Tuesday, September 27, 2005

அத்வானி மாறவில்லை!

பாஜக விவகாரங்களைத் தனது தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்எஸ்எஸ் தனது சுமைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பாஜக தலைவர் அத்வானி பகிரங்க அறைகூவல் விடுத்திருப்பது உண்மையில் ஒரு முக்கியமான திருப்பம்தான். இந்த அறைகூவலுடன் தனது தலைவர் பதவியையும் டிசம்பரில் ராஜினாமா செய்ய இருப்பதாக அத்வானி அறிவித்துள்ளார். டிசம்பர் 2005 தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய தலைவருக்கான செயல்திட்டத்திற்கும் அத்வானி பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

அத்வானி, தனது கடந்த கால நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டு பாதை மாறியிருப்பதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. வாஜ்பாய் மிதவாதி என்றும் அத்வானி தீவிரமானவர் என்றும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து ஒரு பிம்பத்தைக் கடந்த காலங்களில் உருவாக்கி வந்தனர். ஆனால் இந்த ஊடகம் சார்ந்தவர்களும் அறிவுஜீவிகளும் அத்வானி மற்றும் வாஜ்பாய் இருவரும் ஒரே தத்துவப் பள்ளியில் அரசியல் பயின்றவர்கள் என்பதையும் அக்டோபர் 1951இல் ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் பாரதிய ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை உருவாக்கத் துணைநின்று அதை வளர்த்தவர்கள் என்பதையும் மறந்துவிடுகிறார்கள்.

அத்வானி மற்றும் வாஜ்பாய் இருவரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்பதில் பெருமிதம் கொண்டவர்கள். சங்க உறுதிமொழியைக் காப்பவர்கள். ஆர்எஸ்எஸ்ஸின் உலகப் பார்வையை உள்வாங்கிக் கொண்டவர்கள். மத அடிப்படையிலேயே தேசங்கள் உருவாக்கப்பட்டன என்றும் அதன்படி இந்தியாவின் அடிப்படை இந்துமதம் என்றும் தங்களது அரசியல் வாழ்வில் பல கட்டங்களில் பேசி வந்தவர்கள். பிப்ரவரி 27, 2002க்குப் பிறகு குஜராத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்த படுகொலைகளில் நரேந்திரமோடியின் தவறு எதுவும் இல்லை என்று ஒப்புக் கொண்டு, அடுத்து வந்த தேர்தலில் அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தவர்கள்.

இப்போதும் கூட அத்வானி அந்தக் கருத்துக்களில் இருந்து மாறிவிடவில்லை. ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான அவரது கோபம் நாக்பூரிலும் டெல்லியில் ஆர்எஸ்எஸ் செயல்படும் ஜந்தேவாலனிலும் உள்ளவர்களிடம் பாதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று உணர்த்தும் கோபம் அல்ல. மாறாக நீங்கள் செயல்படுத்தும் திட்டத்திற்கு பாஜக உதவும், ஆனால் நீங்கள் அதன் உள் விவகாரங்களில் தலையீடாதீர்கள் என்ற அளவில்தான் அத்வானியின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. 1951இல் ஜனசங்கத்தை உருவாக்கும்போது ஆர்எஸ்எஸ் அதன் வழியில் குறுக்கிட்டதில்லை. அதேசமயம், சங்கக் கோட்பாட்டை மீறி ஜனசங்கமும் செயல்பட்டதில்லை என்பது வேறு விஷயம்.

ஜனசங்கத்தின் கொள்கைகளாக தீனதயாள் உபாத்தியாயா சிலவற்றை உருவாக்கினார். ஒருங்கிணைந்த மனித நேயம் அரசியல் தத்துவமாகவும், காந்தீய சோஷலிசம் பொருளாதாரக் கொள்கையாகவும் கலாச்சார தேசியம் உலகப் பார்வையாகவும் உருப்பெற்றன. இதற்கெல்லாம் ஆதார அடிப்படையாக வேதகால நாகரிகம் இருந்தது.

