Sunday, October 23, 2005

இது ஒரு நல்ல பதிவு

'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி'

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே"

"நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை விதைக்கணும்.."

"நல்ல பேரை வாங்க
வேண்டும் பிள்ளைகளே
நம்நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே"

"நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் (ந)வல்லவன்"

"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க"

இந்தப் பதிவைப் படிப்போர்க்கு முதன் முதலாக நாலு நல்ல கருத்துக்களைச் சொல்லியிருப்பதாகக் கருதுகிறேன். இப்படிப் போடப்படும் பதிவுகள் நிச்சயம் எந்தக் கத்திரிக்கும் தப்பும் என்பது இந்தத் தெருத்தொண்டனின் நம்பிக்கை.

பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பியிடம் போய் மகாத்மா காந்தி எழுதிய "சத்திய சோதனை" , வள்ளலார் அருட்பா போன்ற புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். நான் போன போது தம்பி இருந்துச்சு வீட்டுல.

நான் எல்லோருக்கும் நல்லவனா இருக்கறதுன்னு முடிவெடுத்து என் பதிவுல ரெண்டு அல்லது மூணு வரிகளுக்கு ஒரு தடவை "நல்ல" என்ற சொல் வரும்படி பார்த்துக் கொண்டதை சொன்னேன்.

சத்திய சோதனை எல்லாம் படிச்சு எல்லோரும் நல்லவரே என்ற நம்பிக்கையில் எல்லோருக்கும் நல்லவனாக நடுநிலையோடு இருக்க ஆசைப்படுவதையும் சொன்னேன்.

தம்பி வழக்கமா நான் சந்தேகம் கேட்டா பதில் சொல்லும். இந்த தடவை அது என்னை பதில் கேள்வி கேட்டுச்சு.

"நடுநிலை என்றால் என்ன?"

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, October 16, 2005

பண்பாடு கெட்டது யாரால்?

ரோசா வசந்த் பதிவு போட்டதும் மீண்டும் விவகாரம் தீவிர விவாதத்திற்குள் போய்விட்டது. குழலி பதிலுக்கு ஒன்று போட்டிருக்கிறார். நானும் என் பங்கிற்கு ஒரு பதிவு போடுகிறேன்.

நூறு பூக்கள் பூக்கட்டும் !

பண்பாடு கெட்டது யாரால்?

இங்கிலாந்தின் சார்ட்டிஸ்ட் மூவ்மென்டுக்கும் (சாசன இயக்கம்), பிரான்சின் இலக்கியப் புரட்சிக்கும், சீனத்தின் அபினி யுத்தத்துக்கும் வரலாற்றில் அழியாத இடம் உண்டு. மத நம்பிக்கைகளாலும், பிரபுத்துவப் பழமை வாதத்தாலும் சீரழிந்து கொண்டிருந்த சமூக அமைப்பை மாற்றிக்காட்டுவதில் கண்டிப்பும் கருணையும் மிகுந்த ஒரு பேராசிரியரைப் போல் இவை செயல்பட்டன.

ஆசாரக் கள்ளர்களின் பொய் முகங்களைக் கிழித்தெறிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தன. கூடுதலாக சார்ட்டிஸ்ட்டுகள்தான் ஆங்கில என்சைக்ளோபீடியா கலைக்களஞ்சியம் என்னும் தொகுப்பை வழங்கினார்கள். பிரான்சின் இலக்கியப் படைப்புகள்தான் பல நாடுகளின் புரட்சிக்கு வித்திட்டன. சீனத்தின் அபினி யுத்தம்தான் போதையிலும் அடிமைத்தனத்திலும் வீழ்ந்து கிடந்த மக்களுக்கு விடுதலையின் அவசியத்தைப் புரிய வைத்தது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பின் தோற்றம் சாசன இயக்கத்தைப் போல், பிரஞ்சு இலக்கியப் புரட்சியைப் போல், அபினி யுத்தத்தைப் போல் தமிழகத்தில் சிந்தனை மாற்றத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், புதிய சமூகக் கட்டமைப்புக்கும் வித்திடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் "கலாச்சாரப் புரட்சி' தங்கர் பச்சான் என்கிற திரைப்பட இயக்குநரை மன்னிப்புக் கேட்க வைத்ததற்குப் பழி தீர்க்கும் நோக்கில் நடிகை குஷ்புவுக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.
"பண்பாட்டு எழுச்சி'யைப் பாமரத்தனமான சினிமா ரசிகர்களின் தரத்துக்குச் சிறுமைபடுத்திவிடக் கூடாது.

பண்பாடு என்பதைத் தங்கர் பச்சானுக்கும் குஷ்புவுக்குமான தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு சமூகப் பிரச்சினை என்கிற முறையில் பண்பாடு என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்திப்போமே!

தங்கர் பச்சான் இயக்கித் தயாரித்த முதல் திரைப்படம் "அழகி'.
பள்ளிப் பருவம் முதலே தன்னுடன் பயிலும் மாணவி ஒருத்தி மீது கதாநாயகனுக்கு ஒருவித மயக்கம். நகரத்துக்குச் சென்று படித்துவிட்டு ஊர் திரும்பியவனுக்கு ஏமாற்றம். தனது பிரியத்துக்குரிய அழகியின் குடும்பம் எங்கோ போய்விட்டதால், அவளைச் சந்திக்க முடியவில்லை. வெகு இயல்பாய் மறந்துவிடுகிறான். பிறகு வசதியான வாழ்க்கை, அழகிய மனைவி என்று புதிய வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறான். ஒருநாள்...

தனது பழைய அழகி கல்யாணமாகி, கணவனை இழந்து, ஒரு சிறுவனுடன் "சித்தாள்' வேலை செய்து வறுமையில் வாடுவதை அறிந்து அவளுக்கு உதவுகிறான். பிறகு வீட்டுக்கே அழைத்து வருகிறான். புதிய அழகி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்துப் பழைய அழகியைப் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்கிறான். படுக்கையறைக் காட்சியைப் பார்த்துவிட்ட புதிய அழகி அதிர்ச்சியடைகிறாள். பழைய அழகி விலகிச் சென்று விடுகிறாள்.
இந்த நாயகன் ஒரு நல்ல காதலனும் அல்ல; நல்ல கணவனும் அல்ல. அழகி என்றால் சுகிப்பதற்குரியவள். இதற்கு மேல் அவன் சிந்திப்பதில்லை. ஆனால் அவன் சந்திக்கும் அந்த இரு அழகிகளுமே அவனை வெறுப்பதில்லை. ஆண் அப்படித்தான் இருப்பான். பெண்கள்தான் இம்மாதிரியானவர்களிடம் அன்பு கொண்டு, பக்தி செலுத்தி, தனது பூசனைகளால் அவர்களைத் தெய்வங்களாய் உயர்த்த வேண்டும் என்பதுதான் தங்கரின் "அழகி' தரும் பொழிப்புரை. ஒரே வரியில் சொல்வதானால் அழகி என்றால் அடிமை.தனது படங்களில் அவர் வலியுறுத்தும் பாடம், படிப்பினை குறித்துத் தங்கரின் சுயவிமர்சனமும் இதையே வரைகிறது.

ஒரு படைப்பாளி என்கிற முறையிலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என்கிற முறையிலும் "பண்பாடு' குறித்து இயக்குநர் தங்கர் என்ன சொல்கிறார்?

""ஓர் ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும். ஆனால், ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை என் திரைப்படங்கள் மூலம் பதிவு செய்து காட்டியிருக்கிறேன்.

குறிப்பாக எனது "தென்றல்' படத்தில் தாலி இல்லாமல்கூட இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும், தன் மனதைப் பறிகொடுத்தவன் நினைவிலேயே வாழ்ந்த பெண்ணைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
இப்போது வெளியாகியிருக்கும் "சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' படத்தின் ஹீரோயின் கூடப் பல சூழல்களிலும் தடம்புரளாமல் கற்பு நெறியோடு வாழ்வதைத்தான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

இவைகளை நான் ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நம் தமிழர்களின் கலாசாரத்தை தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மட்டுமே நான் பதிவு செய்து வந்திருக்கிறேன்'' என்கிறார் தங்கர்.

ஆண், சுதந்திரனாகப் படைக்கப்பட்டவன். பெண் அவனுடைய சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள். கற்பு என்பதும் ஒழுக்க நெறி என்பதும் பெண்ணுக்கே உரியது என்று தங்கர் வந்துதான் போதிக்கிறார்; பதிவு செய்கிறார் என்று போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் வெகு காலத்துக்கு முன்பே இங்கே பேசியும் பேணியும் வருகிற சாத்திர தருமமும் இதுதான்.
ஆண்கள் எப்படியும் வாழலாம் என்று போக்கிரித் தனத்துக்குப் பூரண சுதந்திரம் வழங்கி, அது இயற்கை அல்லது ஆண்டவன் விதித்த நியதி, அது ஆண்களின் கேள்வி கேட்கப்பட முடியாத உரிமை என்று தடித்த குரலில் போதிக்கும் ஒரு சமூக அமைப்பை நியாயப்படுத்துகிறார் தங்கர்.
தங்கரின் தென்றல் கற்பு நெறியை மாத்திரமல்லாது "தமிழ் உணர்வின்' தரம் குறித்தும் விரிவுரை செய்கிறது.

