Thursday, September 22, 2005

பேணிக்காக்கும் போலி மரபுகள்

இறந்துபோன மனிதர்களை விமர்சனம் செய்வது நமது மரபல்ல. அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவது நமது வழக்கம். இந்த மரபும் வழக்கமும் சாதாரணத் தனிமனிதர்கள் விஷயத்தில் வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். இதே மரபு ஒரு நாட்டின் வரலாற்றை அல்லது மக்களின் வாழ்க்கையைத் திசைமாற்றியவர்களுக்கும் பொருந்தும் என்று கூறுவது நேர்மையல்ல.

சென்ற வாரம் நமது நாட்டின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் காலமானார். அவரது மறைவை ஒட்டி பத்திரிகைகளில் கட்டுரை எழுதியவர்களும் டிவிக்களில் கருத்து தெரிவித்தவர்களும் அவரை "சாணக்கியர்' என்றும் "ராஜதந்திரி' என்றும் "பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை' என்றும் "தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல் உலகமயமாக்கலின் பிதாமகன்' என்றும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இந்தப் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்திய மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நன்மை, தீமைகள் பற்றி நாம் வேறோரு நாளில் விவாதிக்கலாம். ஆனால் 1991 ஜூன் முதல் 1996 மே வரை நரசிம்மராவ் ஆட்சியில் இருந்த ஐந்து வருடங்களில் என்னவெல்லாம் நடந்தன என்பது குறித்த நமது நினைவுகளை நாம் புதுப்பித்துப் பார்ப்பது அவசியம்.

"ஏசியா ப்ரௌண் போவேரி' என்ற நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே 30 ரயில் என்ஜின்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டது. இந்த என்ஜின்கள் நமது தண்டவாளத்தில் பயன்படுத்தப்பட முடியாது என்று தெரிந்தும் ஒப்பந்தம் முடிந்தது. பிரதமர் நரசிம்மராவின் மகன் பி.வி.ராஜேஸ்வரராவ் இந்த பேரத்தில் அதிக "அக்கறை' காட்டினார்.

இப்போதுள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் "பைலதிகா' என்னும் இடத்தில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் இரும்பு, தரத்தில் உயர்ந்தது. பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வளர்த்து எடுத்த "11பி' என்ற சுரங்கத்தை "நிப்பான் டென்ரோ' என்ற அந்நிய ஜப்பான் நிறுவனத்திற்கு மலிவு விலையில் விற்றார்கள். இங்கிலாந்தில் கிடைக்கும் இரும்பு வளத்தை பொதுத்துறை நிறுவனமான "செயில்' எடுத்து இருக்கலாம். பீகார் "பிலாய்' உருக்கு ஆலையின் தரத்தை உயர்த்தி, உருக்கு தயாரித்து இருக்கலாம்.

டெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி அளிப்பதற்காக வீடு ஒதுக்குவதில் ஊழல் நடந்தது. வீட்டுவசதித்துறை அமைச்சர் ஷீலா கவுல் போலி ஒதுக்கீட்டில் ஈடுபட்டதாகக் கண்டிக்கப்பட்டார்.

அவரது ஆட்சிக்காலம் தொலைத் தொடர்புப் புரட்சிக்காலம். அன்றைய காலகட்டத்தில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்தன. அவரது வீட்டில் ரெய்டு நடத்தி சிபிஐ கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களைக் கைப்பற்றியது.

மகாராஷ்டிர மாநில மின்வாரியம் மீது என்ரான் ஒப்பந்தத்தை திணித்து தேசிய நலனுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டது.

