Saturday, January 21, 2006

"அந்த" நண்பர் வாழ்க!

மட்டுறுத்தலுக்கு ஆதரவு சேர்க்கும் "அந்த" நண்பர் வாழ்க!

அன்பு நெஞ்சங்கள் அனைவர்க்கும் எனது பணிவான வணக்கங்கள்.

டோண்டுவின் பெயரில் எனது முந்தைய பதிவுக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதை எழுதிய நண்பர்
"தெருத்தொண்டன்......
எஸ்ரா உண்மையிலேயே எழுதி இருந்தால் அமைதியான கண்டனம் சரிதான். தவறு என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதே சமயம் அதிமுகவின் மகளிரணிபோல சேலை தூக்கிய போராட்டங்களும் நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம் போன்ற வகையிலான எஸ்ராவுக்கு எதிரான பேச்சுகளும் சரியல்ல. இதுதான் நான் நினைக்கிறேன்.

ஆப்டாபிக்:-

உங்கள் மேல் எனக்கு தனிமதிப்பு உண்டு. இனிமேல் முகமூடி, டோண்டு, மாயவரத்தான் போன்ற தீவிரவாத பார்ப்பன வலைப்பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டால் எனது கடுமையான தாக்குதலுக்கு இலக்காக நேரிடும்.எனது கடுமையான எச்சரிக்கை! "

என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னூட்டத்தில் அவர் டோண்டு பெயரில் போட்டதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் எனக்குத் தெரியவில்லை. மிரட்டல் அல்லது எச்சரிக்கை அவரது உரிமை என்றே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அது டோண்டு (4800161) எழுதியது இல்லை என்பதால் அதை நீக்கினேன்.

நண்பருக்கு எனது "ஜனநாயக விரோத நடவடிக்கை" மீது கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. அடுத்து வந்து இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

"தெருத்தொண்டன்,இனிமேல் நீங்கள் டோண்டு, மாயவரத்தான், முகமூடி போன்ற தெருப்பொறுக்கி பாப்பார பதிவில் பின்னூட்டம் இட்டால் எனது தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று சொல்லிப் போக வந்தேன்.நலம் விரும்பி"

எத்தனையோ பதிவுகளில் மட்டுறுத்தலைப் பார்த்தும் நான் அப்போதெல்லாம் அதைப் பயன்படுத்தவில்லை. இப்போது அதைச் செயல்படுத்துவதே நல்லது என்ற எண்ணத்திற்கு வருகிறேன். "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்று சிலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.


உங்களில் பலரைப் போல அல்லது சிலரைப் போல கணினியுடன் அதிக நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. அதனால் உங்கள் பின்னூட்டங்கள் தாமதமாகவே பதிவில் தெரியும் நிலையை ஏற்படுத்தியமைக்காக உங்களிடம் நான் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.. வணக்கம்..

--

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, January 17, 2006

எஸ்ரா மீது கல் எறிய அரிய வாய்ப்பு

எஸ்ரா மீது கல் எறிய அரிய வாய்ப்பு!

நழுவ விடாதீர்கள்!!

சண்டக் கோழி விவகாரம் புதிய வடிவங்களை எடுத்து வருகிறது. தேவநேயப் பாவாணர் அரங்கில் கடந்த 16.01.2006 மாலை நடந்த கூட்டத்தைப் பற்றி ரஜினி ராம்கி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்தப் பதிவின் பின்னூட்டங்கள் நமது தமிழ் இலக்கியச் சூழலை நினைவுபடுத்துகின்றன. இலக்கியத்துக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு பெருமையைக் கொடுக்கலாம் என்று நமது சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து விடப்போகிறார்கள்.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது. குட்டி ரேவதியின் கவிதைத் தொகுதிக்கு எதிராக ஆண் ஆதிக்க சிந்தனையாளர்களின் வக்கிரமான வெளிப்பாடே சண்டக்கோழியில் இடம் பெற்ற வசனம் என்பதே எனது கருத்தும்.

சர்ச்சைக்குரிய இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் குட்டி ரேவதி என்ற பெயர் பொதுவாக இடம் பெற்றது என்ற எஸ்ரா, லிங்குசாமி வாதத்தை ஏற்பதற்கில்லை. அதேசமயம் நான் எழுதவில்லை என்று எஸ்ரா பகிரங்கமாகச் சொன்னதே எனக்கு வியப்பளிக்கிறது. நாம் எழுதாவிட்டாலும், வசனத்திற்கு நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். லிங்குசாமிக்கும் எஸ்ராவிற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது போலும்.