கதாநாயகன் ஒரு தமிழ் பாதுகாப்பாளன். தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திச் சிறைக்குச் செல்கிற ஓர் "இலட்சிய' எழுத்தாளன். அவனால்தான் கதாநாயகி சீரழிக்கப்படுகிறாள். பெண் என்பவள் ஆசைக்கு அணைத்துக் கொள்ளவும், மோகத்தை தீர்த்துக் கொள்ளவும் வசதிக்கேற்ற விலைக்கு விற்கப்படும் ஒரு கவர்ச்சிப் பொருள் என்பது இந்தத் தமிழ் உணர்வில் மூழ்கிய இலட்சியவாதியின் கருத்து. தேவைப்படும் போதெல்லாம் இருக்கிற பணத்துக்கு ஏற்ப கிடைக்கிற பெண்ணுடன் படுத்துப் புரண்டு மறந்து விடுவது அவனுடைய சுபாவம்.

தமிழ் உணர்வாளனை இவ்வளவு தரங்கெட்ட முறையில் யாரும் சித்திரித்ததில்லை. ஆனால், இது குறித்து யாரும் பொங்கி எழவும் இல்லை.
தங்கரின் "தென்றல்' தமிழ் உணர்வையும் தமிழியக்கத்தையும் இழிவு செய்தபோதிலும், ஆண்களுக்குள்ள "தனி உரிமை'யை எந்தப் பெண்ணையும், எத்தனை பெண்களையும் அனுபவிக்கலாம் என்கிற சுதந்திரத்தை மறுக்கவில்லை என்பதால் பண்பாட்டுப் பூசாரிகள் யாரும் பதறிவிடவில்லை.
திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்குப் பின்பும் ஆண்கள் எப்படியும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம்; அது தப்பில்லை என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சமூக அமைப்பில் பெண்களின் "கற்புக்கு' என்ன உத்தரவாதம்?

ஊர்ப் பெண்களையெல்லாம் நான் அனுபவிப்பேன். ஆனால், எனக்கு மனைவியாக வருகிறவள் மாத்திரம் "உத்தம பத்தினி'யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவெல்லை கடந்த ஆணவம் நிறைந்த ஆசையல்லவா?

ஆண்கள் யோக்கியர்களாக இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் "கறை' படாதவர்களாக இருக்க முடியாது என்கிற எதார்த்தம் எதிர்கொள்ளும்போது, அந்தோ, தனக்குள்ள "சுதந்திரமே' அச்சுறுத்தலாகவும் மாறிக் கலங்கித் தவித்து ஒவ்வொரு நிமிடமும் தனது மனைவியைக் கண்காணித்து, இத்தனை கட்டுப்பாட்டுக்குள்ளும் எப்படி இவளால் சிரித்து சிங்காரித்து வாழ முடிகிறது என்று சந்தேகித்து, அவள் அழகாய் இருப்பது வேறொருத்தனுக்காகத்தானோ என்று குமுறிக் குமைந்து நிம்மதியற்று நித்தம் நித்தம் வெந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

இம்மாதிரியான கலகத்திலும் குழப்பத்திலும் தவிப்பிலும் தகிப்பிலும் ஆண்கள் நிம்மதியற்றுப் போனதால்தான் கற்பு ஒழுக்கம், பண்பாடு என்கிற கூப்பாடு வெகுகாலமாய்க் காதைக் கிழிக்கிறது.

தன்னைப் பற்றிய குற்ற உணர்வும் பெண்ணைப் பற்றிய சந்தேக உணர்வும் ஒன்று திரண்டு ஒவ்வொரு ஆணையும் மிரட்டுகிறது. இந்த அச்சத்திலிருந்து தப்பும் மார்க்கமாக அவன் பத்தினித் தெய்வங்களையும் கற்புக்கரசிகளையும் தேடித் திரிந்து புனைந்துருவாக்கி ஆறுதலடைகிறான்.

தன்னைப் போன்ற "சாத்தான்கள்' உருவாக்கிய "தெய்வம்' தான் கற்புக்கரசி என்கிற நினைப்பு வருகிறபோது, தன் மனைவி தன் மரணத்துக்குப் பிறகும் கற்பு நெறியில் இருப்பாளா? என்கிற சந்தேகம் அவனைக் குத்திக் கிழிக்கிறது.
சஞ்சலப்படும் அவன் குரூரமான முடிவுக்கு வருகிறான். "கணவன் இறந்தால் அவனுடைய மனைவியும் அவனுடன் எரிந்து சாம்பலாக வேண்டும். "உடன்கட்டை' ஏறுதலே பெண்மைக்குப் பெருமை'' கற்பின் கனலி சீதையின் வழிவந்தவளே நீ தெய்வப் பிறவி. வா, இந்த நெருப்பில் இறங்கு, போ அந்த சொர்க்கத்தில் சுகமாக உறங்கு''என்று சதி தருமம் பேசும் கொலைகாரனாகவும் மாறுகிறான். இந்தக் கொலைவெறியை ஒரு சமூக நீதியாகவும் பாரதப் பண்பாடாகவும் இன்றும் போற்றுகிறவர்கள் இல்லையா?
கணவன் இறந்த பிறகும் வாழும் "விதவைக்கு' மனித அந்தஸ்து மறுக்கப்படுவதுடன் ஒரு பிடி சோற்றுக்குக்கூட இரக்கமுள்ளவர்களின் கருணைக்குக் காத்திருக்கும் நிலை.

ஆணாதிக்க சமூக அமைப்பு பெண்ணைச் சாகும்வரை துரத்துகிறது.
இந்த ஆணாதிக்க அக்கிரமத்துக்கு அடிப்படைக் காரணம் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லாதது தான். தனிச் சொத்துரிமையின் முதல் தாக்குதல் பெண்மீதே தொடங்கியது என்று கல்வியும் பெரியார்களும் பெண்ணுக்குப் புரிய வைத்தபோது, பிடி சோற்றுக்காக அடிமையாக வாழ்வதைவிட தனது உழைப்பின் மூலம் சுதந்திரமாக வாழ முடியும் என்று தன்னம்பிக்கையோடு மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் வெளியே வந்தால் காஞ்சி சங்கராச்சாரி போன்ற மதகுருக்கள் "நெற்றிக்கண்' திறக்கிறார்கள்.

"வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் ஒழுக்கக்கேடானவர்கள்'' என்று சங்கராச்சாரி உழைக்கும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் சூட்டியபோது, பெண்கள் மீதான தங்கள் ஆதிபத்திய உரிமையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இழந்துவிடுவோமோ என்று கலக்கமுற்றிருந்த ஆண்களுக்கு அது வீசுதென்றலாய் வருடியது. பெண் சமூகமும் சங்கராச்சாரியின் அவதூறு குறித்து ஆத்திரம் கொண்டு துடைப்பக்கட்டை தூக்கவில்லை.

""பணத்துக்காக நடிக்கும் நடிகைகளும் விபச்சாரிகளே'' என்று தங்கர்பச்சான் எப்படிக் கூறலாம் என்று கொதித்தெழுந்த நடிகைகள் சங்கராச்சாரி உழைக்கும் பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று வசைபாடியபோது, செவிடராய், ஊமையராய்ச் சலனமற்றுக் கிடந்தது ஏன்?

இன்று நடிகை குஷ்பு கூறிய கருத்துக்களால் தமிழ்ப் பெண்களின் மானமே தாக்கப்பட்டு விட்டதாகப் "புண்பட்ட நெஞ்சோடும்' போராடும் துணிவோடும் புறப்பட்டிருக்கும் மகளிர் அணிகூட சங்கராச்சாரிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்?

படுக்கையறை அந்தரங்கங்களைப் பகிரங்கமாகப் பாடித் திரிந்த ஆண்டாளையும், அவள் பாசுரங்களைப் பஜனை பாடிக்களிக்கும் அடியார் கூட்டத்தையும் போற்றித் துதிப்பது எப்படி?

பெண்களை இழிவு செய்வதிலும் அடிமைப்படுத்துவதிலும், மதகுருமார்களின் பங்கை நேர்மை உணர்ச்சியுள்ள யாராலும் மன்னித்து விட முடியாது.
இந்து (ஆரிய) மதத்தில் கடவுள்கள் கூடக் குடிகாரனாகவும், காமுகனாகவும், ஒழுக்கக் கேடானவனாகவும், ஓரினச் சேர்க்கையிலும், மிருகங்களைப் புணர்வதிலும் வெறிகொண்ட வெட்கமற்ற கழிசடையாகவுமே இருக்கிறார்கள். பண்பாட்டுப் போராளிகள் யாரும் இந்த ஆபாசங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

இந்து மதம் பெண்களை மாத்திரமல்ல, ஆரியரல்லாத அனைத்து மக்களையுமே இழிவு செய்கிறது. ஆரியரல்லாத மக்களை அரக்கர்களாகவும், அழிக்கப்பட வேண்டியவர்களாகவுமே சித்திரிக்கிறது.

ஆனாலும், மதமில்லாத, இறையச்சம் இல்லாத உலகத்தை நினைக்கவே நமது சமூகம் அஞ்சுகிறது. "தேசியப் பெருமிதங்கள்(!)' "தமிழ் முழக்கங்கள்' எல்லாம், வீர சைவமாய், விஷ்ணு பக்தியாய் வீழ்ந்து பணிவதிலிருந்து விடுபட முடியவில்லை.

பிரதமர் குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களும் விஞ்ஞானிகள் என்று பசப்புகிறவர்களும் கூட மத பீடங்களுக்கு முன் மண்டியிடும்போது, யாருக்குத்தான் மத நம்பிக்கைகளிலிருந்து விடுபடவும், மதகுருமார்களை எதிர்க்கவும் துணிச்சல் வரும்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், மக்களுக்கு உண்மையாயிருப்போம் என்று மக்கள் சக்திக்குத் தலை வணங்காமல் கடவுள் பெயரால் பதவி ஏற்கும்போது, கடவுளே அனைவர்க்கும், அனைத்துக்கும் மேலான அதிபதி என்று முட்டாள் தனத்தை வளர்க்கும்போது, பெண்ணுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, மனித உரிமை எல்லாமே மலிவான வெற்று முழக்கங்களாக மாறிவிடுகின்றன.