இதன் காரணமாகவே பெண்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முணுமுணுப்பு கூட இத்தலைவர்களுக்குப் பிடிப்பதில்லை. இதன் காரணமாகவே இந்து சமூகத்திற்குள் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் கூட ஜனசங்கத்தினரால் எதிர்க்கப்பட்டன.

பாரதிய ஜனதாக் கட்சியும் இதே பாரம்பர்யத்தில் வந்த கட்சிதான். இப்போது இருக்கும் வடிவத்தில் கட்சி 1980ஆம் ஆண்டு உருவானது என்றாலும் அது ஏறத்தாழ பாரதிய ஜனசங்கத்தின் பெயர் மாற்றம்தான். கட்சியின் திட்டமும் கொள்கைகளும் ஜனசங்கத்துக்காக 1965இல் உருவாக்கப்பட்டதில் இருந்து எடுத்துக் கொண்டவையே. இருந்தும் பாஜக தன்னை இந்திராகாந்தியின் எதேச்சதிகாரத்துக்கு எதிராகப் போராடிய ஜனநாயகவாதிகளாக மட்டுமே காட்ட விரும்பியது. நாதுராம் கோட்சே போன்றவர்களது கோட்பாட்டுடன் இணைத்துப் பார்ப்பதை விரும்பவில்லை.

ஆர்எஸ்எஸ் கூட அவசரநிலைக் காலத்தின் அராஜகங்களுக்கு எதிரான ஜனநாயக இயக்கமாகவே காட்டிக் கொண்டது. இது பாஜகவை அரசியல் மைய நீரோட்டத்தில் கலந்து முன்னணிக்கு வர உதவியது. எனவே இரண்டுக்கும் மோதல் வருவதற்கான காரணமோ அடிப்படையோ சிறிதும் இல்லை. 1983-84இல் தீவிரமான அயோத்திப் பிரச்னையில், 1988 பாலம்பூர் அமர்வுக்குப் பிறகே பாஜக களம் இறங்கியது. ஆனால் இந்தக் காலதாமதத்திற்காக ஆர்எஸ்எஸ் கோபப்படவில்லை. பாஜகவிற்கு முன்னரே ராஜீவ்காந்தி இந்துத்துவ திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார் என்பது வேறு விஷயம்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்னைக்குத் தீவிரமாகக் களம் இறங்குமாறு ஆர்எஸ்எஸ், பாஜகவை நிர்ப்பந்திக்கவில்லை என்பதே உண்மை. ஒருபுறம் இந்துத்துவத் திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மறுபுறம் ஷாபானு வழக்கு காரணமாக சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையினரையும் திருப்திப்படுத்த ராஜீவ் முயன்ற போதுதான் பாஜக விழித்துக் கொண்டது. அதன்பிறகே பாஜக களம் இறங்கியது.

1989 தேர்தலில் கூட ராஜீவ் காந்திதான் அயோத்திக்கான வாக்குறுதியை வழங்கினார். ஆகஸ்ட் 8, 1990க்குப் பின்னர் அதாவது மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் அமலாக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் என்ற தீவிர பிரச்சாரத்தில் பாஜக இறங்கியது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், மண்டல் கமிஷனின் சமூக நீதி காரணமாக "பிளவுண்ட" இந்து சமூகத்தை ஒன்றுபடுத்தி மதரீதியாக அடையாளப்படுத்துவதற்கான முயற்சியே அத்வானியின் ரத யாத்திரை.

