Thursday, July 28, 2005

எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும் |

நடுத்தரக் குடும்பங்களில் தங்கள் வீட்டு வேலைக்கு உதவுவதற்கு பெண்கள் நியமிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அவர்களை நடத்தும் விதம் குறித்து பத்மா அரவிந்த் தனது பதிவில் எழுதப்போக, அதை சாதிரீதியாக சில நண்பர்கள் எடுத்துக்கொண்டார்கள் . அது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம்.

ஆனால் அதையெல்லாம் படித்தபோது எனக்குள் எழுந்த கேள்விகளை இங்கு முன் வைக்கிறேன் . அவர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படுகிறதா?

பொதுவாகக் கூலியை நியாயமான கூலி, குறைந்தபட்ச கூலி என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது வீட்டைத் துடைத்து சுத்தம் செய்யும் ஒரு பெண்ணுக்கு வேலை நேரம் 1 மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே ஒரு மணி நேரம் செலவழித்து நமது அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பெண்ணுக்கு நமது நிறுவனங்கள் வழங்கும் கூலியை நாம் நமது வீடுகளில் உதவுபவர்களுக்குக் கொடுக்க முன்வருகிறோமா? அப்படி முன்வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் "ஏன் நீங்கள் இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள்? உங்களால் எங்கள் வீடுகளில் பிரச்சனை எழுகிறது. நாங்களும் உயர்த்திக் கொடுக்க வேண்டியதிருக்கிறது" என்று ஏன் சொல்கிறார்கள்?

அமைப்பாக்கப்படாத இந்த வீட்டு வேலையில் உதவும் பெண்களுக்கு எந்த அரசாங்கமும் குறைந்த பட்சக் கூலியை நிர்ணயம் செய்யாதது ஏன்? சந்தையே அதற்கான விலையை Demand and Supply Theory மூலம் தீர்மானித்துக் கொள்ளட்டுமே என்ற தாராளமயக் கொள்கைதான் காலங்காலமாக நடைமுறையில் இருக்கிறதா?

சங்ககாலத்தில் இருந்து தொழிற்சங்க காலம் கடந்து ஸ்வயம் சேவக் சங்க பரிவார் காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலுக்கு எதிராக ஏதேனும் இயக்கங்கள் நடந்திருக்கிறதா ?

இந்தியா தவிர மற்ற நாடுகளில் அவர்களது ஊதியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? உங்கள் அனைவரிடம் இருந்தும் அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே கேள்விகளாக எழுப்பியுள்ளேன்.

அப்பாடா இதற்குச் சாதி மூலாம் பூசமுடியாதென்று நிம்மதி. ( சாதியம் வேரோடி இருக்கும் ஒரு சமூகத்தில் அதைப் புறந்தள்ளித் தப்பி ஓடுவது ஆதிக்க சாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் வேலைதான் என்று உள்ளிருந்து ஓர் அந்நியன் குரல் கொடுக்கிறான். இருந்தும் வலைப்பதிவுகளில் நாகரீகம் கருதி சமரசம் செய்து கொள்ள வேண்டியது தான் என்று அவனை அடக்குகிறேன்).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 22, 2005

வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்

வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்,அங்கே ஈகோ தான் ஆட்சி செலுத்துகிறது என்கிறார் இண்டெர்நெட் பற்றி புத்தகம் எழுதிய விஞ்ஞான எழுத்தாளர். அவர் யார் என்று சொல்லாமலேயே தரம் எளிதில் விளங்கும். தமிழில் எழுதுபவர்களுக்கு ஈகோ இருக்கலாமோ? இருந்தால் கமலுடனும் ஷங்கருடனும் “குப்பை” கொட்ட முடியுமோ?
(கேள்வியில் ஓகார இறுதி ஈழத் தமிழுக்கு உரியது என்று ஒரு பதிவில் படித்தேன். Break the rules!)