பக்திப் பரவசம், பரத்தையர்சேரி, பத்தினிக் கதைகள், பால்வினை நோய்கள், மாயாவாதம், மரணபயம், அகிம்சாவாதம், ஆயுதப்படைகள், சக்தி வழிபாடு, உடன்கட்டை ஏற்பாடு... இந்த இரட்டை நிலைதான், பொய்முகத்துடன் திரியும் ஆசாரக் கள்ளர்கள் போற்றிப் புகழும் "தமிழ்ப்பண்பாடு', பாரதப் பண்பாடு, வாழ்ந்து தீர்ந்து போன உலகளாவிய நிலப்பிரபுத்துவப் பண்பாடு.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சி, நிலப்பிரபுத்துவத்தை உலுக்கியது. புதிதாய் எழுந்த ஆலைச் சங்கொலிகள் பழைய சமூகக் கட்டமைப்பின் இறுதியை முன்னறிவித்தன.

எங்கெல்லாம் முதலாளித்துவ ஆதிக்கம் நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா விதமான பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழிச் சமுதாய உறவுகளுக்கும் கிராமியப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது.

"தெய்வீக உரிமை பெற்ற மேலோர்'க்குத் தாள் பணியுமாறு கட்டிப்போட்ட பல்வேறு விதமான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது.

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தைத் தவிர பரிவுணர்ச்சியில்லாப் "பணப் பட்டுவாடா'வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கியது.

சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், உளநெகிழ்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களையெல்லாம் சுயநலவேட்கையெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துவிட்டது.

மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாக வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கிறது.

சுருங்கச் சொல்வதெனில் மதப்பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.

ஆதிக்க சக்தியாக மாறிவிட்ட முதலாளித்துவத்தின் வசீக முழக்கங்களும் சுதந்திரப் பிரகடனங்களும், வெகுகாலமாய் ஆணாதிக்கக் கொடுமையின் கீழ் அழுந்தி வதைபட்ட பெண்ணின் மனத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பின் நவீனத்துவம், கட்டுடைத்தல் என்கிற கருத்தியல், புதிய சமுதாயத்திற்கும் பெண் விடுதலைக்குமான போராயுதமாக மின்னிச் சுடர்கிறது.
பிரபுத்துவக் கட்டமைப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த "அடிமைப் பெண்களை' முதலாளித்துவம் சுதந்திரமான அழகிகளாய் உலகுக்குக் காட்டுகிறது.

கணவன் விருப்பப்படியான உடலுறவுக்குப் பதில் கட்டுத் தளையற்ற காமத்துக்கு வரவேற்பளிக்கிறது. மறைவில் நடந்த கள்ள உறவுகளை அலங்கார மேடைகளில் வெளிப்படையாய் அரங்கேற்றுகிறது.
"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரொக்கத்துக்கு முன் விசாரணை செய்கிறது.

சந்தைப் பொருளாதாரத்தை விரிவு செய்கிறது. ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையடிக்க எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பளிப்பதாக ஒப்பந்தம் செய்கிறது. உலகைக் கொள்ளையடிக்க விரும்பும் ஒரு சமூகம் பழைய பண்பாடுகளையும் "பாரம்பரியப் பெருமை(!)'களையும் காதல், கற்பு, திருமணம் என்னும் "புனித (!)' உறவுகளையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது.

தாகத்துக்காகக் "கிணறு' தோண்டிக் கொண்டிராதே; கிணற்றை வழிபடாதே; எதையுமே பயன்படுத்தித் தூக்கியெறி என்னும் நுகர்வுக் கலாச்சாரம் ஒன்று உருவாகிறது. இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண் ஒரு கவர்ச்சியான விற்பனைச் சரக்காகிறாள். கலை, இலக்கியம், பத்திரிகை, இணைய தளம் எங்கும் எதிலும் வெறியூட்டும் கவர்ச்சி, வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது.
"உலகமயமாக்கலின்' தவிர்க்க முடியாத தேவையாக மக்களைப் போதையிலாழ்த்தும் விபரீதங்கள் புதிது புதிதாய் மலர்கின்றன. முன்பு சபிக்கப்பட்ட அபலையாய் அழுது கொண்டிருந்த பெண், இப்போது "சுதந்திர'ப் பிறவியாய் எல்லா விளம்பரங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
முன்பு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த பெண் இப்போது புன்னகையோடு புதைந்து கொண்டிருக்கிறாள்.

முன்பு ஆணின் தனிச்சொத்தாக இருந்த பெண் இப்போது உலகமயமாக்கப்பட்டு விட்டாள்.

பிரபுத்துவ சமூக அமைப்போ தனது அழிவின் விளிம்பில் நின்று கடைசி முயற்சியாகப் "பண்பாட்டுப் பதாகை'யை உயர்த்திப் பிடித்து இன்னும் தன்னிடமிருந்து வெளியேறாத பெண்களின் காலடியில் விழுந்து மன்றாடுகிறது.

ஒருபுறம் நிலப்பிரபுத்துவப் பழமைவாதம்; மறுபுறம் முதலாளித்துவ ஏகாதிபத்தியப் புதுமை மோகம்! இருபுறத்திலும் இரு தத்துவங்களும் பெண்ணையே முன்னிறுத்துகின்றன. இந்த இருபுறத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரமில்லை என்பதை இரு தரப்பிலும் பெண்கள் உணரவில்லை.

அங்கே தனது விலங்கை மெச்சிக் கொள்கிறாள் பெண்.
இங்கே தனது விலையை மெச்சிக் கொள்கிறாள் பெண்.


""ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழலாம். ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழவேண்டும்'' என்றொரு "பண்பாடு' வலியுறுத்தப்படும்போது,
ஆண்கள் எப்படியும் வாழ உரிமை பெற்ற ஒரு சமுதாயத்தில், "அதுதான் பண்பாடு' என்று போதிக்கும் ஒரு சமூக அமைப்பில்,
"எப்படியும்' வாழும் உரிமை பெற்ற ஆண்களால் "இப்படித்தான்' வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கூட ஆணின் மோக வெறிக்கு இரையாக மாட்டாளா? இங்கே பெண்ணின் "கன்னித்தன்மைக்கு' என்ன உத்தரவாதம்?

இந்தப் பின்னணியில் தான் "பெண்கள் திருமணமாகும்போது கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமுதாயம் விடுதலை பெறவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன்பு "செக்ஸ்' வைத்துக் கொள்ளும்போது, கர்ப்பம், பால்வினை நோய் முதலியவற்றைத் தவிர்க்க பெண்கள் பாதுகாப்போடு செயல்பட வேண்டும்'' என்று குஷ்பு கூறுகிறார்.
""தென்றல்' கதாநாயகியின் நிலை எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது'' என்பதுதான் குஷ்புவின் கருத்து.

ஆனால், ""பாதுகாப்பான செக்ஸ் என்பது ஆணுறை விளம்பரத்துக்கே உதவும் ஆணாதிக்கத்தை ஒழிக்காது'' என்கிறார் தொல்.திருமாவளவன். அவருடைய வாதம் நியாயமானதுதான். ஆனால், தீர்வு?

""ஆண்களின் நலனுக்காக ஆண்களால் கற்பிக்கப்பட்டு, பெண்களின் மீது திணிக்கப்பட்ட வன்முறை தான் கற்பு.

ஊரறியத் திருமணம் செய்து கொண்டாலும் பிறக்கிற குழந்தை தனக்குப் பிறந்ததே என்று உறுதி செய்து கொள்வதற்காகப் பெண்களின் மீது திணிக்கப்பட்டதுதான் கற்பு.

ஆண்களின் சொத்தாசை தான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியுள்ளது'' என்று சரியாகவே கூறிய திருமாவளவன் (இந்தியா டுடே ஜனவரி 16, 2005) குஷ்புவால் தமிழ்ப் பண்பாடு கெட்டுவிட்டதாக இப்போது சொல்வது, முரண்பாட்டின் முட்டுச் சந்தில் அவர் சிக்கிக் கொண்டதையே காட்டுகிறது.

திருமாவளவனின் முற்போக்குச் சிந்தனை, அவரை உயரமான இடத்துக்குக் கொண்டு வருகிறது. தனிப்பட்ட கோபதாபமோ அவரைப் பள்ளத்தாக்கில் இழுத்துத் தள்ளிவிடுகிறது.

முற்போக்குச் சிந்தனையாளர்கள்,
பெண், தலித், கறுப்பின மக்கள்
இவர்களின் குரலை அக்கறையுடன் பரிசலீக்க வேண்டும். "நாடு கடத்துவோம்; தூக்கிலிடுவோம்' என்று உணர்ச்சிமீதுறப் பேசுவது பாசிசப் போக்கே ஆகும்.
நிலப்பிரபுத்துவமோ, முதலாளித்துவமோ, ஏகாதிபத்தியமோ பெண் விடுதலையை அனுமதிக்காது. பெரியாரியமுமே மார்க்சியமுமே உண்மையான பெண் விடுதலையை உறுதி செய்யும். சோஷலிசமே சமூகக் கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் என்கிற புரிதலுடன் இயக்கம் நடத்தும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்.
இவர்கள் சங்கராச்சாரிகளையும் எதிர்ப்பார்கள். சங்க இலக்கியமே ஆனாலும் தவறென்றால் எதிர்ப்பார்கள்.
தனிச் சொத்துரிமையின் அழிவிலேதான், வர்க்கப் பகைமையின் இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட புதிய சமூகத்திலேதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். அங்கே அவள் அடிமை அல்ல; விளம்பர "அழகி' அல்ல; சுதந்திரச் சிந்தனைகள் மலர்ந்த அன்புமயமான தோழி!'

நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, October 15, 2005

கடைசிப் பக்கக் கவர்ச்சிப் படம்


இன்று தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல் பார்த்தேன். அதன் கடைசிப் பக்கத்தில் "கலக்கலான மாலை நாளிதழ்" பாணியில் ஒரு கவர்ச்சிப் படம் போட்டிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். அந்தப் பக்கத்தில் நான் பார்த்த கவர்ச்சிப் படத்தை நீங்கள் பார்க்கவும் தருகிறேன்.




அப்பாடா! நானும் படம் காட்டி விட்டேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, October 07, 2005

தமிழ்நாட்டை விட்டு ஓடு

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை.

பிற ஊடகங்களுக்கு முன்பே வலைப்பதிவில் மிக நீண்ட விவாதம் நடந்து முடிந்துவிட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் குஷ்பூ விவாதம் தொடர்கிறது.

திண்ணையில் இருந்து விஸ்வாமித்ரா என்பவரது எழுத்தை நெய்வேலி விச்சு அவரது பதிவில் போட்டிருக்கிறார். விஸ்வாமித்ராவின் நோக்கில் வேறு காழ்ப்பு தெரிகிறது. அதற்கு பதிலாக குழலி ஒரு பதிவு போட்டிருக்கிறார். இன்று வந்த ஆனந்த விகடன் மற்றும் குமுதம் குஷ்பூவின் கருத்தை வெளியிட்டிருக்கின்றன.

ஆண் திமிர் அடக்கு என்று அ.மார்க்ஸ் தீராநதியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாராம். நான் இன்னும் படிக்கவில்லை.

தாமரை தலையங்கம் எழுதியிருக்கிறது.

ஞாநி "தீம்தரிகிட" இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்..

இதில் எனக்கு இருக்கும் உடன்பாடு, வேறுபாடு வேறு விஷயம். அ.மார்க்ஸ், ஞாநி, மாலன் போன்ற ஜனநாயக அடிப்படையிலான கருத்துப் போரை நான் ஆதரிக்கிறேன். விஸ்வாமித்ரா போன்றவர்களின் காழ்ப்பு அரசியலை நான் அறவே வெறுக்கிறேன்.

இங்கு ஞாநியின் பத்தியை பதிவு செய்கிறேன்.

குஷ்பு, கற்பு
தமிழ்நாட்டின் கற்பனை அரசியல்
ஞாநி

முதலில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்புக்கு நன்றி சொல்ல வேண்டும். திருமணமாகாத நகர்ப்புறத்து இளம் பெண்களின் பாலியல் பார்வை பற்றிய கருத்துக் கணிப்பின் மீது குஷ்புவிடம் கருத்து கேட்டதற்காக.

குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடந்திருக்கும் அராஜகங்களில், தமிழ்நாட்டு அரசியல் ஆம்பளை சிங்கங்கள் பலரும் அம்பலப்பட்டிருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதியின் "தமிழ் முரசு' பேரக் குடும்பம் முதல் இங்கிலீஷ் தாத்தா' ராமதாஸ், "எல்லாரும் விபசாரி' புகழ் தங்கர்பச்சான், "ஜக்கி பக்தர்' திருமாவளவன், நடிகர் சங்க கேப்டன்' விஜயகாந்த், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் என்று பலரும் தங்கள் ஆம்பளைத் திமிரை வெவ்வேறு விதங்களில் அம்பலப்படுத்திக் கொண்டார்கள்.

குஷ்புக்கு எதிர்ப்பைத் தூண்டிவிட்டது திரைமறைவில் யார் யார் என்பது தெரிய வராமலே போகலாம். ஆனால் "தமிழ்முரசு' பத்திரிகை தினசரி முதல் பக்கத்தில் குஷ்புக்கு எதிரான திரிப்பு வேலையை செய்தது. எந்த சன் டி.வி.க்கு ஆங்கிலப் பெயர் இருப்பதை நியாயப்படுத்தி அறிக்கை கொடுக்குமளவுக்கு பேரப் பாசம் கலைஞர் கருணாநிதிக்கு பொங்கி வருகிறதோ, அதே சன் டி.வி. குழுமம்தான் "தமிழ் முரசு' ஏட்டை தமிழர்களுக்காக "டக்கராக' நடத்திக் "காட்டிக்' கொண்டிருக்கிறது.

தன் பேரக் குழந்தைகளை டெல்லியில் (தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும்) ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிட்டு, இங்கே "டமில் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மருத்துவர் மாலடிமையின் குடும்பக் கட்சியின் மகளிர் அணிதான் குஷ்புவுக்கு எதிராக தமிழ்ப் பெண்களின் கற்பைப் பாதுகாக்க வழக்குகள் போட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்ஸ்.. பெரியார், அம்பேத்கர் மூவருமாக ஓருருவில் அவதரித்த ஜக்கி வாசுதேவரிடம் யோக நிஷ்டை பயின்ற திருமாவளவனுக்கு, திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதிக்காரர்கள் வீடு நோக்கியோ, மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள் வீடு நோக்கியோ, கழுதை ஊர்வலம் நடத்தத் தோன்றவில்லை. அவருடைய கட்சி மகளிர் அணி குஷ்பு வீட்டுக்கு கழுதை ஊர்வலம் நடத்துகிறது.

உழைத்த தொழிலாளி தினசரி பேட்டா கேட்டதை ஆதரித்த நடிகையை, காசுக்காக வேலை செய்யும் விபசாரியுடன் ஒப்பிட்ட "தமிழ் சினிமாவின் ஒரே அறிவுஜீவி' தங்கர்பச்சான், தன் படங்களில் எல்லாம் தான் தமிழ்ப் பெண்களின் கற்பையே போற்றி வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்து தங்கரை மன்னிப்பு கோரவைக்கச் செய்த நடிகர் சங்க கேப்டன், குஷ்பு வீட்டுக்கு கழுதை ஊர்வலம் சென்றதையோ, குஷ்புவை மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்ததையோ, நடிகர் சங்கத்துக்குள் துடைப்பக்கட்டைகளை வீசியதையோ எதிர்க்காமல் மௌனமாக இருந்து தானும் "ஆம்பள'தான் என்ற நிரூபித்திருக்கிறார்.

குஷ்பு சொன்னது என்ன? அவர் சொன்னதாக தமிழ் முரசும் மற்றவர்களும் சொன்னது என்ன?

"பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது'' என்று 23.9.05 இதழில் முதல் பக்கத்தில் தன் "பொய்யை'த் தொடங்கிய தமிழ் முரசு தொடர்ந்து "தமிழ்ப்பெண்கள் கற்பு இல்லாதவர்களா?' என்று தலைப்பிட்டு இந்த செய்திகளை வெளியிட்டு வந்தது.

ஆனால் இந்தியா டுடே இதழில் குஷ்புவின் பேட்டியில் ஒரு இடத்தில் கூட "தமிழ்ப் பெண்கள்' என்ற சொற்றொடரே கிடையாது. இந்தியா டுடே நடத்திய சர்வே நகரங்களை மட்டுமே பற்றியது. எனவே குஷ்புவின் பேட்டியிலும், "பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை, பெங்களூரை விட பின்தங்கியே இருந்தது. இப்போது சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள்'' என்று ஆரம்பிக்கிறது.

குஷ்புவின் கருத்தைத் திரித்து, இதில் தமிழ்ப் பெண்களின் கற்பு என்ற சொற்றொடரை ஏற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்தது தமிழ் முரசு. குஷ்பு பேட்டிக்கு "காலாவதியாகும் கற்பு' என்ற தலைப்பை இந்தியா டுடே அளித்தது வசதியாகப் போய்விட்டது.

குஷ்புவின் இந்தியா டுடே பேட்டியில் அவர் ஒன்றும் பெண்கள் திருமணத்துக்கு முன்னால் யாரோடும், பலரோடும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அப்படி அவர் சொன்னார் என்கிற பொருள் வருவது போல தொடர்ந்து பிரசாரம் நடத்தப்பட்டது, நடத்தப்பட்டு வருகிறது.

""என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல.... அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய் பிரண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்றுதான் குஷ்பு சொல்லியிருக்கிறார்.

திருமணத்துக்கு முன்னால் உறவு வைப்பதைப் பற்றி குஷ்பு சொன்னது என்ன?

"ஒரு பெண் தனது பாய் பிரெண்டைப் பற்றி உறுதியாக இருக்கும்போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம்... நான் காதலித்த நபரைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால், திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்'' என்று சொல்லியிருக்கிறார்.

குஷ்புவின் இந்த நேர்மை பாராட்டப்பட வேண்டியதே தவிர, கண்டிக்கப்பட வேண்டியது அல்ல. அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய ஏற்பாடு செய்த, தூண்டிய ஒரு அரசியல் தலை கூட இதே நேர்மையோடு தங்கள் காதல், திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேச மாட்டார்கள்.

குஷ்பு விஷயத்தில் இப்படி நடந்ததற்கு காரணம் என்ன? ஒவ்வொருவரின் உள்நோக்கமும் என்ன? அதில் ஏதாவது நியாயம் உண்டா?

