று சொல்லும் இவர்கள் இப்போது அதையே நிரூபித்திருக்கிறார்கள். தாங்கள் நேர்மையற்றவர்கள் என்பதை.

தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பைக் கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால், கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

"தமிழ் நாட்டை விட்டு ஓடு''.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

28 Comments:

At 12:07 AM, Blogger குழலி / Kuzhali said...

This comment has been removed by a blog administrator.

 
At 12:11 AM, Blogger PKS said...

I read this post, after reading similar post by Rajni Ramki. Thanks for the entire article.

Regards, PK Sivakumar

 
At 12:13 AM, Blogger குழலி / Kuzhali said...

தங்கர் பச்சானின் குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த அந்த பேட்டி மடத்தனமானது இந்த காரணத்திற்காக தங்கர் பச்சானை எதிர்த்து குரல் கொடுப்பது நியாயமானதும் கூட (ஆனால் அதற்கு முந்தைய பேட்டியில் நடிகர்,நடிகைகள் மிகை உணர்ச்சி காண்பித்தார்கள் என்பது தான் இப்போதும் என் கருத்து),

ஆனால் ஞானி குறிப்பிட்ட எந்த தலைவரும் கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் ஆணுக்கு இல்லை என்று கூறியதாக தெரியவில்லை... குறைந்தபட்சம் குஷ்பு பிரச்சினையில் கூட ஆண்கள் எல்லாம் எங்கே வேண்டுமானாலும் போங்க, பெண்கள் மட்டும் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டுமென்று கூறியது போல தெரியவில்லை.

இதை படித்தால் என்னமோ குஷ்புவை எதிர்த்த அத்தனை பேரும் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பெண்களுக்கு மட்டுமே ஒழுக்க குறியீடுகள் பொருந்தும் என்று வலியுறுத்தியது போல் உள்ளது

என்னை பொறுத்தவரை ஒழுக்க குறியீடுகள் பெண்களுக்கு மட்டுமே என்று கூறாத சமயத்தில் இப்படி பொருள்பட எழுதியிருப்பதே திரிப்பாகத் தான் கருதுகின்றேன்.

 
At 12:54 AM, Blogger முகமூடி said...

நல்லதொரு பதிவு தெருத்தொண்டன். இதில் உள்ள உண்மைகள் "ஆனாலும்" என்ற அள்வில் பார்க்கப்படும் போது சரியாக தெரியது என்பதையும் நீங்கள் டிஸ்க்ளெய்மராக சேர்த்திருக்கலாம்

 
At 12:59 AM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஞாநி இப்படி எழுதியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் திருமாவளவன் திண்ணியம் வன்கொடுமையை எதிர்க்கவில்லை என்ற தொனி தேவையற்றது.அது போல் யோகம் பயில்வது அவரவர் விருப்பம்.கலைஞர் கூட தேசிகாச்சாரியரின் மாணவர்தான் இதில். அதற்காக அவர்
தேசிக்காசாரியார் அல்லது அவரது தந்தை பின்பற்றும் தத்துவம், மதச்சடங்குகளை பின்பற்றுபவர் என்று பொருள் கொள்ள முடியாது. இப்படி விமர்சிக்க ஆரம்பித்தால் யாரையும் இது போல்
விமர்சிக்க முடியும்.

ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இதை வைத்து தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் தவிர இதில் டாக்டர்.நாராயண ரெட்டியும் ஜூ.வி யில் கருத்துக் கூறியிருக்கிறார், நாகரத்தினம் தன் வலைப்பதிவில் சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் குஷ்புவை சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாது, முடியாது. ஞாநி,மாலன் போன்றவர்கள் இதைத்தான்
செய்கிறார்கள். இறுதியில் குஷ்பு சொன்னதை விட அவரை விமர்சித்தவர்களை நீ இப்படி, அவன்
அப்படி என்று விவாதம் நடக்கிறது. போகிற போக்கில் இந்த அறிவு ஜீவிகள் குஷ்பு உரிமைப் பாதுகாப்புக் குழு அமைக்கக்கூடும்.

