Sunday, October 02, 2005

அவனில்லாமல் கன்னிமை குலையுமா?

அண்மைக்காலங்களில் திரைத்துறையில், திரைக்குப் பின் நடிகையர், துணை நடிகர் மற்றும் துறை சார்ந்த ஆண்களிடையே தோன்றிய உரசல்கள், சூடு பிடித்து, குமுறல்கள் சுட்டெரிக்கும் துளைகளாக, வெளியே சில உண்மைகளைக் கொண்டு வந்திருக்கின்றன. கண்ணகி கற்பா, மாதவி கற்பா, சீதை கற்பா, திரௌபதை கற்பா என்று புராண காப்பிய நாயகிகளின் கற்பு புனைவுகளிலேயே மிதந்து "தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றில் பெருமிதம் கொண்டிருந்த "தமிழ்ப் பண்பாளர்' உலகம் இந்த உண்மைகளைத் தாங்க முடியாமல் கொதித்து எழுந்திருக்கிறது.

காப்பிய, புராண, இதிகாசங்கள் மெய்யோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் திரைத்துறை என்பது பொய்களை மெய்போல் சித்தரித்து, மக்களிடம் வாணிபம் செய்யும் ஒரு துறை. இதுவும் பத்திரிகை, வானொலி போல் மக்கள் தொடர்பு சாதனம்தான். ஆனால், சினிமா, தொலைக்காட்சி இரண்டும் காட்சி ஊடகங்கள். இந்த ஊடகங்களில் தோன்றுபவர்கள் நேரடியாக மக்களின் வாழ்வில் பங்குகொள்ளும் அளவுக்குச் செல்வாக்குப் பெறுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் இந்தச் செல்வாக்கே - (நடிப்பு)ப் பொய்மையே- ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்கள் சமுதாயத்தில் வேரூன்றிப் போயிருக்கிறது.

தமிழ்ச் சமுதாயத்தில் நடிக நடிகையர் மற்றும் இயக்குநர்கள் மட்டுமே கவனிப்புக்குரிய ஆற்றலுள்ளவர்களாக மதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தத் துறையில் ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால் மிகையில்லை. எல்லாத் துறைகளிலும் பொதுவான அதே ஆதிக்கம் நிலவினாலும், இந்த ஊடகத்துறை வாணிபத்துக்கு இன்றியமையாதவள் பெண்.

பழைய காலத்தில், ஆணும் பெண்ணும் தனித்திருந்தாலே பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டது. யார் பஞ்சு, யார் நெருப்பு என்பதற்குத் தெளிவான புலப்படுதல் இல்லை. பெண்ணைக் காக்கும் பெற்றோர், அவளைப் பஞ்சாகக் கருதுவர். ஆண் "தாலி' என்ற உரிமைக்கயிறு இல்லாமல் தொட்டுவிட்டால், அவள் கருகிப்போன மாதிரிதான். ஆனால் அவள் கழுத்தில் அந்தக் கயிற்றை ஒருவர் கட்டி உரிமையாக்கிக் கொண்ட பின் வேறொருவன் நெருங்கினால், அவள் நெருப்பாக மாற வேண்டும். இது கோட்பாடு. இல்லையேல் அவள்தான் கருக வேண்டும். அவனுக்கு ஒன்றுமில்லை.

ஆனால் இத்தகைய கோட்பாடுகளை வைத்துப் பொய்யாகப் புனையப்பட்ட க(கொ)லைப் படைப்புகளில், இடம் பெற்று, ஆடவும், அழவும் கொஞ்சிப் பேசி நெருக்கமாக இழைந்து ஒரே கட்டிலில் (சிரிப்பதாக) நடித்து, பிள்ளைகள் பெற்று, துவண்டு விழுந்து விக்கிவிக்கி அழுது, பெரிய குங்குமத்துடன் பாடையில் கிடந்து... எழுந்து, பிழைக்கும் பிழைப்பு. மந்திரங்கள் மாலை மாற்றல், தாலி கட்டல், பாலியல் வன்முறை என்ற எல்லா நடிப்புகளுக்கும் இவள் உட்படுகிறாள். இப்போதெல்லாம் எது பொய், எது மெய் என்ற தெரியாத அளவில் காட்சிகள் வருகின்றன. இவர்கள் இந்த ஊடகங்கள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிக்கும் பெண்மை வடிவங்கள் தாலி மெட்டி பொட்டு, பூ, கற்பு, கணவன் என்ற அலங்காரங்களையே குறிப்பாக்குகின்றன. கணவன் குடிகாரனாக - வேறு பெண்களைக் கவர்ந்த மோசடி ஆளாக இருக்கலாம். ஆனால், இவள் அப்படி இருக்கலாகாது. காதல் செய்ய வேண்டும். ஆனால் அது உண்மையல்ல.