தமிழ் முரசு திமுக தலைவர் குடும்பத்திலிருந்து வரும் பத்திரிகை. சன் டி.வியைப் போலவே அதுவும் தாங்கள் அடுத்து மாற்றி வெளியிட இருக்கும் தினகரனும் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டுமென்பது "நிதி'களின் விருப்பம். "தினமலர்' பின்பற்றிய அத்தனை மட்டரகமான உத்திகளையும் தாமும் பின்பற்றி அந்த இடத்தை அடைந்துவிடலாம் என்று நம்புகிறார்கள் என்பது பத்திரிகையைப் பார்த்தாலே தெரியும். தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கொச்சைப் படுத்துவதாக சொல்லும் இந்தப் பத்திரிகை பக்கத்துக்குப் பக்கம் தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, எல்லா பெண்களையும் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

சேலை தலைப்புகளை நீக்கிவிட்டு படம் வெளியிட்டு அவற்றுக்கு இவர்கள் தரும் தலைப்புகள் ஆபாசமானவை. இதைச் செய்யும் திறமையுள்ள தினமலர் உதவி ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தினகரன் தமிழ் முரசு வளாகத்தால் வலைவீசி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தினகரனில் பல்லாண்டுகளாகப் பணியாற்றியவர்கள் வேலையை விட்டு பல வழிகளில் துரத்தப்படுகிறார்கள். எந்த பத்திரிகையாளர் யூனியனும் இதைப் பற்றிவாயைத் திறக்கவில்லை.

பத்திரிகையாளர்களிடம் மனு வாங்காமல் முதலமைச்சர் ஜெயலலிதா சென்றதைக் கண்டித்து காரை மறித்துப் போராடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அப்போது அதை திரும்ப திரும்ப காட்டிய சன் டி.வி.தான் இப்போது தினகரனில் பத்திரிகையாளர்களை வேலையை விட்டு துரத்துகிறது.

தினமலரைப் போலவே தமிழ் முரசு பின்பற்றும் பத்திரிகை உத்திகள் தனி மனித உரிமை மீறல்களாகவும் உள்ளன. சென்னை பார்க் ஹோட்டலில் நடனக் களத்தில் ஜோடிகள் முத்தமிட்டுக் கொள்வதை அவர்கள் அனுமதியின்றி படம் எடுத்து வெளியிட்டது முற்றிலும் அராஜகமானது. அத்துமீறலானது.

இதுபோன்ற நடவடிக்கையை வெளி நாடுகளில் செய்தால், நஷ்ட ஈடு கோரி சம்பந்தப்பட்டவர்கள் போடும் வழக்கில் சன் டிவியே திவாலாகிவிடும். நம் நாட்டில் இத்தகைய தனி நபர் உரிமைகளுக்காக சட்டப்படி நீதி பெறக் கடும் முயற்சிகள் தேவை என்பதால், தப்பித்துக் கொள்கிறார்கள். (பொது மக்கள் எதிர்ப்பினால்தான் இதற்கு முன்பு இதேபோல கேண்டிட் கேமரா நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் நிறுத்த வேண்டி வந்தது.)

சன் டிவியின் எதிரி சேனலான ஜெயா டிவியின் முக்கிய ஸ்டார் குஷ்பு. அவருடைய இமேஜைக் குலைப்பது தொழில் போட்டிக்கு உதவக்கூடியதுதான். இப்படி தமிழ் முரசும் சன் டிவியும் குஷ்பு பிரச்னையை வியாபார உத்தியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது ஒரு புறம்.

அதை நடத்தும் குடும்பத்தின் கேடயமான திமுக கட்சி இந்தப் பிரச்னையை எப்படி பார்க்கிறது? கூட்டணிக் கட்சியான பட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி தெருவுக்கு வந்து போராடும் இந்த பிரச்னையில் திமுகவின் நிலை என்ன? வாயைத் திறக்கவில்லை.

இதைப் பெரிது படுத்த வேண்டாம் என்று "நிதி'த்தாத்தா "நிதி'ப் பேரன்களுக்கு சொன்னதாகவும் தெரியவில்லை. நிரூபிக்கப்படாத, நிரூபிக்கப்பட முடியாத பத்திரிகை வட்டார வதந்திகளின்படி வரவிருக்கும் தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக குஷ்புவை அதிமுக நிறுத்த திட்டமிட்டிருந்ததாம். ஜெயா டி.வி. மூலம் பெண்களிடம் கணிசமான செல்வாக்கு உடைய குஷ்புவுக்கு எதிராக பெண்களின் வாக்குகளை திருப்ப, இந்தியா டுடே பேட்டியை சன் டி.வி., தமிழ்முரசு முதலியன வாகாகப் பயன்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

சன் டி.வி., தமிழ் முரசு, குங்குமம் என்று தமிழ் நாட்டில் தொலைக்காட்சித் துறையையும், அச்சுத்துறையையும் மலினப்படுத்தும் வேளையில் ஈடுபட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கவிஞர் கனிமொழிதான். குஷ்பு சர்ச்சை தொடர்பாக அவர் "அவுட்லுக்' இதழில் பாலியல் உணர்வு பற்றிப் பெண்கள் பேசுவது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமாகாது என்றும் பண்பாட்டுச் சுமையை பெண்கள் மீதே சுமத்தும் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தும் கூறியுள்ளார்.

குஷ்புவுக்கு எதிராக ஏன் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தெருவுக்கு வரவேண்டும்? சினிமா துறையில் இருக்கும் தங்களுடைய முக்கிய ஆதரவாளரான தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்க வைத்ததாலும், அவரைக் கடுமையாக விமர்சித்ததாலும் குஷ்பு மீது இருக்கும் கோபமே காரணம் என்று கருதப்படுகிறது.

விஜய்காந்த் அரசியலில் நுழையும் தருணத்தில் சினிமாக்காரர்களின் மொத்தமான இமேஜை கொஞ்சம் காலி பண்ணுவது அவரையும் பலவீனப்படுத்த உதவும் என்பது இன்னொரு அரசியல் கணக்கு.

விஜய்காந்தும் "தமிழ்' பிம்பத்தைப் பயன்படுத்துபவர் என்பதால் தமிழ்ப் பெண்களின் கற்பு பக்கம் நிற்கப் போகிறாரா, அதை கொச்சைப்படுத்திய சக நடிகர் குஷ்பு பக்கம் நிற்பாரா என்ற தர்மசங்கடத்தை அவருக்கும் ஏற்படுத்தலாம். இந்த சிக்கலை உணர்ந்ததால்தான் விஜய்காந்த், நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் குஷ்பு சார்பாக எடுக்க வேண்டிய நிலையை எடுக்காமல் நழுவிவிட்டார்.

இந்த சர்ச்சையில் இவருடைய மௌனம் ஒரு டிராஜெடி என்றால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைமையின் அறிக்கைதான் காமெடி. குஷ்பு ஒரு முஸ்லிம் பெண்ணானாலும் அவரை நாங்கள் முஸ்லிமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். உலகளாவிய பார்வை இஸ்லாத்துக்கு உண்டு என்று சொல்லுகிறவர்களுக்கு குஷ்பு வட இந்தியப் பெண்ணாகத் தெரிகிறார். அவர் தமிழ் முஸ்லிம் பெண்ணாக இருந்தால் தமுமுக என்ன செய்யும்? அப்போதும் அவரை முஸ்லிமாக கருதவில்லை என்று சொல்லுமா? பாலியல் பிரச்னைகளில் குஷ்புவுக்கு நிகராக கருத்து தெரிவிக்கும் படைப்புகளை எழுதும் தமிழ் நாட்டு சல்மாவை தமுமுக ஏன் இன்னும் முஸ்லிம் அல்ல என்று அறிவிக்கவில்லை? யார் முஸ்லிம் என்ற நிர்ணயத்தை இவர்கள் எப்படி செய்கிறார்கள்? சோ "எங்கே பிராமணன்?'' என்று நிர்ணயித்த மாதிரியா?

திருமாவளனைப் பொறுத்தமட்டில் அரசியலில் எந்த அணியிலும் சேர்க்கப்படாமல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் அவருக்கு இப்போதைக்கு தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பதாகையின் கீழ் நின்றால் தான் பாமக ஆதரவு என்ற நிலையாவது மிஞ்சும். எனவே தமிழ்ப்பெண்களின் கற்பைக் கொச்சைப்படுத்திய வட இந்திய நடிகை குஷ்புவை எதிர்த்து தன் தமிழ்த் தன்மையை காட்டிக் கொள்ள அவர் முயற்சிக்கிறார். ஜக்கி வாசுதேவின் சீடர்களில் குஷ்புவும் உண்டு என்ற தெரிய நேர்ந்தால் என்ன செய்வார் என்ற தெரியவில்லை.

திருமாவளவனின் ஓட்டையான இந்த அரசியல் நிலைப்பாட்டுக்கு இதே பிரச்னையில் இன்னொருவரைப் பற்றிய அவரது மௌனமே நிரூபணம். குஷ்புவின் பேட்டி வெளியான அதே இந்தியா டுடே இதழில் அதே சர்வே தொடர்பான இன்னொரு கட்டுரையை எழுதியிருப்பவர் தலித் கவிஞரான சுகிர்தராணி. உண்மையில் குஷ்புவின் கருத்தை விடப் புரட்சிகரமான கருத்துகளைச் சொல்லியிருப்பவர் சுகிர்தராணி. கற்பு என்பதை பெண்ணுக்கு மட்டும் சொல்லி ஆணை அந்த வட்டத்துக்குள் வைக்காத இந்த சமூகத்தை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார்.

