Tuesday, September 27, 2005

அத்வானி மாறவில்லை!

பாஜக விவகாரங்களைத் தனது தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்எஸ்எஸ் தனது சுமைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பாஜக தலைவர் அத்வானி பகிரங்க அறைகூவல் விடுத்திருப்பது உண்மையில் ஒரு முக்கியமான திருப்பம்தான். இந்த அறைகூவலுடன் தனது தலைவர் பதவியையும் டிசம்பரில் ராஜினாமா செய்ய இருப்பதாக அத்வானி அறிவித்துள்ளார். டிசம்பர் 2005 தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய தலைவருக்கான செயல்திட்டத்திற்கும் அத்வானி பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

அத்வானி, தனது கடந்த கால நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டு பாதை மாறியிருப்பதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. வாஜ்பாய் மிதவாதி என்றும் அத்வானி தீவிரமானவர் என்றும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து ஒரு பிம்பத்தைக் கடந்த காலங்களில் உருவாக்கி வந்தனர். ஆனால் இந்த ஊடகம் சார்ந்தவர்களும் அறிவுஜீவிகளும் அத்வானி மற்றும் வாஜ்பாய் இருவரும் ஒரே தத்துவப் பள்ளியில் அரசியல் பயின்றவர்கள் என்பதையும் அக்டோபர் 1951இல் ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் பாரதிய ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை உருவாக்கத் துணைநின்று அதை வளர்த்தவர்கள் என்பதையும் மறந்துவிடுகிறார்கள்.

அத்வானி மற்றும் வாஜ்பாய் இருவரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்பதில் பெருமிதம் கொண்டவர்கள். சங்க உறுதிமொழியைக் காப்பவர்கள். ஆர்எஸ்எஸ்ஸின் உலகப் பார்வையை உள்வாங்கிக் கொண்டவர்கள். மத அடிப்படையிலேயே தேசங்கள் உருவாக்கப்பட்டன என்றும் அதன்படி இந்தியாவின் அடிப்படை இந்துமதம் என்றும் தங்களது அரசியல் வாழ்வில் பல கட்டங்களில் பேசி வந்தவர்கள். பிப்ரவரி 27, 2002க்குப் பிறகு குஜராத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்த படுகொலைகளில் நரேந்திரமோடியின் தவறு எதுவும் இல்லை என்று ஒப்புக் கொண்டு, அடுத்து வந்த தேர்தலில் அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தவர்கள்.

இப்போதும் கூட அத்வானி அந்தக் கருத்துக்களில் இருந்து மாறிவிடவில்லை. ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான அவரது கோபம் நாக்பூரிலும் டெல்லியில் ஆர்எஸ்எஸ் செயல்படும் ஜந்தேவாலனிலும் உள்ளவர்களிடம் பாதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று உணர்த்தும் கோபம் அல்ல. மாறாக நீங்கள் செயல்படுத்தும் திட்டத்திற்கு பாஜக உதவும், ஆனால் நீங்கள் அதன் உள் விவகாரங்களில் தலையீடாதீர்கள் என்ற அளவில்தான் அத்வானியின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. 1951இல் ஜனசங்கத்தை உருவாக்கும்போது ஆர்எஸ்எஸ் அதன் வழியில் குறுக்கிட்டதில்லை. அதேசமயம், சங்கக் கோட்பாட்டை மீறி ஜனசங்கமும் செயல்பட்டதில்லை என்பது வேறு விஷயம்.

ஜனசங்கத்தின் கொள்கைகளாக தீனதயாள் உபாத்தியாயா சிலவற்றை உருவாக்கினார். ஒருங்கிணைந்த மனித நேயம் அரசியல் தத்துவமாகவும், காந்தீய சோஷலிசம் பொருளாதாரக் கொள்கையாகவும் கலாச்சார தேசியம் உலகப் பார்வையாகவும் உருப்பெற்றன. இதற்கெல்லாம் ஆதார அடிப்படையாக வேதகால நாகரிகம் இருந்தது.

இதன் காரணமாகவே பெண்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முணுமுணுப்பு கூட இத்தலைவர்களுக்குப் பிடிப்பதில்லை. இதன் காரணமாகவே இந்து சமூகத்திற்குள் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் கூட ஜனசங்கத்தினரால் எதிர்க்கப்பட்டன.

பாரதிய ஜனதாக் கட்சியும் இதே பாரம்பர்யத்தில் வந்த கட்சிதான். இப்போது இருக்கும் வடிவத்தில் கட்சி 1980ஆம் ஆண்டு உருவானது என்றாலும் அது ஏறத்தாழ பாரதிய ஜனசங்கத்தின் பெயர் மாற்றம்தான். கட்சியின் திட்டமும் கொள்கைகளும் ஜனசங்கத்துக்காக 1965இல் உருவாக்கப்பட்டதில் இருந்து எடுத்துக் கொண்டவையே. இருந்தும் பாஜக தன்னை இந்திராகாந்தியின் எதேச்சதிகாரத்துக்கு எதிராகப் போராடிய ஜனநாயகவாதிகளாக மட்டுமே காட்ட விரும்பியது. நாதுராம் கோட்சே போன்றவர்களது கோட்பாட்டுடன் இணைத்துப் பார்ப்பதை விரும்பவில்லை.