ஒரு படத்துக்கு வசனம் எழுதுவதற்கு கூலி பெற்ற பிறகு அதில் இடம் பெறும் ஒவ்வொரு வசனத்தையும் இது நான் எழுதியது, இது நான் எழுதாதது, இது நான் அற்புதமாக எழுதியதைத் தூக்கிவிட்டு யாரோ அற்பமாக எழுதியது என்று கூறுவது கூட்டுப் பொறுப்புடன் சிலர் இணைந்து செய்யும் எந்த பணியிலும் முறையல்ல என்றே கருதுகிறேன். இப்படி இருக்க அந்த வசனத்தை நான் எழுதவில்லை என்ற முழக்கத்துடன் லிங்குசாமிக்கும் தயாரிப்பாளருக்கும் எதிரான போராட்டத்தில் உன்னையும் இணைத்துக் கொள் என்று எஸ்ராவுக்கு அறைகூவல் விடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. நமது பணியிடங்களில் நேர்ந்துவிடும் ஒரு தவறை எதிர்த்து நீதிமன்றத்திற்கு அழைத்தால் நம்மில் எத்தனை பேர் அதற்குத் தயார் என்று ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி எஸ்ரா பேச முடியாது. ஏனெனில் அவருக்கு அடுத்த சினிமா வாய்ப்பு வேண்டும். தான் ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் செய்வதெல்லாம் சமரசம் என்று ஜேகேத்தனமாக பேசிக் கொண்டிருக்க முடியாது. யார் சமரசம் செய்து கொள்ளவில்லை? சமரசம் என்ற சொல்லே ஒப்பீட்டளவிலானது என்றே கருதுகிறேன். தனது கலை மற்றும் இலக்கிய அறிவை முதலீடாகக் கொண்டு சினிமா மற்றும் வெகுசன ஊடகச் சந்தையில் போட்டியிடத் தீர்மானித்த பிறகு அவர் அந்த விதிகளின் படிதானே செயல்பட முடியும்?

நாளிதழ் ஒன்றுக்கு தினம்தோறும் நன்றி கூறி வலை பதிக்கும் நண்பர்கள் நம்மில் இருக்கிறார்கள். வெளிச்சம் மகிழ்ச்சி தருகிறது அவர்களுக்கு. சிலர் அத்துடன் நின்றுவிடலாம். வேறு சிலர் வெளிச்சம் நோக்கி ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளாகலாம்..

ஊடகங்களில் பணிபுரியும் சில நண்பர்களுக்கு ஞானத்தந்தையாக சிலர் இருக்கிறார்கள். இவர்களது சொந்த வாழ்க்கையில் இவர்கள் செய்யும் சமரசங்களுக்கு எல்லையே கிடையாது. ஆனால் பொதுப் பிரச்னைகளில் இவர்களது சத்திய ஆவேசம் நம்மை மயிர்க் கூச்செறியச் செய்யும்.

இப்படிப்பட்டவர்களே குட்டி ரேவதி போன்றோரைத் தீயில் இட்டுப் பொசுக்க வேண்டும் என்று முரசு கொட்டியவர்கள். "காமாலைக் கண் கொண்டு பார்த்துவிட்டு" உலகம் மஞ்சளாகவே இருக்கிறது என்று முழங்குபவர்கள்.. தனக்கு ஏற்பட்ட அஜீரணக் கோளாறுக்குக் கூட யாரையாவது குற்றம் சொல்லத் தெரிந்தவர்கள்.. எனக்குத் தெரிந்து இந்த வரிசையில் நிச்சயம் எஸ்ராமகிருஷ்ணன் இல்லை. இந்த வரிசையில் இருப்பவர்களை நான் பட்டியலிட விரும்பவில்லை. அது விவாதத்தை வேறு தேவையில்லாத தளத்திற்கு இட்டுச் செல்லும்.

எந்த முகாமில் காரியம் ஆக வேண்டுமோ அந்த முகாமின் அதிகாரம் மிக்கவரைத் திடீரென அருவருக்கத்தக்க அளவில் பாராட்டும் அறிவு வறுமை இங்கே பலரிடம் இருக்கிறது. இதில் எஸ்ராவை மட்டும் ரஜினி சார் என்று எழுதியதற்கு ஏன் வசை பாடுகிறோம்? இன்று உரிமை பேசும் என் மரியாதைக்குரிய எழுத்தாளர் பிழைப்புக்காக விகடனிலும் குமுதத்திலும் பெண்ணுரிமை தேடித் திரிந்த காலம் யாருக்கும் தெரியாதா என்ன?