ஆர்எஸ்எஸ் இதை வரவேற்றது. எப்போது களம் இறங்குவது என்பதை பாஜகதான் தீர்மானித்தது. இதற்கு இந்தக் காலக்கட்டம் முழுவதும் ஆர்எஸ்எஸ் தலைவராக தேவரஸ் இருந்ததும், அவர் பாஜகவை ஆர்எஸ்எஸ்ஸின் திட்டங்களுக்கு அரசியல் அரங்கில் ஆதரவு திரட்டுவதற்கான அமைப்பு என்ற அளவில் மட்டுமே பார்த்ததும் முக்கிய காரணம். விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு பதிலாகவோ, அல்லது பஜ்ரங் தளத்திற்கு மாற்றாகவோ, பாஜக செயல்பட வேண்டும் என்று அந்தக் காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை என்பதுதான் உண்மை.

இந்தப் புரிந்து கொள்தலும் வியூக சிந்தனையும் தேவரஸ் போய், ராஜு பையா என்றழைக்கப்பட்ட ராஜேந்திரசிங் ஆர்எஸ்எஸ் தலைவரான காலகட்டத்தில் எப்படியோ இல்லாமல் போனது. தனது சீடரும் தன்னுடன் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தவருமான முரளி மனோகர் ஜோஷியை பாஜக தலைவராக கொண்டு வருவதற்கு ராஜு பையா கூச்சப்படவில்லை. பாஜகவின் குறுகிய கால அரசியல் வரலாற்றில் கட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லாத காலகட்டம் ஜோஷி தலைவராக இருந்தகாலம்தான் என்று கூறலாம். அதேசமயம் ராஜு பையா தலைவராக இருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக மீடியாவில் அதிகம் தெரிய ஆரம்பித்தது. பேராசிரியர் ராஜேந்திர சிங் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிக் கொண்டிருந்தார்!

ஆர்எஸ்எஸ்சின் போக்கில் நிகழ்ந்த இந்த மாற்றம், கே.எஸ்.சுதர்சன் தலைவரானதும் இன்னும் அதிகரித்தது. மத்தியில், ஆட்சியை பாஜக இழந்ததும் இது மேலும் மோசமானது. பிரவீன் தொகாடியா பாஜக தலைவர்களை வாய்க்கு வந்தபடி பேசுவதும், தேசிய செயற்குழு கூட்டத்தில் உமா பாரதியின் சுடுசொற்களும், முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர் கூட அத்வானிக்கு எதிராகப் பேசுவதும் பாஜகவும் வழிகாட்டும் நெறிமுறைகளை அவ்வப்போது உத்தரவுகளாக ஆர்எஸ்எஸ் பிறப்பிப்பதும் இந்த போக்கின் காரணமாக நிகழ்ந்தவையே.

ஜனசங்க காலத்திலும் பாஜக உருவாக்கப்பட்ட காலத்திலும் இருந்த நடைமுறையைப் போல, ஆர்எஸ்எஸ் திட்டங்களுக்கு அரசியல் அரங்கில் ஆதரவு திரட்டும் துணைப் பணியுடன் நிறுத்திக் கொள்கிறோம் என்று சொல்வதற்கு அத்வானி முயன்றிருக்கிறார். அதாவது இந்துத்துவத் திட்டத்திற்கு கடந்த காலத்தில் இரு அமைப்புகளும், எப்படி செயல்பட்டனவோ அப்படி செயல்பட ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பணியில் அத்வானி தனியாகவும் இல்லை. இதில் அவர் வாஜ்பாய் துணையை எதிர்பார்க்கிறார். டிசம்பர் 2005இல் இருவரும் பாஜகவின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுவார்கள். அவர்கள் இருவரையும் போலவே ஆர்எஸ்எஸ்சில் அர்ப்பணிப்புடன் இருப்பவராக ஒருவரை புதிய தலைவராகத் தேர்வு செய்வதையும் இருவரும் உறுதி செய்வார்கள்.


ஆங்கில மூலம் : வி.கிருஷ்ணா ஆனந்த்(20.09.05)
நன்றி : தினமலர் செய்திமலர்.(25.09.05)(திருநெல்வேலி,தூத்துக்குடி, நாகர்கோவில் பதிப்புகளுடன் வரும் இலவச இணைப்பு)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home