ஆர்எஸ்எஸ் கூட அவசரநிலைக் காலத்தின் அராஜகங்களுக்கு எதிரான ஜனநாயக இயக்கமாகவே காட்டிக் கொண்டது. இது பாஜகவை அரசியல் மைய நீரோட்டத்தில் கலந்து முன்னணிக்கு வர உதவியது. எனவே இரண்டுக்கும் மோதல் வருவதற்கான காரணமோ அடிப்படையோ சிறிதும் இல்லை. 1983-84இல் தீவிரமான அயோத்திப் பிரச்னையில், 1988 பாலம்பூர் அமர்வுக்குப் பிறகே பாஜக களம் இறங்கியது. ஆனால் இந்தக் காலதாமதத்திற்காக ஆர்எஸ்எஸ் கோபப்படவில்லை. பாஜகவிற்கு முன்னரே ராஜீவ்காந்தி இந்துத்துவ திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார் என்பது வேறு விஷயம்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்னைக்குத் தீவிரமாகக் களம் இறங்குமாறு ஆர்எஸ்எஸ், பாஜகவை நிர்ப்பந்திக்கவில்லை என்பதே உண்மை. ஒருபுறம் இந்துத்துவத் திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மறுபுறம் ஷாபானு வழக்கு காரணமாக சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையினரையும் திருப்திப்படுத்த ராஜீவ் முயன்ற போதுதான் பாஜக விழித்துக் கொண்டது. அதன்பிறகே பாஜக களம் இறங்கியது.

1989 தேர்தலில் கூட ராஜீவ் காந்திதான் அயோத்திக்கான வாக்குறுதியை வழங்கினார். ஆகஸ்ட் 8, 1990க்குப் பின்னர் அதாவது மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் அமலாக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் என்ற தீவிர பிரச்சாரத்தில் பாஜக இறங்கியது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், மண்டல் கமிஷனின் சமூக நீதி காரணமாக "பிளவுண்ட" இந்து சமூகத்தை ஒன்றுபடுத்தி மதரீதியாக அடையாளப்படுத்துவதற்கான முயற்சியே அத்வானியின் ரத யாத்திரை.

ஆர்எஸ்எஸ் இதை வரவேற்றது. எப்போது களம் இறங்குவது என்பதை பாஜகதான் தீர்மானித்தது. இதற்கு இந்தக் காலக்கட்டம் முழுவதும் ஆர்எஸ்எஸ் தலைவராக தேவரஸ் இருந்ததும், அவர் பாஜகவை ஆர்எஸ்எஸ்ஸின் திட்டங்களுக்கு அரசியல் அரங்கில் ஆதரவு திரட்டுவதற்கான அமைப்பு என்ற அளவில் மட்டுமே பார்த்ததும் முக்கிய காரணம். விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு பதிலாகவோ, அல்லது பஜ்ரங் தளத்திற்கு மாற்றாகவோ, பாஜக செயல்பட வேண்டும் என்று அந்தக் காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை என்பதுதான் உண்மை.

இந்தப் புரிந்து கொள்தலும் வியூக சிந்தனையும் தேவரஸ் போய், ராஜு பையா என்றழைக்கப்பட்ட ராஜேந்திரசிங் ஆர்எஸ்எஸ் தலைவரான காலகட்டத்தில் எப்படியோ இல்லாமல் போனது. தனது சீடரும் தன்னுடன் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தவருமான முரளி மனோகர் ஜோஷியை பாஜக தலைவராக கொண்டு வருவதற்கு ராஜு பையா கூச்சப்படவில்லை. பாஜகவின் குறுகிய கால அரசியல் வரலாற்றில் கட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லாத காலகட்டம் ஜோஷி தலைவராக இருந்தகாலம்தான் என்று கூறலாம். அதேசமயம் ராஜு பையா தலைவராக இருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக மீடியாவில் அதிகம் தெரிய ஆரம்பித்தது. பேராசிரியர் ராஜேந்திர சிங் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிக் கொண்டிருந்தார்!

ஆர்எஸ்எஸ்சின் போக்கில் நிகழ்ந்த இந்த மாற்றம், கே.எஸ்.சுதர்சன் தலைவரானதும் இன்னும் அதிகரித்தது. மத்தியில், ஆட்சியை பாஜக இழந்ததும் இது மேலும் மோசமானது. பிரவீன் தொகாடியா பாஜக தலைவர்களை வாய்க்கு வந்தபடி பேசுவதும், தேசிய செயற்குழு கூட்டத்தில் உமா பாரதியின் சுடுசொற்களும், முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர் கூட அத்வானிக்கு எதிராகப் பேசுவதும் பாஜகவும் வழிகாட்டும் நெறிமுறைகளை அவ்வப்போது உத்தரவுகளாக ஆர்எஸ்எஸ் பிறப்பிப்பதும் இந்த போக்கின் காரணமாக நிகழ்ந்தவையே.

ஜனசங்க காலத்திலும் பாஜக உருவாக்கப்பட்ட காலத்திலும் இருந்த நடைமுறையைப் போல, ஆர்எஸ்எஸ் திட்டங்களுக்கு அரசியல் அரங்கில் ஆதரவு திரட்டும் துணைப் பணியுடன் நிறுத்திக் கொள்கிறோம் என்று சொல்வதற்கு அத்வானி முயன்றிருக்கிறார். அதாவது இந்துத்துவத் திட்டத்திற்கு கடந்த காலத்தில் இரு அமைப்புகளும், எப்படி செயல்பட்டனவோ அப்படி செயல்பட ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பணியில் அத்வானி தனியாகவும் இல்லை. இதில் அவர் வாஜ்பாய் துணையை எதிர்பார்க்கிறார். டிசம்பர் 2005இல் இருவரும் பாஜகவின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுவார்கள். அவர்கள் இருவரையும் போலவே ஆர்எஸ்எஸ்சில் அர்ப்பணிப்புடன் இருப்பவராக ஒருவரை புதிய தலைவராகத் தேர்வு செய்வதையும் இருவரும் உறுதி செய்வார்கள்.