முறைகேடான வழியில் சம்பாதித்த பணம் வைத்திருக்கும் பலரிடம் இந்த அறிவுஜீவிகள் (திருமா மன்னிக்கவும், உங்கள் பங்களிப்பான மூளைவீங்கி என்ற சொல்லை நான் பயன்படுத்த விரும்பவில்லை) செய்து கொள்ளும் சமரசங்கள் ஊரறிந்த ரகசியம்.. கவிஞர் இன்குலாப் போன்ற சில விதிவிலக்குகள் இவர்களில் உண்டு. அந்த விதிவிலக்கான சிலர் மட்டுமே போற்றுதலுக்குரிய சொந்த வாழ்க்கையைக் கொண்டவர்கள். மற்றவர்களின் உணர்ச்சிகரமான பேச்சில் மெய்சிலிர்ப்பவர்களைப் பார்த்து வருந்துவதைத்
தவிர வேறென்ன செய்ய முடியும்?


பணிபுரியும் அலுவலகத்திலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பொறுக்கிகள் பலரிடமும் ஏராளமான பல்லிளிப்புகளையும் சமரசங்களையும் செய்து கொள்ளும் நாம் எஸ்.ராமகிருஷ்ணன் செய்யும் சமரசங்களைக் கேள்வி கேட்கிறோம். வாழ்க நமது சுய ஆய்வுகள்!

உயிர்மை விழாவில் பெண்கவிஞர்களுக்கு ஆதரவாக பிரபஞ்சன் வெளிநடப்பு செய்தாராம்.. எப்போது செய்தார்? குட்டி ரேவதியும் மாலதி மைத்ரியும் மற்ற தோழியரும் குரல் கொடுத்து வெளியேறியவுடன் அவரும் அவரது கருத்தைப் பதிவு செய்து வெளியேறினாரா? அவர் பெற இருந்த கு. அழகிரிசாமியின் கடிதங்கள் நூலைப் பெற்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அதன் பின் வெளியேறினாரா? உயிர்மை வெளியிட்ட 10 நூல்களின் ஆசிரியர்களில் பிரபஞ்சன் பெற்றுக் கொண்ட நூலின் ஆசிரியர் மட்டும் இன்று நம்மிடையே இல்லை. அவர் இருந்து அழைத்திருந்தால் பிரபஞ்சன் வெளியேறி இருப்பாரா என்பது சந்தேகமே என்று வாதிப்பவர்களுக்கு என்ன பதில்?

சினிமாவின் பெண்கள் மீதான வன்முறை என்பதற்காக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் நான் மதிக்கும் பலர் பேசியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை எஸ்.ராமகிருஷ்ணன் சினிமாவுக்கு வசனம் எழுதப் போன பிறகுதான் தொடங்கியது என்று அந்தக் கூட்டத்தின் பேச்சு மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி. அதற்கு முன் சினிமாக்கள் பெண்களை உயர்த்தின என்று கொள்வோமாக!

சண்டக்கோழி விவகாரத்தில் எனது சார்பு குட்டி ரேவதி பக்கம்தான்..குட்டி ரேவதி பொதுப்பெயர் என்று கொள்ள முடியவில்லை. அது சில சில்லுண்டிகளின் (ரஜினிராம்கி மன்னிக்கவும்) அற்பத்தனமான வக்கிரத்தின் வெளிப்பாடு. தனது கலை மற்றும் இலக்கிய அறிவை முதலீடாகக் கொண்டு சினிமாவில் பணிபுரிய முடிவு செய்துவிட்ட எஸ்ரா வால் இதற்கு மேல் பேசுவதும் பகிரங்கமாக வெளிவருவதும் சாத்தியம் என்று தோன்றவில்லை. நாம் கணினி வல்லுநர்களாக, பேராசிரியர்களாக மற்றும் பல துறைகளில் பணிபுரிந்து பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டு பத்திரிகைகள், சினிமாக்கள், அரசியல்வாதிகள் குறித்து புரட்சிகரமான கருத்து மழை பொழிவோம்! வாருங்கள்..

இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு பதிப்பகம் எதுவும் இல்லை என்று நம்புவோமாக!

உங்களில் எவனொருவன் தூயவனோ அவன் முதலில் கல்லெறியுங்கள் என்ற இயேசுவின் வாசகங்கள் நமக்கு மறந்து போகட்டும்!

"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்"
என்ற திரைப்படப் பாடலை நாம் கேட்டதே இல்லை.