 
At 1:41 AM, Blogger neyvelivichu.blogspot.com said...

gnaaniyin katturaiyai pathivittathaRkku nanRi.

viswamitra ezhuthiya karuththu eeRkanavee mugamUdiyin thuuyavargaL pathivil pinnUttamidappattirukkiRathu. ittavar kaanchi films.

enakkum viswamitra keetpathil oru karuththil opputhal uNdu. periyaarum ithee karuththaik kURum pothu, kushbuvai thamiznaattai vittu oodach chollum anbargaLin arasiyal nilaip paaduthaan enna..

enakkum periyaarin peN viduthalaik karuththukaLil aarvam uNdu.. thirumaNam enpathu sadanggaga illaamal manathin iNaippaga irukkaveeNdum enpathilum opputhal uNdu.

anbudan vichchu
neyvelivichu.blogspot.com

 
At 6:54 AM, Blogger துளசி கோபால் said...

'தமிழ்ப்பண்பாடு'ன்னு கூச்சல் போடற அரசியல்வாதிகளிலே ச்சின்னவீடு, அதுக்கும் ச்சின்னவீடுன்னு
குட்டிக்குட்டி வீடுங்க இல்லாத 'தலை'களை விரல் விட்டு எண்ணிரலாம்.

'ஒருவனுக்கு ஒருத்தி' தானே இந்தத் தமிழ்ப்பண்பாடுன்றது.

இதுலே அந்த வீடுகளுக்கு வெவ்வேறு பெயர்வேற இலக்கியமா வச்சுக்கறாங்க.
துணைவி, மனைவி, தோழி,பார்ட்னர் ......இப்படி.

உண்மைச் செய்திகளை மறைத்து, மக்களின் மூளையை மழுங்கடிக்கறதுக்குன்னே இருக்கே
இவுங்க பத்திரிக்கைக்களும், டி.வி. சேனல்களும்.

எங்கே போய் முட்டிக்கறது?
மொதலாவது குஷ்பூ சொன்னதையாவது எந்த சூழலிலே, எதுக்காக அப்படிச் சொன்னாங்கன்னாவது
முழுசா வெளியிட்டாங்களா?
அவுங்களுக்குச் சாதகமா ஒரு ரெண்டு வார்த்தைகளை எடுத்துக்கிட்டு அதை வச்சு விளையாடிட்டாங்கப்பா.

 
At 7:36 AM, Blogger b said...

சில விஷயங்களைப் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதற்கு தங்கர், குஷ்பூ சம்பவங்களே சாட்சி.

மற்றபடி ரவிஸ்ரீனிவாஸ் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

 
At 8:45 AM, Blogger குழலி / Kuzhali said...

//'தமிழ்ப்பண்பாடு'ன்னு கூச்சல் போடற அரசியல்வாதிகளிலே ச்சின்னவீடு, அதுக்கும் ச்சின்னவீடுன்னு
குட்டிக்குட்டி வீடுங்க இல்லாத 'தலை'களை விரல் விட்டு எண்ணிரலாம்.
//
துளசியக்கா நீங்க இதை இரண்டாவது முறையாக பின்னூட்டுவதால் கூறுகின்றேன்... நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்(கலைஞரா?) என்று தெரியவில்லை, மருத்துவர் இராமதாசு ஒரே மனைவியுடன் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்பவர், தொல்.திருமா இன்னும் திருமணமாகாமல் இயக்கமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார், இவர்களின் தனி மனித ஒழுக்கத்தை பற்றி இது வரை பத்திரிக்கைகளில் கிசு கிசு வாக கூட வந்ததில்லை, இங்கு நான் கூறுவது வெறும் பத்திரிக்கை செய்தியை வைத்து மட்டுமல்ல, அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் சிலர் நமக்கு தெரிந்தவர்கள் என்ற முறையிலும் கூறுகின்றேன்.