ஆங்கில மூலம் : வி.கிருஷ்ணா ஆனந்த்(20.09.05)
நன்றி : தினமலர் செய்திமலர்.(25.09.05)(திருநெல்வேலி,தூத்துக்குடி, நாகர்கோவில் பதிப்புகளுடன் வரும் இலவச இணைப்பு)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 25, 2005

ச்சீ ச்சீ இந்த ஸ்வீட் புளிக்கும்

கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்


- ஏதோ ஒரு சினிமாப் பாடல் ஒலிக்கிறது.

"நமது நாடு சுதந்திர நாடு.
ஜனநாயக நாடு. நமது அரசமைப்பு சட்டம் தனிமனித சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் குடிமக்களுக்கு அளித்துள்ளது."
- காலாண்டுத் தேர்வுக்கு சமூக அறிவியல் படிக்கிறான் சிறுவன்.


"உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம், என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள் அதாவது குழந்தைகளை பயமுறுத்த பெரியவர்கள் 'பூச்சாண்டி' 'பூச்சாண்டி' என்பதுபோல இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.''

----- அரசியலில் ஒழுக்கமா இருக்க முடியலே. எவனாயிருந்தாலும் மதத்திற்குக் கூட, காட்டிக்க முடியுதே தவிர, தத்துவப்படி நடக்க எவனாலும் முடியலே. ஒழுக்கம்'னு இன்னொருத்தனுக்கு சொல்றமே தவிர, அந்த வாய்ப்புக் கிடைச்சா நாமும் அந்தத்தவறு பண்ணத் தயாராயிருக்கோம். அனுபவத்திலே சொல்றேன். நான் அப்படி இருக்கும்போது சும்மா ஒழுக்கம்னு சொல்லி இன்னொருத்தனை ஏமாத்தறதிலே என்ன இலாபம் சொல்லுங்க.--
வாலிப வயதில் நானாகத் தேடிப் படித்த பெரியாரின் கருத்து. (ரோசா வசந்த் பதிவில் இருந்து எடுத்தாள்கிறேன். அவருக்கு என் நன்றி)

திருமணமோ அல்லது வேறெந்த உறவோ அதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களின் நலனைமிஞ்சி தனக்கென தனித்தகுதியையும், புனிதத்தையும்கொண்டிருக்கக்கூடாது. முற்றும் முழுதாக அதில் சம்பந்தப்பட்டவர்களின் நலனே பிரதானமாக இருக்கவேண்டும். அப்படி இருவரும் தமது நலன்களை அடுத்தவரை பலிகொடுக்காமல் பாதுகாத்துக்கொள்ள ஒரு அடிப்படை நேர்மையும், சுயமரியாதையும் அவ்விருவர்களுக்கும் வேண்டும். இவ்விரண்டும் (நேர்மையும், சுயமரியாதையும்) திருமணம் புனிதமானது; குடும்பம் கோயில், கணவன் தெய்வம், கற்புள்ள மனைவி பெருந்தெய்வம் போன்ற கருத்தாக்கங்களால் முற்றாக அழிக்கப்படுகிறது. இதனால் அடிமைப்படுத்தலும், அடிமைப்படுவதும் சாத்தியமாகிறது. இதில் ஆண்களின் நலன்கள் பூரணமாகக் காக்கப்படுவதால் அவன் இந்த சமூக விழுமியங்களை எப்பாடுபட்டாவது காக்கமுனைவது இயல்பு. இக்கருத்தாக்கங்களுக்கு பலியான பெண்கள் இதை ஆதரிப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
-- இதற்கு நன்றி தங்கமணிக்கு..

விமர்சனம் என்ற ஆயுதத்தை
பயன்படுத்துங்கள்..
ஆயுதம் என்ற விமர்சனத்தை
உபயோகிக்காதீர்கள்..
…. எப்போதோ பக்கத்து வீட்டு படிச்ச தம்பி
என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னது.

என்னவோ தொடர்பில்லாமல் ஏதேதோ போட்டிருக்கேன்.. மன்னிப்புக் கேள் அல்லது வலைப்பதிவை விட்டு வெளியேறுன்னு சொன்னா நான் என்ன செய்வது..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 22, 2005

பேணிக்காக்கும் போலி மரபுகள்

இறந்துபோன மனிதர்களை விமர்சனம் செய்வது நமது மரபல்ல. அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவது நமது வழக்கம். இந்த மரபும் வழக்கமும் சாதாரணத் தனிமனிதர்கள் விஷயத்தில் வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். இதே மரபு ஒரு நாட்டின் வரலாற்றை அல்லது மக்களின் வாழ்க்கையைத் திசைமாற்றியவர்களுக்கும் பொருந்தும் என்று கூறுவது நேர்மையல்ல.

சென்ற வாரம் நமது நாட்டின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் காலமானார். அவரது மறைவை ஒட்டி பத்திரிகைகளில் கட்டுரை எழுதியவர்களும் டிவிக்களில் கருத்து தெரிவித்தவர்களும் அவரை "சாணக்கியர்' என்றும் "ராஜதந்திரி' என்றும் "பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை' என்றும் "தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல் உலகமயமாக்கலின் பிதாமகன்' என்றும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இந்தப் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்திய மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நன்மை, தீமைகள் பற்றி நாம் வேறோரு நாளில் விவாதிக்கலாம். ஆனால் 1991 ஜூன் முதல் 1996 மே வரை நரசிம்மராவ் ஆட்சியில் இருந்த ஐந்து வருடங்களில் என்னவெல்லாம் நடந்தன என்பது குறித்த நமது நினைவுகளை நாம் புதுப்பித்துப் பார்ப்பது அவசியம்.