பிள்ளையாரே வெல்லத்தால் ஆனவர். அதைக் கிள்ளி அவருக்குப் படைப்பதுதான் உண்மை. இதில் என்ன தவறு?

"கன்னிமை' அன்றாட நடிப்புத் தொழிலில் கறைபட்டுப்போவதை இல்லை என்று மறைப்பதைவிட, அந்தக்கறைகளை நீக்கிக் கொள்ள முற்படுவது என்ன தவறு? மண்ணும் பெண்ணும் ஆணின் உரிமை என்பதுதான் இங்கே கலாசாரமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுடன் இயல்பாக வாழ்ந்து தாயாவதைத்தான் விரும்புகிறாள். இது மனித இயற்கை. ஆனால், இந்த இயல்பில், பெண்ணுடலை மட்டும், அவளிலிருந்து வேறுபடுத்தும் நடப்பியல் ஆண் அவள் மீது செலுத்தும் ஆதிக்கக் கொடுமை என்றே கூற வேண்டும்.

அன்றைய தேவதாசிகளுக்கிருந்த உரிமைகள் கூட இன்றைய திரை ஊடகப் பெண்களுக்கு இல்லை எனலாம். பணம் கொடுக்காத ஆணையும் வரவேற்று அன்பு செலுத்தும் உரிமை அவளுக்கு இருந்தது. ஆனால், இங்கோ, அழகழகான சிவந்த தோலுடைய, ஒடிந்து விழும் இடுப்புடன், இழுத்த இழுப்புக்கெல்லாம் உட்படும் பெண்களைத் தேடிப்பிடித்து வாணிபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். பதினெட்டு வயதாகாத பெண்கள் இத்துறைக்குக் கொண்டுவரப் படுவதற்கு அவளே காரணமல்ல. பெற்றோர், காப்பாளர் மட்டுமே பொறுப்பேற்றிருப்பர். இவளைக் காட்சிப் பொருளாக்கப் பிள்ளையார் சுழி போடும் படம் எடுப்பவர், தரகர், அவர் இவர் என்று எத்தனையோ படி கடந்து, சூடுபட்டு, படம் வெளியாகி வெற்றிப் பூவைப் பெறுவது ஆணைவிடப் பெண்ணுக்கே செத்துப் பிழைக்கும் அனுபவங்கள். இவள் உணர்வுகள் ஒருவகையில் கெட்டிப்பட்டு, திடம் பெற்றிருப்பாள். இல்லையேல், காணாமல் போயிருப்பாள்.

ஒரு பெண், குடும்பப் பெண், நான்குபேர் பார்க்க இசைக்கச்சேரி மேடை ஏறுவதையே ஒத்துக்கொள்ளாத கணவன்மார்கள் இருந்தார்கள். வானொலி வந்த பின்னரே, குடும்பப் பெண்கள் தங்கள் திறமைகளை வெளியிடுவதில் தவறில்லை என்ற மாற்றம் வந்தது. அதிலும் பணிபுரியும் பெண்களைச் சார்ந்த அவதூறுகள் எழுந்ததுண்டு. வெளிக்குத் தெரியாதது வானொலி. ஆனால் இந்நாட்களில், "பணம்' ஒன்றே குறி என்று எல்லாம் வாணிபமான நிலையில் திரைத்துறையில், ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு வாழ, திரைத்துறை சார்ந்த ஒருவரே இசைய வேண்டும். அவ்வாறு மக்களைப் பெற்ற தாயாக, ஆற்றலுடன் திகழும் ஒரு பெண்மணி, திரைத்துறையில் வெற்றி பெற்றவர் ஆனாலும் கூட சோதனைகள் துரத்தும்.