குறுகிய கால நினைவு மறதி சஞ்சய் ராமசாமியை மட்டுமல்ல அனைவரையும் ஆட்கொள்ளட்டும்..

வாருங்கள்..அரிய வாய்ப்பு..இன்னொரு முறை கிடைக்குமா கிடைக்காதா தெரியவில்லை..பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

பெண்களுக்கு எதிரான இன்றைய அனைத்து சமூக அவலங்களுக்கும் எஸ்ராமகிருஷ்ணன் வசனம் தான் காரணம்..

எறியுங்கள் கல்லை!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 02, 2006

பத்ரி பதிவில் இட்ட மறுமொழி

பத்ரி,

பதிவுக்கு நன்றி..

இந்த சம்பவம் குறித்து எழுதுவதற்கோ பதிவு செய்வதற்கோ "பலருக்கு" ஆர்வம் இருப்பதில்லை. சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக கூலி விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டிப் போராடியதில் அனைத்து சாதித் தோழர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். நல்லவேளை அவர்களுடைய ஆர்வத்திற்கு யாரும் அப்போது களங்கம் கற்பிக்கவில்லை.

சீனிவாசராவ், மணியம்மை மற்றும் பலர் தலித் மக்கள் அல்லர். ஆனால் ராமய்யாவின் குடிசையில் பலியான அனைவரும் தலித் மக்கள்.. கூலி விவசாயத் தொழிலாளர்கள்..

வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய செங்கொடி இயக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு கீழ்வெண்மணி நினைவகத்தைக் கைப்பற்ற நவீன தலித் போராளிகள் முயல்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.

தென்பரை முதல் வெண்மணி வரை என்ற ஆவணப் புத்தகம் அப்பணசாமியால் தொகுக்கப்பட்டது. புத்தகத்தின் பெயர் சரிதானா என்று திடீர் சந்தேகம்.. பாரதி புத்தகாலயம் வெளியிட்டதாக நினைவு..டிசம்பர் 25, 1968 இல் உயிரோடு இருந்தவர்கள் 25 ஆண்டுகள் கழித்து அந்த கொடுமையான இரவை நினைவு கூர்ந்துள்ளார்கள்..

பாரதி கிருஷ்ணகுமாரின் சி.டி.யை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த கொடூரமான சம்பவம் குறித்து- நிலப்பிரபுத்துவத்தின் கோர முகம் குறித்து ஏன் தமிழ்ச் சூழலில் அதிகம் பேசப்படுவதில்லை?

இது விவாதத்திற்குரிய விஷயம்.

அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா என்பதாலா?

அதன்பின் வந்த அனைத்து ஆட்சிகளும் அவரது பெயரைப் பயன்படுத்துவதாலா?

அல்லது கொளுத்திய கரங்களைக் குலுக்கிக் கொண்டு செங்கொடி இயக்கத்தினர் அசெம்பிளி சீட்டுகளுக்கு ஐக்கிய முன்னணி அமைத்ததாலா?

அல்லது நிலவுடைமைப் பண்பாட்டின் ஒரு கூறைத் தேர்வு செய்து அதைக் காப்பாற்ற மாபெரும் மாபெரும் இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியம் இங்கு சில கட்சிகளுக்கு இருப்பதாலா?

சரி விடுங்கள்..

இன்னும் சில பின்னூட்டங்கள் ஏன் வரவில்லை?

இந்தப் பதிவு போடுவதில் பத்ரிக்கு ஏன் அக்கறை? எந்த ஈயத்தின் சதிக்கு பாரதி கிருஷ்ண குமார் பலியாகி இருக்கிறார்?

பத்ரியின் அலுவலகத்திற்கு வந்து பா.கி.கு காபி வாங்கி சாப்பிட்டிருப்பாரோ என்று முதலில் ஐயப்பட்டேன். ஆனால் அந்த சந்தேகத்தை பத்ரி போக்கிவிட்டார்.

அடுத்து நான் ஏன் பத்ரியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிவு போடவேண்டும்?

அவர் அது குறித்து எழுதியதற்கு மறு மொழியிட்டாயா, இவர் இது குறித்து எழுதியதற்கு பின்னூட்டமிட்டாயா? இப்போது மட்டும் என்ன அக்கறை?

இது போன்ற கேள்விக் கணைகள் வீசப்படும். புரிந்தவர், புரியாதவர், அறிந்தவர், அறியாதவர் அனைவரும் எழுப்பும் கேள்விக் கணைகளுக்கு எப்படி பதில் சொல்வது? புரியவில்லை தான்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.