"ஏசியா ப்ரௌண் போவேரி' என்ற நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே 30 ரயில் என்ஜின்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டது. இந்த என்ஜின்கள் நமது தண்டவாளத்தில் பயன்படுத்தப்பட முடியாது என்று தெரிந்தும் ஒப்பந்தம் முடிந்தது. பிரதமர் நரசிம்மராவின் மகன் பி.வி.ராஜேஸ்வரராவ் இந்த பேரத்தில் அதிக "அக்கறை' காட்டினார்.

இப்போதுள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் "பைலதிகா' என்னும் இடத்தில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் இரும்பு, தரத்தில் உயர்ந்தது. பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வளர்த்து எடுத்த "11பி' என்ற சுரங்கத்தை "நிப்பான் டென்ரோ' என்ற அந்நிய ஜப்பான் நிறுவனத்திற்கு மலிவு விலையில் விற்றார்கள். இங்கிலாந்தில் கிடைக்கும் இரும்பு வளத்தை பொதுத்துறை நிறுவனமான "செயில்' எடுத்து இருக்கலாம். பீகார் "பிலாய்' உருக்கு ஆலையின் தரத்தை உயர்த்தி, உருக்கு தயாரித்து இருக்கலாம்.

டெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி அளிப்பதற்காக வீடு ஒதுக்குவதில் ஊழல் நடந்தது. வீட்டுவசதித்துறை அமைச்சர் ஷீலா கவுல் போலி ஒதுக்கீட்டில் ஈடுபட்டதாகக் கண்டிக்கப்பட்டார்.

அவரது ஆட்சிக்காலம் தொலைத் தொடர்புப் புரட்சிக்காலம். அன்றைய காலகட்டத்தில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்தன. அவரது வீட்டில் ரெய்டு நடத்தி சிபிஐ கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களைக் கைப்பற்றியது.

மகாராஷ்டிர மாநில மின்வாரியம் மீது என்ரான் ஒப்பந்தத்தை திணித்து தேசிய நலனுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டது.

நிதித்துறை நிறுவனங்களிலும் வங்கிகளிலும் நடந்த முறைகேடுகள் காரணமாக ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் புகழ் பெற்றது. இதுகுறித்து நாடாளுமன்றக்குழு அளித்த அறிக்கை மீது அரசு தலைவைத்துப் படுத்து உறங்கியது.
சிறுபான்மையாக இருந்த ராவ் அரசு, பெரும்பான்மை பெற்ற கதை ஊழல்களின் மொத்த வரலாறுகளை உள்ளடக்கியது. ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை உடைத்ததும், ஜே.எம்.எம். எம்.பி.க்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக லஞ்சம் கொடுத்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி, அஜீத் சிங் கட்சி எம்பிக்கள், ராவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது என முறைகேடுகள் பலவற்றிற்குப் பிறகே அரசு பெரும்பான்மை பெற்று ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தது. இந்த முறைகேடுகளை "ராஜதந்திரம்' என்று போற்றுவது வெட்கக்கேடு!

ஐந்து வருட ஆட்சியில் இந்த மேற்கூறிய ஊழல்கள் மட்டுமே நடந்ததாக யாரும் நினைத்துவிடக்கூடாது. அன்றைய காலத்தில் ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற ஒரு மத்திய அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பு வகித்தவர் நரசிம்மராவ். ஊழல் நடந்த பல துறைகள் பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் "புதுக்காற்றை' சுவாசிக்க ஜன்னல்கள் திறக்கப்பட்ட துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிய முதலீட்டை வரவேற்ற காரணத்தால்தான் இரும்புச் சுரங்கம் ஜப்பான் நிறுவனத்திற்குப் போனது. டெலிகாம் துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்ததில் கிடைத்த பணமே சுக்ராம் வீட்டில் சிபிஐ எடுத்தது. பங்குச் சந்தைக் குறியீடுகள் அதிகரிப்பதாகக் காட்டுவதற்காக ஹர்ஷத் மேத்தா ஊழல் உருவானது. இதுபோன்ற எண்ணற்ற முறைகேடுகள் வளர்வதற்கே நரசிம்மராவ் மிகப்பெரிய "பங்களிப்பை' அளித்தார். இந்தப் பங்களிப்பைத்தான் சென்றவாரம் கட்டுரையாளர்கள் புகழ்ந்து தள்ளினார்கள் போலிருக்கிறது.

இத்தகைய போலி மரபுகளை இன்னும் நாம் பேணிக்காக்க வேண்டுமா?

(இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்ததற்கு அடுத்த வாரத்தில் பத்திரிகையாளர் கிருஷ்ணா ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதிய பத்தியின் தமிழாக்கம்.)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 11, 2005

குழலியால் வந்த பதிவு

குழலி கேப்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காரு..அதைப் படிச்சுட்டு அவருக்குப் பின்னூட்டமா நான் கேப்டனுக்கு வேறு ஒரு சூழ்நிலையில்
16.07.2000 அன்று எழுதின பகிரங்கக் கடிதத்தின் சுட்டி கொடுக்க முயற்சி பண்ணினேன்.. எனக்குச் சரியா வரலைங்க.. அதனால அந்தக் கடிதத்தை இப்படி ஒரு பதிவாப் போட்டுட்டேன்..

இதுதாங்க அந்தக் கடிதம்.

இத்துடன் முடிச்சிருந்த பதிவை முகமூடி பார்த்துட்டு யுனிகோடுல போட்டா என்னன்னு கேட்டாரு. நாளைக்குப் போட்றேன்னு சொல்லிட்டு தூங்கப் போயிட்டேன். முழிச்சு வந்து பார்த்தா டோண்டு ராகவன் யூனிகோடுல போட்டு உதவி இருக்காரு.. அவருக்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.
இதோ 16.07.2000 தேதியிட்ட கடிதம்:

படைப்பாளிகளின் சுதந்திரம் அடமானப் பொருளா ?