 
At 9:14 AM, Blogger குழலி / Kuzhali said...

ஆனாலும் என்ற அளவில் பார்ப்பது இரண்டு கோணங்களையும் பார்ப்பது, எல்லாவற்றையும் காழ்ப்புணர்ச்சி என்ற மட்டையான single agenda வோடு அணுகுவதில்லை...

புரிபவர்களுக்கு புரிந்தால் சரி, சே... இதுக்கெல்லாம் நேரம் செலவு செய்து புரிந்தால் சரின்னு சொல்கின்றேன் பாருங்க, அது எப்படி புரியும் அதான் ஏற்கனவே single agenda வில் தானே இருக்கார், நீங்க நடத்துங்க சாரே.

 
At 9:18 AM, Blogger தெருத்தொண்டன் said...

ரவி ஸ்ரீனிவாஸ்:
//இறுதியில் குஷ்பு சொன்னதை விட அவரை விமர்சித்தவர்களை நீ இப்படி, அவன்
அப்படி என்று விவாதம் நடக்கிறது//
குஷ்பூ மீது வைக்கப்படும் விமர்சனம் என்ற அளவில்தான் இருக்கிறதா? சினிமா, அரசியல் தொடர்புடைய விஷயமாக இது மாறிவிட்டதால் ஊடகங்கள் விட மறுக்கின்றன. தமிழகத்தில் வாழும் உரிமையை குஷ்பூவுக்கு பெற்றுத் தர குஷ்பூ உரிமைப் பாதுகாப்பு குழு அமைக்க நேரிட்டாலும் நேரிடலாம். நீங்கள் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறீர்கள்.

//ஆனால் திருமாவளவன் திண்ணியம் வன்கொடுமையை எதிர்க்கவில்லை என்ற தொனி தேவையற்றது.// உடன்படுகிறேன். நண்பர் ஞாநி திருவாசகத்திலும் இதே நிலையில் தான் எழுதினார்.(ஞாநி உளறினார் என்று சில நண்பர்கள் வெளிப்படுத்தும் தங்கள் பிரபுத்துவ மேதாவிலாசத்தை என்னால் ஏற்க இயலவில்லை). இந்தப் பத்தியிலும் கூட குஷ்பூ மூலம் தொடங்கிய கற்பு என்பது கற்பிதமா என்பது குறித்த விவாதத்தில் அவர் இறங்கவில்லை. அரசியல் செய்வோரின் அரசியலை அம்பலப்படுத்தவே அவர் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனாலேயே ஜக்கி வாசுதேவின் சீடராக திருமாவை விளிக்கும் நிலைக்கு அவர் போயிருக்கக் கூடும்.

 
At 9:26 AM, Blogger தெருத்தொண்டன் said...

குழலி:
வருகைக்கு நன்றி. // என்னை பொறுத்தவரை ஒழுக்க குறியீடுகள் பெண்களுக்கு மட்டுமே என்று கூறாத சமயத்தில் இப்படி பொருள்பட எழுதியிருப்பதே திரிப்பாகத் தான் கருதுகின்றேன்.// தூங்குவது போல் பாசாங்கு செய்கிறீர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நடைமுறையில் பெண்களைத்தவிர யாருக்கு அவை வலியுறுத்தப்படுகின்றன?

பிகேஎஸ்: நன்றி..மீண்டும் வருக!

 
At 9:30 AM, Blogger தெருத்தொண்டன் said...

முகமூடி: பதிவு ஞாநியுடையது. என்னுடையதாக இருந்தால் ஆழ்பதிவா என்று உங்களிடம் ஒரு சான்றிதழ் வாங்கியிருப்பேன். வழக்கமான ஒரு மீள்பதிவு என்று மறுமொழியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

 
At 9:38 AM, Blogger தெருத்தொண்டன் said...