வலைப்பதிவுகளில் நேரம் செலவழிப்பது வீண்தானோ? சில விவகாரமான பின்னூட்டங்கள் வந்த காலத்தில்(அது இறந்த காலம் தானே?) சில நண்பர்கள் “இதற்குத்தானா ஆசைப்பட்டாய்” என்று வெறுத்தும், படிப்பதற்கு நேரம் செலவழிக்கிறேன் என்றும் தங்கள் பதிவுகளுக்குத் தற்காலிக விடுமுறை அளித்தனர்.
படிக்கும்போது பரீட்சை வந்துவிட்டால் வழக்கமாக நண்பர்கள் கூடிப் பேசும் ஸ்டேஷன் பெஞ்ச், மணிக்கூண்டு, மரத்தடி, திண்ணை, தேரடி, குட்டிச்சுவர், வாகையடி முக்கு (ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு இடம்) ஆகிய இடங்களுக்குப் போய் படிக்கிற நேரத்தை வீணாக்காதே என்று அம்மா சொல்வது மாதிரி இவர்களும் வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்க்காதீர்கள் என்று சொல்கிறார்களோ?
சரி..வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்க வேண்டாம். வேறென்ன செய்வது? உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டாமோ?
கணேஷ், வசந்த் அரட்டையில் வல்கர் ஜோக்ஸ் படிக்கலாம்; உலக மகா இலக்கியம் சலவைக் குறிப்பு பார்க்கலாம்; சென்னை நகர வீதிகளில் ‘பையன்கள்’ (வலையில் உள்ள பொடியன்கள் இல்லை) அடிக்கும் லூட்டியை ரசிக்கலாம்; ஜவுளிக்கடைகளில் அம்மாவைப் போன்ற பெண்களின் பின்புறம் இடிக்கும் பையன்களின் ‘குறும்பை’ப் பார்த்து மகிழலாம்; வாழ வழியின்றிப் பாலியல் தொழில் செய்யும் பெண்ணைப் பள்ளி மாணவர்கள் பக்கத்து வீட்டுப் ‘பள்ளி’க்கு அழைத்து வருவதை ஓரக்கண்ணால் பார்த்து ‘மலரும் நினைவுகளில்’ மூழ்கித் திளைக்கலாம்.
“ச்சீ” என்று இதையெல்லாம் ஒதுக்கி எறிந்து வீதிக்கு வந்தால், காலில் மிதிபட்ட எறும்பை மிருக மருத்துவமனைக்கு அழைத்துப் போ என்று யாரேனும் அம்பி உங்களிடம் கெஞ்சிக் கூத்தாடலாம். இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் உதாசீனப்படுத்தினால் தலையை விரித்துப் போட்ட அந்நியன் உங்களைத் தாக்கக் கூடும். (தாக்குதலில் நீங்கள் உயிர் பிழைப்பதும் பிழைக்காததும் உங்கள் பிறப்பைப் பொறுத்தது என்பார் உண்மை விளம்பும் காஞ்சி பிலிம்சார்)
லாஸ் ஏஞ்சல் ராம்/மயிலாடுதுறை சிவா கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைக் காம்பு கிள்ளிக் கீழே போட முடியாது. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மிஞ்சுவதைக் கடையைத் தாங்கும் கம்பில் தடவ முடியாது. இவற்றிற்கெல்லாம் தண்டனைகளாகக் கருட புராணத்தில் தீர்ப்புகள் இருக்கலாம்.
ஆலோசனையை மீறி (அதுவும் கறுப்பி போன்ற அற்புதக் கலைஞர் விடைபெற்ற பின்) வலைப்பதிவுகளில் “வீணாக” நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு என்ன தண்டனை?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 12, 2005

பின்னூட்ட சுதந்திரம்

அருண் வைத்தியநாதனின் பதிவு இது. பிரச்னை எதுவும் இல்லாத பதிவு என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு எனது பின்னூட்டமே இந்தப் பதிவு. பார்ப்பவர்கள் மன்னித்தருள்க!
//காலையில் எழுந்து பல் தேய்த்தேன். அதற்கப்புறம் சூப்பர் காபி குடித்தேன். குடித்து முடித்ததும் கொஞ்ச நேரம் கணிப்பொறியில் செய்திகள்…ஒன்றும் சுவாரஸ்யமாயில்லை! ஜம்மென்று குளியல்…டவலால் துவட்டல். அவசர அவசரமாய் ஆபிசுக்கு…..அவ்ளோ தான்.//
அருண்,
"நான் பார்த்ததிலே இந்தப் பதிவினைத்தான் நல்ல பதிவு என்பேன் நல்ல பதிவு என்பேன்"