ஆனால் திரைத்துறை ஆண்களுக்கு இத்தனை சோதனகள் இல்லை. அவர்களின் குடும்ப வாழ்வு, சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. அப்படி உட்படுத்தப்பட்டாலும், தொடர்புபடுத்தப்பட்ட அந்தப் பெண்தான் கருகவேண்டும்.

ஒரு பெண்ணின் வெற்றிக்கு ஆணே பின்னால், அல்லது முன்னால், அல்லது பக்கத்தில் இருப்பதாகப் பெருமையடித்துக்கொள்ளும் ஆண் வர்க்கம், ஒரு பெண் இத்துணை முட்டல் மோதல்களையும் எதிர்கொண்டு குடும்ப வாழ்வில் வெற்றி காண்கிறாள் என்று ஒப்புவதில்லை.

ஒரு பெண்ணின் கன்னிமை குலைவதற்கு யார் காரணம்? மேலும் "கன்னிமை' என்பது முறைசாராமல், மோசடி வலைக்குள் வீழ்த்தப்பட்டு அழிக்கப் பெறும்போது, அவள் கொலை செய்யப்படும் கொடுமைக்கும் உள்ளாகிறாள்.

ஏதோ பண்பாடு என்பது, திரைத்துறைப் பெண்களுக்கே உரியதாகவும், அதுவும் "தமிழ்' நாடே அந்தப் பண்பாட்டை மொத்த குத்தகை எடுத்திருப்பதுபோலவும் கூக்குரல் எழுப்புவது, முழுப்பூசணியைச் சேற்றில் மறைப்பதுபோல் வெட்கக்கேடானதொன்று.

மிகப்பெரிய காட்சி ஊடக நிறுவனங்கள் பல்வேறு ஒளித்தடங்களில், தங்கள் அபத்த மெகா தொடர்களில் பெண்களின் உடலை, மன உணர்வுகளை, வாணிபம் செய்வதுடன், ஏறக்குறைய ஒரு நாளின் பதினெட்டு மணிநேரத்தையும் கொள்ளையடிக்கின்றன. போதை நேரமாக புத்தியை மழுங்கடிக்கிறது. ஒரு நாயகனைச் சுற்றி மூன்று, நான்கு என்று பெண்கள், அடிதடி, குழந்தை, சொத்து என்று பெண்மையை எவ்வளவு ஈனமாக இதைப் பார்ப்பவர் மனங்களில் பதிய வைக்கிறார்கள்? தாலி என்ற ஒன்றுக்கு புனிதமோ, பொருளோ இருக்கிறதா? வக்கிர உணர்வுகளைத் தூண்டும்படி, பாடல்களும், ஆடல்களும் பெண்கள் விரும்பியதாலா ஒளிபரப்பப்படுகின்றன? அவன் முழு உடை அணிவான். அவளுக்குப் பெயருக்கே உடை. இதெல்லாம் கற்பைப் பேணும் பண்பாடா? அதை எதிர்த்துக் கூச்சல் போடுங்கள், பண்பாட்டுக் காவலர்களே!

தீவிரவாதிகளின் இயக்கத்தில் ஈடுபட்ட பெண்ணொருத்தியை, காவல்துறை கண்காணித்துப் பிடித்து சின்னபின்னாமாக்கிக் கம்பிக்குள் அடைக்கிறது. இவள் சாகசங்கள் அறிந்திருந்த பெரிய அதிகாரி ஆத்திரத்துடன் வருகிறார். கதவைத் திறந்ததும் அவள் பெயருக்கு ஒட்டியிருந்த உடையைத் தள்ளிவிட்டு, குத்துப்பட்டும், அடிபட்டும், குலைக்கப்பட்டும் குதறப்பட்ட மேனியைக்காட்டி, ""இந்தாடா? இதுதானே?'' என்ற கூவியபோது, அந்த அதிகாரி உறைந்துபோகிறான்.

இது மகா சுவேதா தேவியின் பிரசித்தமான கதை.

உண்மைதான் கொதித்துச் சிதறுகிறது. கற்பும் தூய்மையும் அவனுக்கு விதிவிலக்கா? அவனில்லாமல் கன்னிமை குலையுமா?

எழுதியவர்: எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

நன்றி: தினமலர் செய்திமலர்

02.10.05 தேதியிட்ட தினமலருடன் நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் மட்டும் இலவச இணைப்பு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

13 Comments:

At 5:22 PM, Blogger பத்மா அர்விந்த் said...