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு,

வணக்கங்க.

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கற ரசிகர்கள் முதல் தலைநகரத்தில் இருக்கற முதல்வர் வரை ஆர்வம் காட்டற தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்னு சொல்லுவாங்க. அதுல போட்டியில்லாம நீங்க தலைவராத் தேர்ந்தெடுக்கப் பட்டதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்க மொழில சொல்லணும்னா நானெல்லாம் 'சி' சென்டர் ங்கற பிரிவுல வருவேன்னு நினைக்கறேன்ங்க. ஏழை ஜாதியின் நல்வாழ்வுக்குப் போராடற நல்லவனாத் தொடங்கின உங்க சினிமா வாழ்க்கை இப்போ வல்லரசு மாதிரியான நடிகர் சங்கத் தலைவர் இடத்துக்கு வந்திருக்கிறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்ங்க. அடுத்த படத்துக்கு 'சிம்மாசனம்'னு பெயர் வைச்சிருக்கீங்களாம். புல்லரிச்சுப்போயிட்டேன்ங்க இதைக் கேட்டு.

தமிழக முதல்வரா கோட்டைக்கு வரணும்னா அதுக்கு வழி கோடம்பாக்கம்தான்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்கங்கறது உங்களுக்குத் தெரியுமா? பஸ் புறப்படறதுக்கு முன்னாடி ஏறி தோள்ல இருக்கற துண்டெடுத்து இடம் பிடிக்கறதுக்குப் போடறதை, மதுரை பக்கத்துல பார்த்திருப்பீங்க. அதே மாதிரி 'அந்த' சிம்மாசனத்துக்கு துண்டு போட்டுட்டு நிறைய பேர் காத்திருக்காங்க. புரியுதுங்களா?

இதுக்காக யாரைங்க குறை சொல்ல முடியும்? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து முதல்வரானவங்க எல்லோரும் கோடம்பாக்கத்தோட தொடர்பு இருக்கறவங்களாத்தான் இருக்காங்க. சரியாத் தெரியற சரியான உண்மைகள் எல்லாம் தப்பான நபர்களுக்கு சரியான உதாரணங்களாத் தப்பாத் தெரியறதை நினைச்சா, எது சரி எது தப்புன்னு புரியவே இல்லீங்க.

ஒரு மன்றத்தில பாதி அறை நிரம்பற அளவு கூட்டம் கூடினாலே அங்க வருங்கால முதல்வர்னு கோஷம் கேட்குதுன்னு கலைஞர் சொன்னாரு. அதன்படி பார்த்தா ஏகப்பட்ட வருங்கால முதல்வர்கள் சேர்ந்து உங்களை அவங்களோட தலைவராத் தேர்ந்தெடுத்திருக்காங்கன்னா, நிச்சயம் நீங்களும் வருங்கால முதல்வராத்தான் இருக்கணும் இல்லீங்களா..?

ஏற்கனவே அரசியல் கட்சிகள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. போதாக்குறைக்கு புதுசு புதுசா முளைக்கற சாதிச் சங்கங்கள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. நடிகர் சங்கத்துக்குள்ள பொறுப்புலயும், பொறுப்பு எதுவும் வகிக்காமலும் நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. இன்னும் வருங்கால முதல்வர்ங்கற இறுதி இலக்கை அடையறதுக்காக கிராமங்கள்லேர்ந்து எத்தனை பேர் டிக்கெட் இல்லாம சென்னை வந்து ஹீரோ ஆகறதுக்காக புறப்பட்டுட்டு இருக்கிறாங்களோ தெரியலீங்க. உங்க ரசிகர்களோட குரல் இந்தக் கும்பல்ல கரைஞ்சு போயிடுதுங்கறதுதான் வேதனையா இருக்குதுங்க.

சரி விடுங்க. அதெல்லாம் அதுக்கான காலம் வரும்போது பார்த்துக்கலாம். நீங்க தலைவராப் பதவி ஏற்றவுடனே நடிகர் சங்கக் கடனைத் தீர்க்கறதுதான் முதல் கடமைன்னு பேசியிருக்கீங்க. ரொம்ப யோசிச்சு நிதானமா முடிவெடுக்கறவர் நீங்க. அதுக்கப்புறம் எடுத்த முடிவுல உறுதியா செயல்படறவர் நீங்க. எல்லோரும் பேசறமாதிரி நீங்களும் பேசி மாட்டிக்கக் கூடாதேன்னு கவலையா இருக்குதுங்க.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து நடிகர் சங்கக் கடன் பத்தியும் கேள்விப்பட்டுக்கிட்டு தாங்க இருக்கேன். செவாலியே சிவாஜி சார் காலத்துலேர்ந்து கேட்கறதால, இது காற்றோட கரையப் போற வெறும் கோஷமோங்கற சந்தேகம் வர்றதைத் தவிர்க்க முடியலீங்க.

நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கறோம், கடனை அடைக்க மாட்டோமா என்ன என்கிற கேள்வியை இப்போ கேட்க முடியுதுங்க. சினிமா இன்டஸ்ட்ரி வளமா இருக்கும் போதும், நடிகர்கள் கொடிகட்டிப் பறந்த போதும் நடக்காத காரியம், இப்போ இன்டஸ்ட்ரியே தடுமாறிக்கிட்டு இருக்கும்போது நடக்கவாப் போகுதுன்னு ஒரு வேதனை கலந்த விரக்தியும் வருதுங்க.