"கற்பு என்னும் சொல்லாக்கத்தை ஆண் பெண் இருபாலுக்கும் பொதுத் தன்மை உடையதாக இச்சமூகம் மாற்றட்டும். இல்லையேல் அச்சொல்லையே அழித்தொழிக்கட்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கற்பு, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை பெண்களிடம் மட்டுமே எதிர்பார்ப்பது எந்த சமூகத்திற்கும் அழகல்ல. அவசியமும் அல்ல' என்று அழுத்தந்திருத்தமாக சுகிர்தராணி சொல்லியிருப்பதைப் பற்றி திருமா வாயையே திறக்காதது ஏன்? குஷ்புவைப் பற்றி மட்டும் குமுறுவது ஏன்? ஏன் துடைப்ப ஊர்வலம் சுகிர்தராணி வீடு நோக்கிச் செல்லவில்லை? ஆளுக்கொரு நீதியா?

குஷ்புவை விமர்சித்தவர்கள் எல்லாருக்கும் அடிப்படைப் பிரச்னையே இவர்கள் தங்களை மனிதர்களாகக் கருதாமல், ஆண்களாகவே கருதி வருவதுதான்.

"அழகி', "தென்றல்', "சொல்ல மறந்த கதை' போன்ற "புரட்சிகரமான' தமிழ்ப் படங்களை உருவாக்கிய தங்கர்பச்சான் அளித்த பேட்டி இந்த அடிப்படை உண்மையை வெளிப்படுத்திவிடுகிறது.

"குமுதம் ரிப்போர்ட்டரி'ல் அவர் சொல்லியிருக்கிறார். "ஒரு ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும். ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை என் திரைப்படங்கள் மூலம் பதிவு செய்து காட்டியிருக்கிறேன். குறிப்பாக எனது "தென்றல்' படத்தில் தாலி இல்லாமல் கூட, இந்த சமூகம் புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும் தன் மனதைப் பறிகொடுத்தவன் நினைவிலேயே வாழ்ந்த பெண்ணை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்போது வெளியாகியிருக்கும் "சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' படத்தின் ஹீரோயின் கூட பல சூழல்களிலும் தடம் புரளாமல் கற்பு நெறியோடு வாழ்வதைத்தான் எடுத்துக் காட்டுகிறேன். நம் தமிழர்களின் கலாச்சாரத்தை, தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மட்டுமே நான் பதிவு செய்து வந்திருக்கிறேன். அப்பேர்ப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் நேர்ந்துவிட்டது' என்கிறார்.

இவருக்கு என்ன அவமானம் நேர்ந்தது? நடிகைகள் காசுக்காக வேலை செய்வதும் விபசாரம் தான் என்ற அரிய பொன்மொழியை உதிர்த்து அதற்காக மன்னிப்பு கேட்க நேர்ந்தது அவமானம் என்று, படம் ரிலீசாவதற்கு முன்பு மன்னிப்பு கேட்டவர் ரிலீசுக்குப் பின் சொல்வது ஏன்?

பாலியல் சுதந்திரம், பாலியல் உரிமை என்பது ஆணுக்கு மட்டுமே உரியது. பெண்ணுக்கு இல்லை என்றே இவர்கள் சொல்ல வருகிறார்கள். இதைத் தன்னை ஆணுக்கு சமமான மனிதப்பிறவியாக கருதும் எந்தப் பெண்ணும் ஏற்கமாட்டாள்.

இதுதான் தமிழ்ப் பண்பாடு என்கிறார்கள். இதை வரலாறு ஏற்காது. திருமணம் என்ற சடங்கை, தாலி கட்டுதல் என்ற சாங்கியத்தை உருவாக்கும் முன்னால், தமிழ்ச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவில்லையா? சேர்ந்து வாழாமலா தமிழரும் தமிழும் இத்தனை காலம் தழைத்தார்கள்?

இலக்கியம் சொல்லும் "களவு' என்பது என்ன? பெற்றோரும் உற்றாரும் ஊராரும் நடத்தாத திருமணம், இருவர் தமக்குள் தாமே நடத்திக் கொண்ட "திருமணம்' என்பது என்ன? அது premarital sex ஆகாதா? அகநானூறும் குறுந்தொகையும் பேசுவது எல்லாம் திருமணத்துக்குப் பின் செக்ஸா? தங்கர் பச்சானுக்கு சொந்த அப்பா போல விளங்குகிற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்துத் தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து விளைந்தவை?

இந்தியா டுடே வெளியிட்டது நகரப் பெண்களின் பார்வை பற்றிய கருத்துத் தொகுப்புதான். ஆனால் தமிழகத்தில் கிராமங்களில் பணியாற்றும் சமூக சேவை அமைப்புகள் பலரும் தெரிவிக்கும் உண்மை என்ன? வளர் இளம் பருவம் எனப்படும் adoloscent பருவத்தில் பாதுகாப்பான உடலுறவு (safe sex) பற்றி தெரியாமல் நிறைய பெண்கள் கருவுற்று கருச்சிதைவுக்கு வரும் சிக்கல் தமிழ் கிராமங்களில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆண் பெண் உறவை, கற்பின் பெயரால், கண்ணகியின் பெயரால் சிக்கலாக்கி வைத்திருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்புதான்.

அதிலிருந்து பெண்ணை விடுவிக்கும் குரல் முதலில் நகரங்களிலிருந்துதான் கல்வியின் விளைவால் எழும். அந்தக் குரலை நசுக்க ஆணாதிக்கவாதிகள் கிராமப் பெண்களையும், கல்வி பெறாத பெண்களையும் ஆணுக்கு சேவை செய்வதே தன் பிறவிப்பயன் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட அடிமைப் பெண்களையும் கேடயமாகப் பயன்படுத்துவார்கள்.

குஷ்பு சர்ச்சையில் குஷ்புவை எதிர்க்கும் விமர்சிக்கும் எல்லாரும் நமக்கு உணர்த்துவது என்ன? ""தமிழ் பண்பாடு என்பது தமிழ்ப் பெண்களின் கற்பில்தான் இருக்கிறது. தமிழ் ஆணுக்கு கற்பு கிடையாது. தேவையில்லை.''

கற்பு என்பது என்ன? பெண்ணின் கன்னித்தன்மையா? அவள் உடலிலா கற்பு இருக்கிறது.
இல்லை. கற்பு என்பது ஒழுக்கம், நேர்மை, அது மனமும் அறிவும் உணர்ச்சியும் சார்ந்தது. செக்ஸ் மட்டுமல்ல, மனித செயல்பாடு எல்லாவற்றுக்கும் இந்தக் கற்பு.

அது சுகிர்தராணி சரியாகவே சொன்னதுபோல, ஆண், பெண் இருவருக்கும் தேவையானது, பொதுவானது. ஆனால் கற்பு பெண்ணுக்குத் தான் ஆணுக்கு அல்ல என்று சொல்லும் இவர்கள் இப்போது அதையே நிரூபித்திருக்கிறார்கள். தாங்கள் நேர்மையற்றவர்கள் என்பதை.

தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பைக் கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால், கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

"தமிழ் நாட்டை விட்டு ஓடு''.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, October 02, 2005

அவனில்லாமல் கன்னிமை குலையுமா?

அண்மைக்காலங்களில் திரைத்துறையில், திரைக்குப் பின் நடிகையர், துணை நடிகர் மற்றும் துறை சார்ந்த ஆண்களிடையே தோன்றிய உரசல்கள், சூடு பிடித்து, குமுறல்கள் சுட்டெரிக்கும் துளைகளாக, வெளியே சில உண்மைகளைக் கொண்டு வந்திருக்கின்றன. கண்ணகி கற்பா, மாதவி கற்பா, சீதை கற்பா, திரௌபதை கற்பா என்று புராண காப்பிய நாயகிகளின் கற்பு புனைவுகளிலேயே மிதந்து "தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றில் பெருமிதம் கொண்டிருந்த "தமிழ்ப் பண்பாளர்' உலகம் இந்த உண்மைகளைத் தாங்க முடியாமல் கொதித்து எழுந்திருக்கிறது.

காப்பிய, புராண, இதிகாசங்கள் மெய்யோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் திரைத்துறை என்பது பொய்களை மெய்போல் சித்தரித்து, மக்களிடம் வாணிபம் செய்யும் ஒரு துறை. இதுவும் பத்திரிகை, வானொலி போல் மக்கள் தொடர்பு சாதனம்தான். ஆனால், சினிமா, தொலைக்காட்சி இரண்டும் காட்சி ஊடகங்கள். இந்த ஊடகங்களில் தோன்றுபவர்கள் நேரடியாக மக்களின் வாழ்வில் பங்குகொள்ளும் அளவுக்குச் செல்வாக்குப் பெறுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் இந்தச் செல்வாக்கே - (நடிப்பு)ப் பொய்மையே- ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்கள் சமுதாயத்தில் வேரூன்றிப் போயிருக்கிறது.

தமிழ்ச் சமுதாயத்தில் நடிக நடிகையர் மற்றும் இயக்குநர்கள் மட்டுமே கவனிப்புக்குரிய ஆற்றலுள்ளவர்களாக மதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தத் துறையில் ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால் மிகையில்லை. எல்லாத் துறைகளிலும் பொதுவான அதே ஆதிக்கம் நிலவினாலும், இந்த ஊடகத்துறை வாணிபத்துக்கு இன்றியமையாதவள் பெண்.