படிக்க தந்தமைக்கு நன்றி.

 
At 5:24 PM, Blogger Vaa.Manikandan said...

//உண்மைதான் கொதித்துச் சிதறுகிறது. கற்பும் தூய்மையும் அவனுக்கு விதிவிலக்கா? அவனில்லாமல் கன்னிமை குலையுமா?//
இருவருக்குமே கற்பு என்பது பொது தான்.ஆனால் மறுமலர்ச்சி,புதுமை,விடுதலை என்னும் பெயரில் இங்கு தொடர்ச்சியாக வைத்திருந்த மதிப்பீடுகள்(பண்பாடு என சொன்னால்,நீ என்ன பண்பாட்டுக் காவலனா என கேள்விகள் எழக்கூடும்)கிழிது எறியப்படுகின்றன.

எனக்கு முழு சம்மதம்,எதற்கும் தடைகள்,வரைமுறைகள் தேவை இல்லை.பேசுகின்றவர்களின் இல்லங்களில்,(அட பெண்கள் இல்லை,ஆண்களும்) தறிகெட்டு சுற்றினால் எற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் இருக்கிறதா? எழுத்தாளர்களும்,படைப்பாளிகளும் தங்களின் புரட்சியாளர் முகமூடி அணிந்துகொண்டு எழுதியும்,பேசியும் வருகின்றனர்.முகமூடியைக் கழட்டி வைத்து உங்கள் கண்களில் பாருங்கள்.பக்கத்து வீட்டு நிகழ்ச்சிகள் பெரிய பாதிப்பை என்றும் தரப்போவதில்லை.

இந்த பிரச்சினைகளை இப்போதைக்கு வலைப்பூவில் குறைத்து வேறு விஷயங்களை விவாதிக்கலாம்.ஏதோ ஒரு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

 
At 5:43 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தெருத்தொண்டன்.

தீயாய்ச்சுடும் எழுத்து.

-மதி

 
At 8:37 PM, Blogger தாணு said...

//பதினெட்டு வயதான பெண்கள் இத்துறைக்குக் கொண்டுவரப் படுவதற்கு அவளே காரணமல்ல// பத்திரிகைகளில் நாள்தோறும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி பத்தி பத்தியாக வருகிறதே, இவர்களெல்லாம் குழந்தைத் தொழிலாளர்களில் சேர மாட்டார்களா? இவர்களது அரங்கேற்றம் பிறந்த பொழுதிலும்கூட ஆரம்பித்துவிடுகிறதே. இதை வரைமுறைப் படுத்த சட்டமில்லையா?

//ஒரு பெண்ணின் கன்னிமை குலைவதற்கு யார் காரணம்// பெண்மை வலுகட்டாயமாக கறைப்படுத்தப் படலாம். `சேலை முள்ளில் விழுந்தாலும் முள் சேலையைக் கிழித்தாலும்’ கிழிக்கப்படுவது பெண்தான், வார்தைகளாலும் செய்கைகளாலும்.
//அவன் முழு உடை அணிவான், அவளுக்கு பெயருக்கே உடை// அதை எதிர்த்து கூச்சல் போடுங்கள், பண்பாட்டுக் காவலர்களே// சரியான சாட்டையடி. எய்தவர்களெல்லாம் அம்பையே நோகச் செய்வது கேலிக்குறியதுதான்

 
At 9:59 PM, Blogger தெருத்தொண்டன் said...

தேன்துளி,மதி, தாணு
நன்றிகள். ராஜம் கிருஷ்ணனை அழைத்து நான் கல்லூரியில் கூட்டம் போட்டிருக்கிறேன். இன்று வயதான நிலையில் சென்னையில் இருக்கிறார். இது குறித்து எழுதவும் தயங்கினார். நண்பர் ஒருவர் மூலம் கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறார்கள். வயது ஏறினாலும் வார்த்தைகளின் சூடு குறையவில்லை என்ற உணர்வே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.

