Monday, February 13, 2006

கூட்டணி ஆட்சிக்கான சூழல்

மத்திய அமைச்சர் இளங்கோவன் கூட்டணி ஆட்சி பற்றி பேசியதும், அதற்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதும் கடந்தகால வரலாறு. திமுக மட்டுமல்லாமல் மற்ற கூட்டணி கட்சிகளும் கூட அந்த சமயத்தில் இளங்கோவனின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கூறி இளங்கோவனை தனிமைப்படுத்தின.

ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்கள் கோருவதன் மூலம் மறைமுகமாக கூட்டணி ஆட்சியை திமுக மீது நிர்ப்பந்திப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் திமுகவும், அஇஅதிமுகவும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்பட்சத்தில் தனிக்கட்சி ஆட்சியையே அமைக்க விரும்புகின்றன. ஆனால் மேற்கு வங்கத்தில் 1977 முதல் இடது முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மார்க்சிஸ்டு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் அங்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் அரவணைத்து கூட்டணி ஆட்சியையே மார்க்சிஸ்டு கட்சி அமைத்து வருகிறது.

இந்த முன்மாதிரியை ஏன் தமிழகத்திலும் பின்பற்றக் கூடாது என்று சில ஜனநாயகக் குரல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால் மேற்கு வங்கத்தில் கூட்டணி ஆட்சி நடத்தும் கட்சிகளின் தமிழக கிளைகள் கூட கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை தமிழகத்தில் வலியுறுத்துவதில்லை.

1996 முதல் பத்தாண்டுகளாக தொடர்ந்து மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக அல்லது அஇஅதிமுக மற்றும் தமிழகத்திலுள்ள சில கட்சிகள் மத்திய ஆட்சியில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய ஆட்சியில் பிரதான இடம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியில் இடம் கிடைத்தால் நல்லது என்ற சிந்தனை அவ்வப்போது எழுகிறது

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக கூட்டணி ஆட்சி என்ற பதாகையின் கீழ் வந்துகொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் அவ்வப்போது உ.பி. என்று கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்படாது என்று சொல்வதற்கில்லை. ஏற்பட வேண்டும் என்பதே திமுக, அஇஅதிமுக தவிர்த்த பெரும்பாலான கட்சிகளின் எண்ணம்.


ஏனெனில், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அஇஅதிமுகவும் பிற கட்சிகளின் கூட்டணி உதவியின்றி தேர்தலை சந்தித்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தமிழக அரசியல் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் பல பகுதிகளில் வேரூன்றி வளர்ந்துள்ளன.

முன்புபோல் திமுக, அஇஅதிமுக என்ற இரு அணிகளில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிரெதிராக இடம்பெறும் சூழ்நிலை இப்போது இல்லை. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் அதிகரித்துள்ளன.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தத்தமது "கொள்கைகளை" நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவே விரும்பும். படிப்படியாக தங்களது எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஒரு கட்டத்தில் அமைச்சரவையில் பங்கேற்கவே விரும்பும்.

பிரதான அணிகளின் முதன்மையான கட்சிகள் பலவீனமான நிலையில் இருக்கும்போது சிறிய கட்சிகள் தங்கள் பங்கை வலியுறுத்துவது தவிர்க்க இயலாத ஓர் அரசியல் நடவடிக்கை. இப்போது தமிழகம் அந்த நிலையை வந்தடைந்துள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ், தமாகா, பாமக, இடதுசாரிகள் கூட்டணியுடன் 2001ல் அஇஅதிமுக போட்டியிடும்போதே அந்த கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியே வரும் என்று கருதியவர்கள் உண்டு. ஏனெனில், ஏறத்தாழ 140 இடங்களில் போட்டியிட்டு அதில் 118 இடங்களை அஇஅதிமுக வெல்லும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

ஆனால், அஇஅதிமுக அபார வெற்றியை பெற்றது. கூட்டணியில் இடம்பெற்று அந்த வெற்றிக்குக் காரணமான கட்சிகளை அரவணைத்து ஆட்சியிலும் இடம்பெறச் செய்திருக்க வேண்டிய அஇஅதிமுக படிப்படியாக அனைவரையும் கூட்டணியிலிருந்தே வெளியேற்றியது.

2001ல் அஇஅதிமுக இருந்த நிலையில் இப்போது திமுக இருக்கிறது. எப்பாடுபட்டாவது திமுக கூட்டணியிலிருந்து கட்சிகளை இழுப்பதற்கு அஇஅதிமுக பலவித முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை எந்த பலனும் கிட்டியதாகத் தெரியவில்லை. கடைசி ஆயுதமாக ஒருவேளை அஇஅதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை ஜெயலலிதா முன்வைக்கக் கூடும். வலிமையான திமுக கூட்டணியை எந்தவிதத்திலாவது பலவீனப்படுத்துவதற்கு கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் ஒருவேளை பயன்படக்கூடும்.

அதேபோலவே வெளியில் தனிக்கட்சி ஆட்சி என்று திமுக பேசிவந்தாலும், எப்படியாவது கூட்டணியை தக்கவைத்துக் கொண்டு ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் திமுக, கடைசி நேரத்தில் வேறுவழியின்றி கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளக் கூடும். தேர்தலுக்கு முன் தொகுதி பங்கீட்டின்போது வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் கூட, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அந்த நிலைக்கு அந்த கூட்டணி வரக்கூடும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளே மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மக்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியின் மீதும் முழுமையான நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. இதை அரசியல் கட்சிகளும் நன்கு உணர்ந்திருக்கின்றன. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்துப் போட்டியிட தயங்குகின்றன.

அரசியல் கட்சிகளின் மீதுதான் மக்களுக்கு முழு நம்பிக்கை இல்லையே தவிர, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆவலுடன் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஏதாவது ஒரு அரசியல் கட்சி மீது முழு நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் இருப்பதற்கும், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதற்கும் இடையில் ஒரு தீர்வு தேவைப்படுகிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்வரை
அது கூட்டணி ஆட்சியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நன்றி: தினமலர் செய்தி மலர் (22.01.2006) இதழ்
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இலவச இணைப்பு

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.