மூர்த்தி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மணவாழ்க்கைக்கும் பதவி உயர்வுக்கும் வாழ்த்துக்கள்.

துளசி கோபால்: உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கு நண்பர் குழலி பதில் அளித்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை உங்களைப்போல் குற்றம் சாட்டவும் அவரைப்போல் நம்பிக்கை வைக்கவும் நான் தயாரில்லை. அவர்களது அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுடன் நான் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

 
At 9:46 AM, Blogger தெருத்தொண்டன் said...

விச்சு: விஸ்வாமித்ரா கருத்தில் பெரியாருக்கு எதிரான உணர்வே தூக்கலாக எனக்குத் தெரிந்தது. ஒரே நேரத்தில் த.பா.இ, குஷ்பூ, பெரியார் எல்லார் மீதும் சேறை அடித்துவிட்டு, இந்துத்துவ மரபுகளின் படியான குடும்ப அமைப்பைத்ட் தூக்கிப் பிடிக்கும் தொனி தெரிந்தது. எப்படி, ஏன் என்று கேள்விகளும் பதில்களும் நீளமாகப் போகக் கூடியவை.

 
At 9:47 AM, Blogger குழலி / Kuzhali said...

This comment has been removed by a blog administrator.

 
At 9:48 AM, Blogger குழலி / Kuzhali said...

// தூங்குவது போல் பாசாங்கு செய்கிறீர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நடைமுறையில் பெண்களைத்தவிர யாருக்கு அவை வலியுறுத்தப்படுகின்றன?
//
தெருத்தொண்டன், பொத்தாம் பொதுவாக இந்த தலைவர்களின் மீது ஆணாதிக்க குற்றசாட்டு சுமத்துவது எப்படி என்று புரியவில்லை, எங்கேயாவது பெண்களுக்கு மட்டுமே என்று இந்த ஒழுக்க குறியீட்டை வலியுறுத்துகின்றனரா? இல்லையே பிறகு எதற்கு இந்த குற்றசாட்டு.

இராமதாசும்,திருமாவும் சில நாட்களுக்கு முன் கூட்டாக அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே

//நடிகையின் கருத்தை ஆதரிப்பவர்கள் சமுதாயத்தில் எந்த கருத்தை பரப்ப முனைகின்றார்கள்? எந்த பின்னனியில் எத்தகைய கட்டுப்பாடுகளில் எந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து இளம் தலைமுறையினர் வளர்க்கப்படவேண்டும் என்று போதிக்க விரும்புகிறார்கள்? நவநாகரீகம்,புதிய கலாச்சாரம் என்ற போர்வையில் நம் இளம் தலைமுறையினர் இந்த நடிகை சொல்வதுபோல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று போதிக்க விரும்புகிறார்களா?
//

//சுதந்திரம் என்ற பெயரில் இளைஞர்கள் இளம்பெண்களுடன் குடிப்பது, ஆடுவது யாரை வேண்டுமானாலும் கட்டிப்பிடித்து ஆடுவது தான் சுதந்திரமா?
//

//இளைஞர்களின் சிந்தனையை குட்டிச் சுவராக்க கூடிய கெடுக்கும் முடிவுடன் வெளிவரக்கூடியவற்றை எதிர்க்கின்றோம்.
//
பேட்டியில் எந்த இடத்திலும் பெண்களுக்கு தான் ஒழுக்க குறியீடுகள் என்று அவர்களும் சொல்லவில்லை, இது வரை குஷ்புவை எதிர்ப்பவர்களும் சொல்லவில்லை, பேட்டியில் இளைஞர்கள், இளம் தலைமுறையினர் என்று தான் கூறுகின்றனர், இதில் ஆண்களும் அடக்கம் தானே, தொடர்ந்து இப்படி குற்றம் சுமத்துவது திரிப்பு தான் என்பதைத் தவிர வேறில்லை.

 
At 10:07 AM, Blogger தெருத்தொண்டன் said...