சமீபகாலமாக பல வலைப்பதிவுகளில் பின்னூட்டங்கள் குறித்து வேதனை வெளிப்பட்டு வருகிறது. ஒரு முன்னோடியாக ஒரு பதிவு எப்படி இருந்தால் பிரச்னை வராது என்று நினைத்து எழுதிக் காட்டியிருக்கிறீர்கள்.
சும்மா இருப்பதே சுகம் என்பதும் ஒரு தத்துவமே. அதை ஒட்டியும் வெட்டியும் பின்னூட்டங்கள் இட்டு விவாதம் தொடர்ந்தால்....?

பல் தேய்த்தது என்ன பற்பசையால்? சுதேசியா விதேசியா? அமெரிக்காவில் இருந்தால் என்ன? இங்கிருந்து கோபால் பல்பொடி கொண்டு போகக் கூடாதா என்ன?

செய்திகள் தமிழில் பார்த்தீர்களா ஆங்கிலத்தில் பார்த்தீர்களா? ஆங்கிலத்தில் பார்த்தீர்கள் என்றால் உங்கள் கணினித் திரை மீது ஏன் கரிமை (தார்?) பூசக் கூடாது?

குளியல் என்றால் தலைக்குத் தண்ணீர் விடுவீர்களா அல்லது உடலைக் கழுவுவதுடன் சரியா? வெந்நீரிலா பச்சைத் தண்ணீரிலா? ஏன் இவ்வளவு உண்மைகளை சக வலைஞர்களிடம் இருந்து மறைக்கிறீர்கள்? அவர்களை நீங்கள் ஏன் மதிக்கத் தயங்குகிறீர்கள்? அல்லது தவறுகிறீர்கள்? இதற்குக் காரணம் .........தானா?
(இந்தக் கோடிட்ட இடம் தானே அவதூறுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது?)

புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் வந்து விட்டேன் அருண்..எப்படிப் பார்த்தாலும் பின்னூட்டர்களின் சுதந்திரம் மகத்தானது. நீங்கள் ஓரெழுத்துப் பதிவு போட்டாலும் ஒரு பக்கப் பின்னூட்டம் இட விமர்சகர்கள் நிறைந்த இடம் தமிழ்மணம்.("படிச்ச படிப்பைக் கூட சொல்ல விட மாட்டேங்கறியே" கல்யாணப்பரிசு)
அது சரி அருண், உங்கள் பதிவைப் படிக்கும்போது தோன்றாத எண்ணமெல்லாம் பின்னூட்டத் தொடங்கியதும் வந்து விழுகிறதே.. "அப்படி என்ன பூகம்பத்தை வைத்திருக்கிறீர்கள் உங்கள் பதிவில்..பொல்லாத போக்கிரி சார் நீங்கள்" (நன்றி. நினைத்தாலே இனிக்கும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, July 02, 2005

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழா

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 150 ஆண்டு தமிழர்களின் கனவு நனவாகப் போகிறது. 2400 கோடி ரூபாயில் ஒரு கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற முயல்கிறது என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இன்றைய விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.(புறக்கணிப்பு?). வைகோவின் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. ஒருவித பதற்றத்துடன் இருந்தமாதிரி தெரிந்தது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் முகத்தில் மட்டுமே வெற்றிக் களிப்பு தெரிந்தது.

சோனியா காந்தி சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் நலன் பாதுகாக்கப்படும் என்றார். அந்நியச் செலாவணியும் வணிகமும் தமிழகத்தில் பெருகி ஓடும் என்பதே இன்று தலைவர்களின் பேச்சின் பிரதான அம்சம்.

ரொட்டி இல்லை என்றால் என்ன? எல்லோரும் கேக் சாப்பிடலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.