அப்போதான் ஒரு பத்திரிகைல பார்த்தேன் ஒரு செய்தியை. சூப்பர் ஸ்டார் உங்ககிட்ட ரெண்டு ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னதாக அந்த செய்தி சொல்லிச்சுங்க. கூட்டத்துக்குக் கூட்டம் ஜெய்ஹிந்த் சொல்ற தேசியவாதி ரஜினிகாந்த், மதுரையில் நடந்த கார்கில் வீரர்களுக்கான ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கே வரலியே. இதுக்கு வந்துடுவாரான்னு தோணுதுங்க. வந்தா தேசத்தைவிட நடிகர் சங்கம் தான் அவருக்குப் பெரிசான்னு தோணும். வரலைன்னா நடிகர் சங்க நிகழ்ச்சிக்குக் கூட வரமாட்டேங்கறாரேன்னு தோணும்.

இதைத்தான் பக்கத்து வீட்டு படிச்ச தம்பி சொல்லும். உன் மனைவியை நீ அடிக்கறதை நிறுத்திட்டியாங்கற கேள்விக்கு பதில் சொல்ற மாதிரியான சங்கடமான நிலைமைன்னு.

சரி. அதையும் விட்டுடுங்க. சினிமாத் துறைக்கு முதல்வர் உதவிகள் இருக்கறதால இருவர், தேசிய கீதம் மாதிரி படம் எடுக்காதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. இதைத்தான்ங்க என்னால தாங்க முடியலை.

குடிக்கத் தண்ணீர் இல்லாம அத்திப்பட்டு கிராம மக்கள் நடத்துன போராட்டத்தை பாலசந்தர் அவரோட 'தண்ணீர் தண்ணீர்' படத்துல காட்டினாரே.

வேலை இல்லாமையும், வறுமையும், திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமையும், அன்றாட வாழ்வாகிவிட்ட ஒரு சமூகத்துல இளைஞர்கள் வன்முறையாளர்களாக மாறுவதை அற்புதமா பாரதிராஜா 'நிழல்கள்'ல காட்டினாரே.

தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பென்ஷனுக்காக அரசு அலுவலகத்தின் படிகளில் துவண்டு போன காந்தியவாதி, இறுதிக் காட்சியில் ஆயுதம் தூக்க வைத்தாரே மணிவண்ணன் 'இனி ஒரு சுதந்திரத்தில்'.

வாயைக் கட்டி வயித்தைக் கட்டிச் சிறுகச் சிறுகச் சேமிச்சு, ஒரு மனை வாங்கி வீடு கட்டி நொந்து நூலாப் போன இளம் தம்பதிங்க தலைல லஞ்சம், அம்மி தூக்கிப் போட்டதை பாலுமகேந்திரா அவரோட 'வீடு' படத்தில் கவிதையாய்க் காட்டினாரே.

இதற்கெல்லாம் அவ்வப்போது அதிகார பீடத்தில் இருப்பவர்கள் படைப்பாளிகள் மீது விஷங்களைக் கக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறுங்க.

அவையெல்லாம் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த கன்டனங்கள். இப்போது நீங்க உங்கள் இயக்குநர் தோழர்களது சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கறீங்க.

சமகால அரசியலில் பலம் வாய்ந்த இருவரைத் தனது படைப்பிலே பதிவு செய்தல் தவறுங்களா? எனக்குப் புரியலீங்க.

மதுரைலேர்ந்து வந்து கனவுத் தொழிற்சாலையின் தலைவரானதுனால, சாலைகளும், குடிநீரும், தெரு விளக்குகளும் இல்லாத குக்கிராமங்கள் மதுரையைச் சுத்தி இருக்கறதை நீங்க மறந்திருக்க மாட்டீங்க. இதைத் தானே சேரன் 'தேசிய கீதம்'ல சித்தரிச்சாரு.

இந்தப் படங்கள் எல்லாம் அந்தப் பிரச்சினையை முழுமையாகச் சரியாச் சித்தரிச்சதா என்றால் அது வேறு விஷயம். இது மாதிரி சப்ஜெக்ட்டையே படமாக எடுக்கக் கூடாதுன்னு நீங்க சொல்றது ரொம்ப வேதனையா இருக்குதுங்க.

இந்த மாதிரிப் படம் எடுக்கறவங்க எல்லாருக்கும் அந்த படத்துல நடிகர்கள் மிகக் குறைஞ்ச சம்பளத்துல நடிச்சுக் கொடுப்பாங்கன்னு வாக்குறுதி கொடுக்கறதுக்குப் பதிலா, அப்படிப் படமே எடுக்காதீங்கன்னு சொல்றீங்களே. அதை என்னால தாங்கவே முடியலீங்க. '

சிம்மாசனம்'னு படத்துக்குப் பெயர் வைச்ச உடனேயே மன்னராட்சி மனோபாவம் உங்களுக்கு வந்திட்டுதோங்கற கவலைலதான்ங்க இந்த லெட்டரை எழுதினேன்.

ஏற்கனவே சினிமா இன்டஸ்ட்ரில படைப்பாளிகளுக்கு ஒரு சுதந்திரமும் இல்லைங்க. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்க எல்லாரும் அந்த சுதந்திரத்தை ஆளுக்குக் கொஞ்சம் பறிச்சிட்டுப் போயிடறாங்க.

மிச்சம் மீதி இருக்கற சுதந்திரத்தையும்கூட, நீங்க அடமானமா கேட்கறீங்களே. ஒரு கேப்டன் கிட்டேயிருந்து இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலீங்க.

தெருத்தொண்டன்
theruthondan@negotiations.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 04, 2005

தங்கரின் ‘டங்’ ஸ்லிப்

தயாரிப்பாளர் தங்கர் பச்சான் அவர்களுக்கு,

வணக்கங்க..