//பேட்டியில் எந்த இடத்திலும் பெண்களுக்கு தான் ஒழுக்க குறியீடுகள் என்று அவர்களும் சொல்லவில்லை, இது வரை குஷ்புவை எதிர்ப்பவர்களும் சொல்லவில்லை, தொடர்ந்து இப்படி குற்றம் சுமத்துவது திரிப்பு தான் என்பதைத் தவிர வேறில்லை. //

இருக்கும் நிலையை அப்படியே நீடிக்க விரும்புகிறார்கள். இந்து தர்மத்தின் பெயரிலோ தமிழ்ப் பண்பாட்டின் பெயரிலோ நாம் போதிக்கப்பட்ட குடும்பம் என்ற கருத்துக்களின் அடிப்படையில் பேசுகிறார்கள். அந்த அடிப்படையே ஆண்களுக்கு சாதகமாக ஆண்களால் பெண்களுக்கு இடப்பட்ட விலங்கு என்பதே இதற்கான மாற்றுக் கருத்து என்று நான் புர்ந்து கொள்கிறேன்.
எனவே நிலவும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்று சில அறிஞர்களால் அறியப்படும் பண்பாட்டை முன்னிறுத்தும் ஒரு அரசியல் தலைமை இரு பாலார்க்கும் நீதி வழங்குவதாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்ப் பண்பாடு என்று இன்று சொல்லப்படுவது எந்தக் காலத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று வேறு ஒரு பதிவில் கொழுவி பொருள் பதிந்த கேள்வி ஒன்றைக் கேட்டதாக நினைவு. அந்தக் கேள்வியில் தான் இருக்கிறது உண்மையான அரசியல் என்று கருதுகிறேன்.

அட, ஏன் குழலி, ஏதேதோ பதில் சொல்ல வைத்து என் மாதிரி சாதாரணத் தொண்டனையும் ஆழ்பின்னூட்டமிடுபவர் பட்டியலில் சேர வைத்து விடுவீர்கள் போலிருக்கிறது.

 
At 10:25 AM, Blogger குழலி / Kuzhali said...

// நிலவும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்று சில அறிஞர்களால் அறியப்படும் பண்பாட்டை முன்னிறுத்தும் ஒரு அரசியல் தலைமை இரு பாலார்க்கும் நீதி வழங்குவதாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
//
இப்போ சொன்னிங்களே இது நியாயமான பேச்சு, இந்த அளவீட்டில் தான் எல்லோரும் அந்த தலைவர்களை விமர்சிக்கின்றார்கள் என்றால் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் மட்டுமல்ல அத்தனை பேரும் தான்...

ஆனால் எனக்கென்னமோ நீங்கள் கூறிய இந்த அளவீட்டை வைத்து தான் இந்த தலைவர்களை எதிர்க்கிறார்கள் என்று நம்ப நான் தயாராக இல்லை.

 
At 10:54 AM, Blogger தாணு said...

தெருத்தொண்டன்,
இத்தனை விவாதங்களுக்கும் மூல காரணம் என்ன தெரியுமா? குஷ்பூவின் அழுகையும், மன்னிப்புக் கோரலும்தான். தான் தவறாகச் சொல்லாத பட்சத்தில், தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு அமைதியாக இருந்திருக்கவேண்டும். கோர்ட் கேஸ் என்ற பயமோ, குடும்பத்தினரின் நிர்ப்பந்தமோ கூட அவங்களை பலவீனப் படுத்தியிருக்கலாம். ஒரு கிரிடிகலான சமயத்தில் நன்கு வழிநடத்தக்கூடிய நட்பு இல்லை போலும்.

ஓடற நாயைக் கண்டால் துரத்துற நாய்களுக்கு இன்பம் அதிகம்தான். சொல்லாத விஷயத்துக்கு மன்னிப்பு கேட்கும்போதே, ஒருவேளை அப்படித்தான் சொல்லப் பட்டிருக்குமென்ற அடிப்படையிலேயே அத்தனை சலம்பல்களும்.