 
At 10:09 PM, Blogger தெருத்தொண்டன் said...

vaa.manikandan, வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி. உங்கள் கேள்விக்கு ஏற்கனவே Voice on Wings தனிப்பதிவு போட்டிருக்கிறார். வீட்டுப் பெண்களும் வீதிப் பெண்களும் என்ற அந்தப் பதிவு தான் உங்களுக்கான எனது பதில்.
இந்த விவாதத்தை நீடிப்பது எனது நோக்கம் அல்ல. இதை எழுதியவரது கருத்து வலையில் காணக் கிடைக்காது என்பதால் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

மேலும் இந்தப் பிரச்னை குறித்து விவாதம் எழுவதற்கு "காவலர்களே" காரணம். நீங்கள் குறிப்பிடும்படி "தறி கெட்டு சுற்றுவதை" யாரும் பண்பாடு என்று கூற முன்வருவதாகத் தெரியவில்லை. மாறாக சிலர் பொத்திப் பாதுகாக்க நினைக்கும் பண்பாடு எவ்வளவு பலவீனமானது என்பதையே சுட்டிக் காட்டுகிறார்கள்.

 
At 10:16 PM, Blogger தெருத்தொண்டன் said...

மணிகண்டன்,புதுமைப்பித்தனின் அகலிகை, பொன்னகரம் சிறுகதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 
At 1:36 AM, Blogger துளசி கோபால் said...

ராஜம் கிருஷ்ணன். எப்பேர்ப்பட்ட எழுத்து.
வயசானால் எழுத்தோட/கருத்தோட வீரியம் போயிருமா என்ன?

இங்கே பதிவு செய்ததற்கு நன்றிங்க.

 
At 2:11 AM, Blogger Thangamani said...

இங்கே பதிவு செய்ததற்கு நன்றிங்க.

 
At 7:09 AM, Blogger தெருத்தொண்டன் said...

நன்றி துளசி கோபால், தங்கமணி.

 
At 8:07 AM, Blogger Ramya Nageswaran said...

தெருத்தொண்டன், பதிவு செய்தமைக்கு நன்றி. இன்று முழுக்க இதைத் தவிர வேறு எதையும் யோசிக்க முடியாதபடி எழுதப்பட்ட வார்த்தைகள்.

 
At 8:14 AM, Blogger Ramya Nageswaran said...

மணிகண்டன், நீங்க பதிவுகள்லே வந்த எல்லா பதில்கள்/சர்ச்சைகளைப் பார்த்தீங்களா? நீங்க கவலைப்படுவதைப் பார்த்தால் என்னமோ எல்லாப் பெண்களும் குஷ்பு இதைப் பற்றி எப்போ பேசப் போறாங்க, நாமேல்லாம் எப்ப 'தறிகெட்டு' போகலாம்னு காத்திருந்த மாதிரி சொல்லறீங்களே. அவங்க அவங்களுக்கு சொந்த புத்தி, எப்படிபட்ட முடிவுகள் எடுக்க வேண்டும், எப்படியான வாழ்வு வாழ வேண்டும்ங்கிற அறிவு கிடையாதா? If a woman is comfortable and is willing to face the consequences of her choices, அதை தடுக்க நாம யார்?

எல்லாரும் தான் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம். விருப்பபட்டவங்க செய்யறாங்க. அதன் பாதகங்களை தெரிஞ்சவங்க ஒதுங்கி இருக்காங்க. ரஜினிகாந்த் ஸ்டைலா சிகரெட் பிடிச்ச பொழுது ஏன் யாரும் பொங்கி எழலை?

 
At 7:26 PM, Blogger தாணு said...

ரம்யா,

சரியாகச் சொன்னீங்க! எதிர்கொள்ளத் தைரியமிருக்கும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பெண்கள் மட்டும் ஏன் கடுமையா விமர்சிக்கப்படணும்? பாலியல் சார்ந்த விஷயங்களில் மட்டுமே பெண்களின் சுதந்திர உணர்வுகளை பெரிதாக வெளிச்சம்போடும் போலித்தனம் இது. தானாகவே முயன்று படிக்கலாம், வேலை தேடிக் கொள்ளலாம், ஆனால் செக்ஸ் சம்பந்தமாகத் தனிப்பட்ட விருப்பம் இருக்கக் கூடாது. உண்மையாகவே தான் நினைத்தபடி வாழ்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அவர்களுக்கு வக்காலாத்து வாங்கி போராடுபவர்கள்தான் வக்கிரமான அவதூறுகளை எதிர் கொள்பவர்கள். அதுதான் யதார்த்தம் இங்கு.

 

Post a Comment

<< Home