பழைய காலத்தில், ஆணும் பெண்ணும் தனித்திருந்தாலே பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டது. யார் பஞ்சு, யார் நெருப்பு என்பதற்குத் தெளிவான புலப்படுதல் இல்லை. பெண்ணைக் காக்கும் பெற்றோர், அவளைப் பஞ்சாகக் கருதுவர். ஆண் "தாலி' என்ற உரிமைக்கயிறு இல்லாமல் தொட்டுவிட்டால், அவள் கருகிப்போன மாதிரிதான். ஆனால் அவள் கழுத்தில் அந்தக் கயிற்றை ஒருவர் கட்டி உரிமையாக்கிக் கொண்ட பின் வேறொருவன் நெருங்கினால், அவள் நெருப்பாக மாற வேண்டும். இது கோட்பாடு. இல்லையேல் அவள்தான் கருக வேண்டும். அவனுக்கு ஒன்றுமில்லை.

ஆனால் இத்தகைய கோட்பாடுகளை வைத்துப் பொய்யாகப் புனையப்பட்ட க(கொ)லைப் படைப்புகளில், இடம் பெற்று, ஆடவும், அழவும் கொஞ்சிப் பேசி நெருக்கமாக இழைந்து ஒரே கட்டிலில் (சிரிப்பதாக) நடித்து, பிள்ளைகள் பெற்று, துவண்டு விழுந்து விக்கிவிக்கி அழுது, பெரிய குங்குமத்துடன் பாடையில் கிடந்து... எழுந்து, பிழைக்கும் பிழைப்பு. மந்திரங்கள் மாலை மாற்றல், தாலி கட்டல், பாலியல் வன்முறை என்ற எல்லா நடிப்புகளுக்கும் இவள் உட்படுகிறாள். இப்போதெல்லாம் எது பொய், எது மெய் என்ற தெரியாத அளவில் காட்சிகள் வருகின்றன. இவர்கள் இந்த ஊடகங்கள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிக்கும் பெண்மை வடிவங்கள் தாலி மெட்டி பொட்டு, பூ, கற்பு, கணவன் என்ற அலங்காரங்களையே குறிப்பாக்குகின்றன. கணவன் குடிகாரனாக - வேறு பெண்களைக் கவர்ந்த மோசடி ஆளாக இருக்கலாம். ஆனால், இவள் அப்படி இருக்கலாகாது. காதல் செய்ய வேண்டும். ஆனால் அது உண்மையல்ல.

பிள்ளையாரே வெல்லத்தால் ஆனவர். அதைக் கிள்ளி அவருக்குப் படைப்பதுதான் உண்மை. இதில் என்ன தவறு?

"கன்னிமை' அன்றாட நடிப்புத் தொழிலில் கறைபட்டுப்போவதை இல்லை என்று மறைப்பதைவிட, அந்தக்கறைகளை நீக்கிக் கொள்ள முற்படுவது என்ன தவறு? மண்ணும் பெண்ணும் ஆணின் உரிமை என்பதுதான் இங்கே கலாசாரமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுடன் இயல்பாக வாழ்ந்து தாயாவதைத்தான் விரும்புகிறாள். இது மனித இயற்கை. ஆனால், இந்த இயல்பில், பெண்ணுடலை மட்டும், அவளிலிருந்து வேறுபடுத்தும் நடப்பியல் ஆண் அவள் மீது செலுத்தும் ஆதிக்கக் கொடுமை என்றே கூற வேண்டும்.

அன்றைய தேவதாசிகளுக்கிருந்த உரிமைகள் கூட இன்றைய திரை ஊடகப் பெண்களுக்கு இல்லை எனலாம். பணம் கொடுக்காத ஆணையும் வரவேற்று அன்பு செலுத்தும் உரிமை அவளுக்கு இருந்தது. ஆனால், இங்கோ, அழகழகான சிவந்த தோலுடைய, ஒடிந்து விழும் இடுப்புடன், இழுத்த இழுப்புக்கெல்லாம் உட்படும் பெண்களைத் தேடிப்பிடித்து வாணிபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். பதினெட்டு வயதாகாத பெண்கள் இத்துறைக்குக் கொண்டுவரப் படுவதற்கு அவளே காரணமல்ல. பெற்றோர், காப்பாளர் மட்டுமே பொறுப்பேற்றிருப்பர். இவளைக் காட்சிப் பொருளாக்கப் பிள்ளையார் சுழி போடும் படம் எடுப்பவர், தரகர், அவர் இவர் என்று எத்தனையோ படி கடந்து, சூடுபட்டு, படம் வெளியாகி வெற்றிப் பூவைப் பெறுவது ஆணைவிடப் பெண்ணுக்கே செத்துப் பிழைக்கும் அனுபவங்கள். இவள் உணர்வுகள் ஒருவகையில் கெட்டிப்பட்டு, திடம் பெற்றிருப்பாள். இல்லையேல், காணாமல் போயிருப்பாள்.

ஒரு பெண், குடும்பப் பெண், நான்குபேர் பார்க்க இசைக்கச்சேரி மேடை ஏறுவதையே ஒத்துக்கொள்ளாத கணவன்மார்கள் இருந்தார்கள். வானொலி வந்த பின்னரே, குடும்பப் பெண்கள் தங்கள் திறமைகளை வெளியிடுவதில் தவறில்லை என்ற மாற்றம் வந்தது. அதிலும் பணிபுரியும் பெண்களைச் சார்ந்த அவதூறுகள் எழுந்ததுண்டு. வெளிக்குத் தெரியாதது வானொலி. ஆனால் இந்நாட்களில், "பணம்' ஒன்றே குறி என்று எல்லாம் வாணிபமான நிலையில் திரைத்துறையில், ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு வாழ, திரைத்துறை சார்ந்த ஒருவரே இசைய வேண்டும். அவ்வாறு மக்களைப் பெற்ற தாயாக, ஆற்றலுடன் திகழும் ஒரு பெண்மணி, திரைத்துறையில் வெற்றி பெற்றவர் ஆனாலும் கூட சோதனைகள் துரத்தும்.

ஆனால் திரைத்துறை ஆண்களுக்கு இத்தனை சோதனகள் இல்லை. அவர்களின் குடும்ப வாழ்வு, சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. அப்படி உட்படுத்தப்பட்டாலும், தொடர்புபடுத்தப்பட்ட அந்தப் பெண்தான் கருகவேண்டும்.

ஒரு பெண்ணின் வெற்றிக்கு ஆணே பின்னால், அல்லது முன்னால், அல்லது பக்கத்தில் இருப்பதாகப் பெருமையடித்துக்கொள்ளும் ஆண் வர்க்கம், ஒரு பெண் இத்துணை முட்டல் மோதல்களையும் எதிர்கொண்டு குடும்ப வாழ்வில் வெற்றி காண்கிறாள் என்று ஒப்புவதில்லை.

ஒரு பெண்ணின் கன்னிமை குலைவதற்கு யார் காரணம்? மேலும் "கன்னிமை' என்பது முறைசாராமல், மோசடி வலைக்குள் வீழ்த்தப்பட்டு அழிக்கப் பெறும்போது, அவள் கொலை செய்யப்படும் கொடுமைக்கும் உள்ளாகிறாள்.

ஏதோ பண்பாடு என்பது, திரைத்துறைப் பெண்களுக்கே உரியதாகவும், அதுவும் "தமிழ்' நாடே அந்தப் பண்பாட்டை மொத்த குத்தகை எடுத்திருப்பதுபோலவும் கூக்குரல் எழுப்புவது, முழுப்பூசணியைச் சேற்றில் மறைப்பதுபோல் வெட்கக்கேடானதொன்று.

மிகப்பெரிய காட்சி ஊடக நிறுவனங்கள் பல்வேறு ஒளித்தடங்களில், தங்கள் அபத்த மெகா தொடர்களில் பெண்களின் உடலை, மன உணர்வுகளை, வாணிபம் செய்வதுடன், ஏறக்குறைய ஒரு நாளின் பதினெட்டு மணிநேரத்தையும் கொள்ளையடிக்கின்றன. போதை நேரமாக புத்தியை மழுங்கடிக்கிறது. ஒரு நாயகனைச் சுற்றி மூன்று, நான்கு என்று பெண்கள், அடிதடி, குழந்தை, சொத்து என்று பெண்மையை எவ்வளவு ஈனமாக இதைப் பார்ப்பவர் மனங்களில் பதிய வைக்கிறார்கள்? தாலி என்ற ஒன்றுக்கு புனிதமோ, பொருளோ இருக்கிறதா? வக்கிர உணர்வுகளைத் தூண்டும்படி, பாடல்களும், ஆடல்களும் பெண்கள் விரும்பியதாலா ஒளிபரப்பப்படுகின்றன? அவன் முழு உடை அணிவான். அவளுக்குப் பெயருக்கே உடை. இதெல்லாம் கற்பைப் பேணும் பண்பாடா? அதை எதிர்த்துக் கூச்சல் போடுங்கள், பண்பாட்டுக் காவலர்களே!

தீவிரவாதிகளின் இயக்கத்தில் ஈடுபட்ட பெண்ணொருத்தியை, காவல்துறை கண்காணித்துப் பிடித்து சின்னபின்னாமாக்கிக் கம்பிக்குள் அடைக்கிறது. இவள் சாகசங்கள் அறிந்திருந்த பெரிய அதிகாரி ஆத்திரத்துடன் வருகிறார். கதவைத் திறந்ததும் அவள் பெயருக்கு ஒட்டியிருந்த உடையைத் தள்ளிவிட்டு, குத்துப்பட்டும், அடிபட்டும், குலைக்கப்பட்டும் குதறப்பட்ட மேனியைக்காட்டி, ""இந்தாடா? இதுதானே?'' என்ற கூவியபோது, அந்த அதிகாரி உறைந்துபோகிறான்.

இது மகா சுவேதா தேவியின் பிரசித்தமான கதை.