ஒரு தனிமனித விமர்சனம், அதுவும் பொதுப்படையான கருத்து பற்றி இத்தனை அலட்டல்கள் காட்டும் பத்திரிகைகள் செய்வது எத்தனை காட்டுமிராண்டித்தனம்? போலீஸும், மருத்துவர்களும், அரசியல்வாதிகளும்,மற்றும் பொதுவாழ்வில் உள்ளவர்களனைவரும் அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளில் படுத்தப்படும் அவலம் கொஞ்சமா? எங்கள் இனத்தையே கேவலப் படுத்திவிட்டார்கள் என்று, அவர்கள் சார்பாக வழக்குகள் ஒவ்வொரு நீதிமன்றத்தில் பதிவு செய்யலாமா? பத்திரிகை ஆசிரியர்கள் நீதிமன்ற வாசலிலேயே கிடக்கும்படி வழக்கு போட முடியாதா? ஒரு பத்திரிகைக்கு உள்ள எழுத்து சுதந்திரம் கூட ஒரு தனி நபர் கருத்துக்கு இல்லாத போது, என்ன ஜனநாயக மரபுகள் வேண்டியிருக்கு. சர்வாதிகாரம்தான் நம் நாட்டுக்கு தேவை போலும்.
கற்பு எனப்படும் தர்க்கத்துக்குரிய விஷயத்தைத் தனிமனித முத்திரை குத்தி ஆபாசப்படுத்துவதே ஊடகங்களின் சமீபத்திய பொழுதுபோக்காகிவிட்டது. அதிலிருந்து வெளியே வர யாருக்கும் விருப்பமில்லை, தெருத்தொண்டனையும் சேர்த்து.

 
At 10:54 AM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

தெருத்தொண்டன்,
ஞாநியின் கட்டுரையை தட்டச்சு செய்து பதிவு செய்ததற்கு நன்றி. சில கருத்துக்களோடு உடன்பட முடியாவிட்டாலும் குஷ்புவின் சொற்களை மேற்கோள் காட்டி விரிவாக அலசியிருக்கிறார்.

கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குஷ்புவின் அரசியல் பிரவேச கிசுகிசுவை ஒரு நண்பர் மூலம் அறிந்தேன். குஷ்புவை அதிமுகவில் சேர்த்து, முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்கப்போகும் திட்டம் கசிய, சம்பந்தப்பட்ட இந்தியா டுடே பேட்டி வெளிவந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு 'தமிழ் முரசு' இதை தலைப்புச் செய்தியாக வெளியிட்ட பிறகே இந்த விஷயம் சூடு பிடித்ததாம். பாமகவும், தலித் சிறுத்தைகளும் இந்த விவகாரத்தைக் தங்கர்பச்சான் பிரச்சினையின் பின்னணியை வைத்து கையிலெடுக்க திமுக இதில் குளிர் காய்ந்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். இந்த சர்ச்சை சன் தொலைகாட்சிச் செய்திகளில் பிரதானமாகக் காட்டப்படுவதாகவம் சொன்னார். இணையத்திலும், இங்கிலீஷிலும் மாலன் தொல்காப்பியத்தில் தொடங்கி பெரியார் வரை மேற்கோள் காட்டி மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். எங்கெங்கு எதெது விற்கிறதோ அதை விற்பது தான் வியாபார தர்மம் போலிருக்கிறது. மொத்தத்தில் கெட்டது குஷ்புவின் அரசியல் ஆசை. பாமக, விசி கட்சிகளின் பெயர். மற்றவர்கள் ஆர்வத்தோடு நின்று குளிர் காய்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

 
At 10:59 AM, Blogger கொழுவி said...

பதிவுக்கு நன்றி தெருத்தொண்டன்.