நிதித்துறை நிறுவனங்களிலும் வங்கிகளிலும் நடந்த முறைகேடுகள் காரணமாக ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் புகழ் பெற்றது. இதுகுறித்து நாடாளுமன்றக்குழு அளித்த அறிக்கை மீது அரசு தலைவைத்துப் படுத்து உறங்கியது.
சிறுபான்மையாக இருந்த ராவ் அரசு, பெரும்பான்மை பெற்ற கதை ஊழல்களின் மொத்த வரலாறுகளை உள்ளடக்கியது. ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை உடைத்ததும், ஜே.எம்.எம். எம்.பி.க்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக லஞ்சம் கொடுத்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி, அஜீத் சிங் கட்சி எம்பிக்கள், ராவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது என முறைகேடுகள் பலவற்றிற்குப் பிறகே அரசு பெரும்பான்மை பெற்று ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தது. இந்த முறைகேடுகளை "ராஜதந்திரம்' என்று போற்றுவது வெட்கக்கேடு!

ஐந்து வருட ஆட்சியில் இந்த மேற்கூறிய ஊழல்கள் மட்டுமே நடந்ததாக யாரும் நினைத்துவிடக்கூடாது. அன்றைய காலத்தில் ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற ஒரு மத்திய அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பு வகித்தவர் நரசிம்மராவ். ஊழல் நடந்த பல துறைகள் பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் "புதுக்காற்றை' சுவாசிக்க ஜன்னல்கள் திறக்கப்பட்ட துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிய முதலீட்டை வரவேற்ற காரணத்தால்தான் இரும்புச் சுரங்கம் ஜப்பான் நிறுவனத்திற்குப் போனது. டெலிகாம் துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்ததில் கிடைத்த பணமே சுக்ராம் வீட்டில் சிபிஐ எடுத்தது. பங்குச் சந்தைக் குறியீடுகள் அதிகரிப்பதாகக் காட்டுவதற்காக ஹர்ஷத் மேத்தா ஊழல் உருவானது. இதுபோன்ற எண்ணற்ற முறைகேடுகள் வளர்வதற்கே நரசிம்மராவ் மிகப்பெரிய "பங்களிப்பை' அளித்தார். இந்தப் பங்களிப்பைத்தான் சென்றவாரம் கட்டுரையாளர்கள் புகழ்ந்து தள்ளினார்கள் போலிருக்கிறது.

இத்தகைய போலி மரபுகளை இன்னும் நாம் பேணிக்காக்க வேண்டுமா?

(இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்ததற்கு அடுத்த வாரத்தில் பத்திரிகையாளர் கிருஷ்ணா ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதிய பத்தியின் தமிழாக்கம்.)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

5 Comments:

At 9:50 AM, Blogger Unknown said...

//சென்ற வாரம் நமது நாட்டின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் காலமானார்//

இந்த வரியப் படிச்சுட்டு., நமக்கே தெரியாம மீண்டும் வந்து., மீண்டும் மறைந்து விட்டாரான்னு தலையச் சுத்திருச்சு சாமி!., அந்தக் கீழ போட்டுருக்கிற வரிகளை., மேல போட்டுருந்திங்கன்னா புரிஞ்சிருக்கும்.

 
At 10:14 AM, Blogger Voice on Wings said...

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் நடந்தேறியது. ஒரு வலுவற்ற, அதிகாரமற்ற பிரதமராகத்தான் அவர் திகழ்ந்தார்.

 
At 11:15 AM, Blogger தெருத்தொண்டன் said...

அப்டிப்போடு: உண்மைதான்.. குப்பையைக் கிளறியபோது கிடைத்தது.அதை முதலில் போட்டிருந்தால் சுவாரஸ்யமே இருக்காதோ என்ற நினைப்பில் பின்னால் போட்டுவிட்டேன்.

 
At 11:19 AM, Blogger தெருத்தொண்டன் said...

VoW: உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி.. சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரத்தின்போது உள்துறை அமைச்சர், பாபர் மசூதி இடிப்பின்போது பிரதமர் போன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.

 
At 1:13 AM, Blogger தாணு said...

அரசியல் விஷயங்கள் பற்றி விவாதிக்கும்போது மட்டும் எழுத்துக்களில் ஒரு கனல் தெறிக்கிறதே என்ன மாயம்?
மற்ற எல்லா நிகழ்வுகளிலும் எப்பொழுது நேர்மை இருந்தது, இப்போ காணாமல் போவதற்கு?

 

Post a Comment

<< Home