உண்மைதான் கொதித்துச் சிதறுகிறது. கற்பும் தூய்மையும் அவனுக்கு விதிவிலக்கா? அவனில்லாமல் கன்னிமை குலையுமா?

எழுதியவர்: எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

நன்றி: தினமலர் செய்திமலர்

02.10.05 தேதியிட்ட தினமலருடன் நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் மட்டும் இலவச இணைப்பு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பாதை மாறியது ஏனோ?

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முதலில் இந்தியாவில் பிரிட்டனின் காலனி ஆதிக்கக் காலத்தைப் போற்றிப் பேசியது. அடுத்ததாக இந்திய அணு உலைகளுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு ஒப்புதல் தெரிவித்தும் உலைகளை சர்வதேச அணுசக்திக் கழகம் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்தும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டது. இப்போது சர்வதேச அணுசக்திக் கழகத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறது. இது ஒன்றும் எதிர்பாராத செயல் அல்ல.

ஆனால், இதன் மூலம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு கட்டி எழுப்பப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளில் மேலும் ஒன்றில் இருந்து மத்திய அரசு விலகி இருக்கிறது. அதாவது இதுவரை இந்தியா தனது கொள்கையாகக் கொண்டவற்றில் இருந்து மேலும் ஒரு கொள்கையை மன்மோகன் சிங் அரசு கைவிட்டுள்ளது.

அணிசேராக் கொள்கைகளில் இருந்து மத்திய அரசு விலகிச் செல்வதை ஏதோ தனிப்பட்ட நிகழ்வாக நாம் கருத முடியாது. மாறாக ராஜீவ்காந்தி காலத்தில் இருந்து அரசியலிலும் நரசிம்மராவ் காலத்தில் இருந்து பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க முடிகிறது.

ஆனால், அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பணியாமல் 1998 மே மாதம் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பொக்ரானில் அணு சோதனை செய்தது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால் அப்போதே கூடிய விரைவில் அணிசேராக் கொள்கையை இந்தியா கைவிட்டு அமெரிக்க அணியை நோக்கி நகர்வதற்கு இந்த அணு சோதனை இட்டுச் செல்லும் என்று கருத்துக் கூறியவர்களும் உண்டு. இவர்கள் தெரிவித்த அச்சத்தை உறுதி செய்யும் விதமாகவே இப்போது ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்திக் கழகத்தின் உறுப்பினர் கூட்டத்தில் இந்தியா வாக்களித்த செயல் இருக்கிறது.

இந்தச் செயலின் காரணமாக நாம் ஆசைப்பட்ட அல்லது பேராசைப்பட்ட ஈரானில் இருந்து இந்தியா வரையிலான பெட்ரோல் குழாய் இணைப்புத் திட்டம் பாதிப்படையும். பேராசை என்று சொல்வதற்குக் காரணம், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே பதற்ற நிலை இல்லாத அமைதிச் சூழல் உருவாகும். தொடர்ச்சியாக இந்தக் குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வருவதாக இருந்தால், எரிவாயுவையும் நிலக்கரியையும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும். இதன்மூலம் மின் தடைகளையும் மின்சக்தி பற்றாக் குறையையும் சமாளிக்க இயலும்.

இருந்தபோதிலும், இத்திட்டம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது. இத்திட்டத்தை அமெரிக்க அரசு விரும்பவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி இன்றி பதற்றமான சூழலிலேயே தொடர்ந்து இருப்பதை அமெரிக்கா விரும்புகிறது. இந்தப் போர்ச்சூழலே அமெரிக்க ஆயுத வியாபாரிகளுக்கு பெரிய சந்தையைப் பெற்றுத் தரும். இதுபோக இந்தியாவை மேலும் மேலும் அணுமின் உலைகளை நிறுவச் செய்தால், அவற்றிற்கு எரிபொருளை அமெரிக்கா விற்க முடியும். மின் உற்பத்திக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவதை ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக கைவிட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நமக்கு அமெரிக்கா இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது!

அணுமின் உலைகளுக்கான செலவும் இந்தியாவுக்குத் தாங்காது. அவற்றில் ஏதேனும் விபத்து நடந்தால் ஏற்படும் சேதமும் நம்மால் தாங்க இயலாது. சுற்றுச் சூழலுக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் இந்த உலைகள் ஏற்படுத்த இருக்கும் ஆபத்தை மன்மோகன் சிங் அரசு புறந்தள்ளியுள்ளது.

இதில் பெரிய சோகம் என்னவென்றால், அரசியல் தளத்தில் உள்ள இடதுசாரிகளும், வலதுசாரிகளும் அணு ஆற்றலைக் கொண்டாடுகின்றன என்பதுதான். அணுமின் உலைக்காகும் செலவை நாம் ஏற்றுக் கொள்ள இயலும் என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். ஆனால் இந்தக் கூற்றை அவரால் ஆதாரபூர்வமாக விளக்கிச் சொல்லி நிரூபிக்க முடியாது.

அணு உலைகளைச் சுற்றி இருக்கும் ரகசியம் காரணமாக அவற்றிற்கு ஆகும் செலவை நாம் கணக்கிட முடியாது. ஆனால் இந்திய அணுசக்தித் துறை செலவளிக்கும் நிதியையும், உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் அளவையும் பார்க்கும்போது, அணுமின் உற்பத்திக்கான செலவு மிகவும் அதிகம் என்ற முடிவுக்கு நாம் வரலாம். அணுக் கழிவுகளை வெளியேற்ற இன்னமும் பாதிப்பில்லாத ஒரு முறையை நாம் கண்டுபிடிக்காத காரணத்தால், இந்த அணுமின் உற்பத்தி முறையே சுத்தமானது இல்லை என்று கருத இடமுண்டு.

வாஜ்பாய் அரசைப் போலவே மன்மோகன்சிங் அரசும் இந்தியாவை அமெரிக்காவின் மடியில் தவழும் குழந்தையாக மாற்றுகிறது. இந்தப் போக்கு இந்தியப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாகவும், நிதி அமைப்புகளில் கூட அந்நிய நேரடி முதலீட்டைப் அனுமதிக்கும் விதத்திலும் போகும் போதே தொடங்கிவிட்டது.

இதன் விளைவாக சந்தைப் பொருளாதாரத்தையும் சூப்பர் மார்க்கெட்களையும் ஆதரிக்கும் சக்தி மிக்க ஒரு சமூகப்பிரிவு தோன்றியது. இந்தப் பிரிவினர் இந்திய அணிசேராக் கொள்கையை இந்தியா கைவிடுவதையும் அமெரிக்காவுக்கு அடிபணிந்து இந்தியா செல்வதையும் ஆதரிக்கிறார்கள். பாண்டுங் மாநாட்டின் உணர்வைக் கைவிடுவது குறித்து இவர்களுக்கு ஒரு கவலையும் கிடையாது.

இந்தத் தாக்குதலில் சிறு தொழில்களும் சிறு வியாபாரிகளும் நசிந்து போனார்கள். நமது சோடா, சர்பத் கம்பெனிகள் அழிந்து எங்கெங்கு காணினும் பெப்சியும், கோக்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. உள்ளூர் உருளைக் கிழங்கு வறுவல்கள் மறைந்து பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்த "சிப்ஸ் பாக்கெட்'கள்தான் கடைகளில் கிடைக்கின்றன.

இந்தக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு நமது மருத்துவ நிபுணர்கள் சுத்தம், சுகாதாரம் குறித்து புதிய விளக்கங்கள் தருகிறார்கள்.வேப்பங்குச்சிக்குப் பதில் பற்பசை, தரை மெழுக புதிய திரவங்கள் அறிமுகமாகியுள்ளன. ஐஸ்வர்யா ராய்களும், சுஷ்மிதா சென்களும் குளியல் சோப்புகளும், ஷாம்புக்களும்தான் மேனி எழிலுக்குக் காரணம் என்கிறார்கள். சீயக்காயும் மூலிகைப் பொருட்களும் மூலைக்கு போயின. நமது காய்கறியில் இருந்து கிடைக்கும் எண்ணெயைவிட இறக்குமதி எண்ணெய் சிறந்தது என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். நமது விவசாயமும் வீரிய விதைகளும் புதிய உரங்களுமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ், அரசுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என்று பல தரப்பினரும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கலாச்சாரத்திற்குள் உறிஞ்சப்பட்டு வருகிறார்கள். இப்போது அமெரிக்க நலன்களுக்கு இணக்கமாக இந்தியா செல்வதை ஆதரிப்பதில்தான் இவர்கள் நிற்பார்கள்.

பாதுகாப்பு விமர்சகரும், பிரபல பத்திரிகையாளரும் இந்தப் பிரிவினரின் பிரதிநிதியுமான சி.ராஜமோகன், இந்தியா தனது பழைய கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்காவுக்கு இணங்கிப் போவதில் தவறில்லை என்று வாதிடுகிறார். சர்வதேச அணுசக்திக் கழகக் கூட்டத்தில் ரஷ்யா சீனாவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று எழுதுகிறார். இது ஒரு செயல் தந்திரமாக இருக்கக்கூடும். ஆனால் இதுவும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே வகுக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கொள்கை இன்றைய அமெரிக்க அரசின் அராஜகங்களை ஆதரிக்கிறது. ஜனநாயக நடைமுறைக்கும் தத்துவத்திற்கும் விரோதமானது.

ஆங்கில மூலம்: பத்திரிகையாளர் கிருஷ்ணா ஆனந்த்
நன்றி: தினமலர் செய்திமலர்
02.10.05 தேதியிட்ட தினமலருடன் நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் மட்டும் இலவச இணைப்பு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.