//தமிழ்ப் பண்பாடு என்று இன்று சொல்லப்படுவது எந்தக் காலத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று வேறு ஒரு பதிவில் கொழுவி பொருள் பதிந்த கேள்வி ஒன்றைக் கேட்டதாக நினைவு. அந்தக் கேள்வியில் தான் இருக்கிறது உண்மையான அரசியல் என்று கருதுகிறேன்.//

இதைத்தான் நான் இப்போதும் பண்பாட்டுக் காவலர்களிடம் கேட்கிறேன். பண்பாடு, கலாச்சாரக் கூச்சல் போடும் அரசியல்வாதிகளும் சரி, அவர்களுக்கு ஆதரவாக (இதை, அவர்களின் கருத்துக்கு ஆதரவாக என்றும் வாசிக்கலாம்) கதைப்பவர்களும் சரி அந்தக்காலப்பகுதியைக் குறித்துவிட்டு மேற்கொண்டு பேசலாம். அதைவிட்டுவிட்டு சும்மா பண்பாட்டுச் சளாப்பல்களை அள்ளிவிடுவதில் பிரியோசினமில்லை.

என் புரிதல்படி இப்போது வலைப்பதிவுகளில் 'பண்பாட்டுக்கலாச்சாரக் கூச்சல்கள்' சற்று ஓய்ந்திருப்பதாகப் படுகிறது. உண்மைதானா?

 
At 11:00 AM, Blogger தெருத்தொண்டன் said...

உண்மை குழலி. ஆழ் கிணற்றில் இறங்காமல் இருக்க இயன்றவரை முயன்றேன். நீங்கள் விடவில்லை.
// ஆனால் எனக்கென்னமோ நீங்கள் கூறிய இந்த அளவீட்டை வைத்து தான் இந்த தலைவர்களை எதிர்க்கிறார்கள் என்று நம்ப நான் தயாராக இல்லை.// ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். " ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து ஒரு பெண் ஜீன்ஸ், டிசர்ட்டில் வெளி வந்தால் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதம் என்று தாக்கப்படக்கூடும்" என்று கனிமொழி அச்சம் தெரிவித்து இன்னும் பேசியிருக்கிறார். ஆம்பிளை சிங்கங்கள் அவரை எதிர்த்துப் போராடுவார்களா? அவரவர்கள் நோக்கம் அவரவர்க்கு.. இதில் நீங்கள் தலைவர்களை எதிர்ப்பவர்களின் "போலித்தனத்தை" அம்பலப்படுத்த நினைக்கிறீர்கள். வேறு சிலர் தலைவர்களின் உள்ளீடற்ற அரசியலை (முகமூடி கவனிக்கவும்,ஆழ்பதிவு) அம்பலப்படுத்த முயல்கிறார்கள். இதில் திமுக, அ.இ.அதிமுக, காங், இடதுசார்கள் மௌனத்திற்கு என்ன காரணம்? அதற்கும் அவரவர் விருப்பத்திற்குத் தகுந்தவாறு விளக்கம் தரக் கூடும்.

உண்மையான பிரச்னைகள் என்று அவர்கள் கருதும் பிரச்னைகளில் இருந்து சில ஊடகங்கள் மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டன என்று விமர்சனம் செய்துவிட்டு இந்த விஷயத்தை வேடிக்கை பார்க்கும் நண்பர்களும் உண்டு. உலகமயமாக்கல் கொண்டுவரும் பண்பாட்டிற்கும் நிலவுடைமையாளர்களின் பண்பாட்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருவதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன என்று இரண்டு "லார்ஜ்"களுக்குப் பிறகு பேசிக் கலையும் நண்பர்களும் இருக்கிறார்கள். சில கேள்விகள் மூலம் சில கோணங்களை பிறர் சிந்தனைக்குக் கொண்டு வருவதைத் தாண்டி எனக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. எங்கும் எதையும் நிறுவ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற 'வாத்தியார்" பாட்டு தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். (அதை நான் வேறொரு பெரியவரின் கருத்தாகச் சொன்னால் – பகுத்தறிவாகச் சொன்னால் – விவாதங்கள் வளரும். எனவே என்னைப் போன்ற தெருத் தொண்டர்களுக்கு வாத்தியார் பாடல்கள் தான் வழிகாட்டி) . டென்ஷனாயிடாதீங்க குழலி.. கறுப்பு வாத்தியார் என்னை ஈர்க்கவில்லை. அப்பா..ஏதவது ஒரு புள்ளியில் குழலியோடு கருத்தொற்றுமை கொண்டுவிட வேண்டும் என்று எழுதிக் கொண்டே வந்தேன். திடீரென கிடைத்து விட்டது!