உங்களை எப்படி விளிக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பம்ங்க. ஒளி ஓவியர்னா, இயக்குனர்னா, நடிகர்னா எப்படி விளிக்கணும்னு ரொம்ப யோசிச்சேன்ங்க. அப்புறம்தான் போனவாரம் முழுக்க சினிமா உலகத்தையே ஒரு கலக்கு கலக்கினீங்களே..அதுக்கு நீங்க தயாரிப்பாளர் ஆனதுதானே காரணம்னு புரிஞ்சு அப்படியே உங்களை இந்தக் கடிதத்துல விளிச்சு இருக்கேன். தப்புங்களா?

எனக்கு ஆரம்பத்துல உங்களை ரொம்பப் புடிச்சிருந்ததுங்க. வணிக மயமான சினிமா உலகத்துல நீங்க ரொம்பத் தமிழ் உணர்வோட இருந்தீங்க. சினிமாங்கற சூதாட்டத்துல நாம தாய்மொழியைப் பறிகொடுத்துடக் கூடாதேங்கற உங்களோட ஆதங்கம் சரின்னுதான் நான் நினைச்சேன்ங்க.

ஆனா நாம நினைக்கறதைச் சொல்றதுக்கு ஒரு வழிமுறை இருக்குது இல்லீங்களா? நீங்க பட்னு போட்டு உடைச்சுடறீங்க. அதுபோக நீங்க மட்டும்தான் புதிய மாற்றங்களுக்காக முயற்சி செய்யற மாதிரியும் உங்க சக படைப்பாளிகளும் முன்னோடிகளும் ஏற்கனவே இருக்கற சினிமா நீரோட்டத்துல கரைஞ்சு போனவங்க மாதிரியும் அடிக்கடி பேசறீங்க. சரி விடுங்க..அது உங்க சுதந்திரம்.. ஆனா உங்க சுதந்திரம் மத்தவங்களோட மூக்கு நுனி வரைக்கும்தான் இல்லீங்களா?

அதுதான் இப்போ பிரச்னை ஆயிடுச்சு.. ஒரு நடிகனும் நடிக்க வரமாட்டேங்கறான், அதனால நானே நடிக்கணும்னு முடிவு பண்ணினேன்னு சொல்லி நடிகர்கள் மேல கல்லெறிஞ்சிருக்கீங்க. ஒரு 'தலை சீவி விடற பொம்பளை' 600 ரூபாய்க்காக படப்பிடிப்பையே நிறுத்தறான்னு சினிமாவுல வேலை பார்க்கற தொழிலாளர்களைப் புழு மாதிரி துச்சமா மிதிச்சிருக்கீங்க.. பணத்துக்காக மட்டுமே நடிக்கற நடிகை விபச்சாரின்னு பெரிய அணுகுண்டையே எடுத்து நடிகைகள் மேல வீசியிருக்கீங்க..

இந்த மூணு விஷயமும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினன்னு சொல்றதில எந்தவிதமான மிகையும் இல்லீங்க. ஒருவேளை இப்படி எல்லாம் நீங்க பேசாம பத்திரிகையில தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டிருப்பாங்களோன்னு உங்க விழாவுக்கு வந்த நண்பர்கிட்டேயும் உங்க பேட்டியை வெளியிட்ட பத்திரிகை தொடர்பானவங்க கிட்டேயும் விசாரிச்சேன்ங்க. நீங்க பேசினது எல்லாத்துக்குமே டேப் ஆதாரம் இருக்குதாம்..அப்புறம்தான் சரி, நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு தப்புத் தப்பா பேசிட்டாருன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்ங்க..

ஒரு படத்துல நடிக்கறதும் நடிக்காததும் ஒரு நடிகனோட விருப்பம். அவங்க உழைப்புக்கேத்த கூலியாக அவங்க கேட்கறதை நீங்க கொடுத்தீங்கன்னா அவங்க நடிக்க சம்மதிச்சு உங்க கூட ஒப்பந்தம் போட்டுக்கப் போறாங்க.. சம்பளம், கதை ஒத்துவரலைன்னா என்னை விட்டுடுங்கன்னு சொல்லி விலகியிருப்பாங்க.. அவங்க சில பேரு நடிக்க சம்மதிக்காத படத்துல நீங்க நடிக்கறதும் நடிக்காததும் உங்க விருப்பம். அதுக்காக நாம நடிகர் மேல ஏன் சேறை வாரி வீசணும்?

உங்களுக்கு பல நடிகர்கள் மேல விமர்சனம் இருக்கலாம். உங்க மனக்குறைகள் நியாயமாகக் கூட இருக்கலாம். நீங்க விமர்சனம் பண்ற நடிகர்களோட – நடிகைகளோட எண்ணிக்கை அதிக பட்சம் போனா இருபது இருக்குமா? ஆனா தயாரிப்பாளர் கையில இருக்கற பணம் ஒரு திரைப்படமா உருமாறி வர்றதுக்கு எத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் தேவைப்படுது. யாரோ சிலரை மனசுல வைச்சுக்கிட்டு நீங்க போற வர்ற ஆளுங்களை எல்லாம் போட்டுத் தாக்கறது சரிதானுங்களா? அதனால, நடிகர்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு பொதுமைப்படுத்திப் பேசறது என்ன நியாயம்னு எனக்குப் புரியலீங்க.