 
At 11:12 AM, Blogger தெருத்தொண்டன் said...

சுந்தரமூர்த்தி: நன்றி. டெக்கான் கிரானிக்கலில் இந்துத்துவம் சமூகத்தில் திணித்தது சாதியும் கற்பும் என்று தனது நிலையைச் சரி செய்து கொண்ட திருமாவளவன் இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு மருத்துவர் ராமதாசுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்." பெண்கள் நிறைந்த அவையில் குஷ்பூ மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்ற கோரிக்கையை திறந்த முனைகளுடன் எழுப்பி விட்டு கலைந்து விட்டார். இது குறித்தும் பலவிதமான யூகங்கள் உலவுகின்றன. எப்போது வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம். 2006 சட்டப் பேரவைத் தேர்தல் முடியும் வரை இதே நிலை நீடித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. உங்கள் கற்பை இழித்துப் பேசியவரை ஆதரிப்பவர்க்கா உங்கள் ஓட்டு என்று தெருமுனைக் கூட்டங்களில் அர்ச்சனைகள் நிகழலாம். தலைவர் அப்படி வெளிப்படையாக பேசினாரா என்று சப்பைக்கட்டு கட்டலாம்.

 
At 11:21 AM, Blogger தெருத்தொண்டன் said...

கொழுவி:
// என் புரிதல்படி இப்போது வலைப்பதிவுகளில் 'பண்பாட்டுக்கலாச்சாரக் கூச்சல்கள்' சற்று ஓய்ந்திருப்பதாகப் படுகிறது//
சுந்தர மூர்த்திக்கு அளித்த பதிலில் உள்ள காரணங்கள் அரசியலில் அப்படியே உள்ளன. கொக்கரிப்புகளுக்கு எதிரான "குரல்" ஒலிக்கத் தொடங்கியுள்ளது. "குறுந்தொகையில் ஒவ்வொரு இரண்டாவது பாடலும் பெண்ணின் பாலியல் பற்றி பேசுகிறது. குறுந்தொகைக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தொடர்பில்லையா?" என்று உங்கள் கேள்வியை விளக்கி கனிமொழி கேட்டிருக்கிறார். பதில் இல்லை. இன்று போற்றப்படும் பண்பாடு யாரால் எப்போது எதற்காக புகுத்தப்பட்டது என்பது குறித்து யாரும் பேசுவதாகத் தெரியவில்லை.

 
At 11:27 AM, Blogger தெருத்தொண்டன் said...

தாணு:
உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதனால்தான் இந்தப் பதிவின் முதல் வரியை எழுதினேன்.
ஆம்!
"மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை".

 
At 12:15 AM, Blogger aathirai said...

குழலி,
குஷ்புவின் வீட்டிற்கு கழுதை ஊர்வலம் நடத்தியவர்கள் கூட்டணி
தலைவர் வீட்டிற்கு ஒரு குதிரை ஊர்வலம் கூட நடத்தவில்லை.
அவரை தமிழ்நாட்டை விட்டு போ என்று சொன்னார்களா?
இது கற்பு பெண்களுக்கு மட்டும்தான் என்று வலியுறுத்துவதாக தானே தெரிகிறது!

 
At 5:59 PM, Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2005/10/blog-post.html

 

Post a Comment

<< Home