நீங்க வாழற இந்த சமூகத்துல மத்தவங்களும் வாழறதுக்கு இடம் கொடுக்கணும் இல்லீங்களா? இந்த சமூகத்துல தனிமனித வழிபாடு உச்சத்துல இருக்கு..சினிமாவுல மட்டும் இல்லீங்க, எல்லாத் துறைகள்லயும் இருக்கு. சினிமாவுல அதிகமா இருக்கா அரசியல்ல அதிகமா இருக்கான்னு பட்டிமன்றம் வைக்கலாம். ஆனா நீங்க நடிகர்களைப் பத்தி மட்டுமே தான் "வாய்ஸ்" குடுக்கறீங்க. "கூலி நான் கொடுக்கறேன், இவன் வேலைக்கு வரமாட்டேன்ங்கறானே " ங்கற உங்க மனப்பான்மைக்கு என்ன பேருங்கறதை நல்லா யோசிச்சுப் பாருங்க..

அடுத்தது ‘தலை சீவி விடுற பொம்பளை’ விவகாரம். நீங்க பேசியிருக்கற வார்த்தைகள், தொனி இதெல்லாம் விவகாரமானதுதாங்க..எத்தனையோ தயாரிப்பாளர்கள் சினிமாத் தொழில்ல வேலை செய்யற தொழிலாளர்களுக்கு அவங்க செய்த வேலைக்கு கூலி கொடுக்காம இழுத்தடிக்கறாங்க அல்லது ஏமாத்தியிருக்காங்க.. இதையெல்லாம் பார்த்துத்தானே அவங்க ஓர் அமைப்பாகத் திரண்டாங்க. சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு சம்பள பாக்கின்னா படப்பிடிப்பை மட்டும் இல்ல படம் வெளியிடறதையே நிறுத்தற அளவு பலம் பெற்றாங்க..

ஒடுக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கற நீங்க இந்தத் தொழிலாளர்களுக்கும் ஆதரவாத்தானே குரல் கொடுக்கணும்? ஏன் எதிர்நிலையில் இருந்து பேசறீங்கன்னு புரியலீங்க..உங்களுக்குத் தலை சீவி விடற பொம்பளை கேவலமாகத் தெரியலாம்.. 600 ரூபாய் பிச்சைக் காசாகத் தெரியலாம்..ஆனா அவங்களுக்கு இதை வைச்சுத்தானேங்க வாழ்க்கை? உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் கொடுக்கற சம்பளத்தை வைச்சுத்தானேங்க அவங்க வீட்டுல அடுப்பெரியணும்? தமிழர் நலன் பத்திப் பேசற நீங்க மனிதாபிமானம் இல்லாம பேசலாமான்னு எனக்குள்ள கேட்டுக் கேட்டு மாய்ஞ்சு போயிட்டேன்ங்க..

அப்புறம் நீங்க ஒரு பத்திரிகைக்காக கொடுத்த பேட்டியில் காசுக்காக மட்டும் நடிக்கற நடிகைகள் விபச்சாரிகள்னு சொன்னீங்களாம். கூலி இல்லாம நடிகைகள் கலைச் சேவை பண்ணணும்ங்கறீங்களா? எத்தனையோ விஷயம் பேசற உங்களுக்கு “விபச்சாரம்”ங்கற வார்த்தையைப் பயன்படுத்தறதுல எந்தக் கூச்சமும் இல்லையா? ராஜராஜ சோழன் காலத்துலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நீங்க சொல்ற ‘விபச்சாரிகள்’ ஒரு சமூகத்துல இருந்து வர்றதுக்கு அந்தப் பெண்கள்தான் காரணமா? யாருடைய எந்தப் பசியைப் போக்கறதுக்கு அவங்க இந்தப் பாடு படறாங்கன்னு யோசிக்க மாட்டீங்களா?

மத்தவங்க இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா பரவாயில்லைங்க.. உங்களை மாதிரி சமூக மாற்றம் பத்திப் பேசறவங்களோட “டங்” ஸ்லிப் ஆயிடுச்சுன்னா எப்படா சிக்குவாருன்னு காத்திட்டு இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பிடி பிடிச்சுடுவாங்க. அதோட மட்டும் இல்லீங்க உங்களுக்குப் பின்னால இந்த மாதிரி குரல் கொடுக்க வர்றவங்களையும் இது பாதிக்கும்.

எப்படியோ ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்கறதே பெரிய விஷயம்தான். நீங்க கேட்டிருக்கீங்க. அதுவும் யார் முன்னால? தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு ரமணா படத்துல டயலாக் பேசுன கேப்டன் முன்னால மன்னிப்பு கேட்டிருக்கீங்க. இதன் மூலமா சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள பிரச்னை தீர்ந்து போகலாம். ஆனா உங்க கிட்ட இருக்கற பார்வை மாறணும்ங்கறது நான் இது தொடர்பா பேசிப் பார்த்த பலரோட கருத்துங்க..

இதைப் பத்தி நான் எங்க பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பி கிட்ட கேட்டுப் பார்த்தேன். “தமிழ் அரசியலை மன்னர்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா அல்லது மக்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா என்பதைப் பொறுத்தே அவர்களது வார்த்தைகளும் பேச்சும் இருக்கும். அதுவும் உணர்ச்சி வசப்பட்ட நிலைல ஒருத்தர் வாயில் இருந்து என்ன வருதோ அதுதான் அவர் மனசுல இருக்கற கருத்து.. மத்ததெல்லாம் வேஷம்..இதுல ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ யாருக்கு சேவை செய்யுதுன்னு தனி விளக்கம் வேற குடுக்கணுமா”ன்னு கேட்டுச்சு..எனக்கு ஒண்ணுமே புரியலீங்க..உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா?

அக்கறையுடன்,
தெருத்தொண்டன்.

நன்றி: தினமலர் செய்திமலர்
(திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் இலவச இணைப்பு.)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.