ரோசா வசந்த் பதிவு போட்டதும் மீண்டும் விவகாரம் தீவிர விவாதத்திற்குள் போய்விட்டது. குழலி பதிலுக்கு ஒன்று போட்டிருக்கிறார். நானும் என் பங்கிற்கு ஒரு பதிவு போடுகிறேன்.
நூறு பூக்கள் பூக்கட்டும் !
பண்பாடு கெட்டது யாரால்?
இங்கிலாந்தின் சார்ட்டிஸ்ட் மூவ்மென்டுக்கும் (சாசன இயக்கம்), பிரான்சின் இலக்கியப் புரட்சிக்கும், சீனத்தின் அபினி யுத்தத்துக்கும் வரலாற்றில் அழியாத இடம் உண்டு. மத நம்பிக்கைகளாலும், பிரபுத்துவப் பழமை வாதத்தாலும் சீரழிந்து கொண்டிருந்த சமூக அமைப்பை மாற்றிக்காட்டுவதில் கண்டிப்பும் கருணையும் மிகுந்த ஒரு பேராசிரியரைப் போல் இவை செயல்பட்டன.
ஆசாரக் கள்ளர்களின் பொய் முகங்களைக் கிழித்தெறிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தன. கூடுதலாக சார்ட்டிஸ்ட்டுகள்தான் ஆங்கில என்சைக்ளோபீடியா கலைக்களஞ்சியம் என்னும் தொகுப்பை வழங்கினார்கள். பிரான்சின் இலக்கியப் படைப்புகள்தான் பல நாடுகளின் புரட்சிக்கு வித்திட்டன. சீனத்தின் அபினி யுத்தம்தான் போதையிலும் அடிமைத்தனத்திலும் வீழ்ந்து கிடந்த மக்களுக்கு விடுதலையின் அவசியத்தைப் புரிய வைத்தது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பின் தோற்றம் சாசன இயக்கத்தைப் போல், பிரஞ்சு இலக்கியப் புரட்சியைப் போல், அபினி யுத்தத்தைப் போல் தமிழகத்தில் சிந்தனை மாற்றத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், புதிய சமூகக் கட்டமைப்புக்கும் வித்திடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் "கலாச்சாரப் புரட்சி' தங்கர் பச்சான் என்கிற திரைப்பட இயக்குநரை மன்னிப்புக் கேட்க வைத்ததற்குப் பழி தீர்க்கும் நோக்கில் நடிகை குஷ்புவுக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.
"பண்பாட்டு எழுச்சி'யைப் பாமரத்தனமான சினிமா ரசிகர்களின் தரத்துக்குச் சிறுமைபடுத்திவிடக் கூடாது.
பண்பாடு என்பதைத் தங்கர் பச்சானுக்கும் குஷ்புவுக்குமான தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு சமூகப் பிரச்சினை என்கிற முறையில் பண்பாடு என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்திப்போமே!
தங்கர் பச்சான் இயக்கித் தயாரித்த முதல் திரைப்படம் "அழகி'.
பள்ளிப் பருவம் முதலே தன்னுடன் பயிலும் மாணவி ஒருத்தி மீது கதாநாயகனுக்கு ஒருவித மயக்கம். நகரத்துக்குச் சென்று படித்துவிட்டு ஊர் திரும்பியவனுக்கு ஏமாற்றம். தனது பிரியத்துக்குரிய அழகியின் குடும்பம் எங்கோ போய்விட்டதால், அவளைச் சந்திக்க முடியவில்லை. வெகு இயல்பாய் மறந்துவிடுகிறான். பிறகு வசதியான வாழ்க்கை, அழகிய மனைவி என்று புதிய வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறான். ஒருநாள்...
தனது பழைய அழகி கல்யாணமாகி, கணவனை இழந்து, ஒரு சிறுவனுடன் "சித்தாள்' வேலை செய்து வறுமையில் வாடுவதை அறிந்து அவளுக்கு உதவுகிறான். பிறகு வீட்டுக்கே அழைத்து வருகிறான். புதிய அழகி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்துப் பழைய அழகியைப் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்கிறான். படுக்கையறைக் காட்சியைப் பார்த்துவிட்ட புதிய அழகி அதிர்ச்சியடைகிறாள். பழைய அழகி விலகிச் சென்று விடுகிறாள்.
இந்த நாயகன் ஒரு நல்ல காதலனும் அல்ல; நல்ல கணவனும் அல்ல. அழகி என்றால் சுகிப்பதற்குரியவள். இதற்கு மேல் அவன் சிந்திப்பதில்லை. ஆனால் அவன் சந்திக்கும் அந்த இரு அழகிகளுமே அவனை வெறுப்பதில்லை. ஆண் அப்படித்தான் இருப்பான். பெண்கள்தான் இம்மாதிரியானவர்களிடம் அன்பு கொண்டு, பக்தி செலுத்தி, தனது பூசனைகளால் அவர்களைத் தெய்வங்களாய் உயர்த்த வேண்டும் என்பதுதான் தங்கரின் "அழகி' தரும் பொழிப்புரை. ஒரே வரியில் சொல்வதானால் அழகி என்றால் அடிமை.தனது படங்களில் அவர் வலியுறுத்தும் பாடம், படிப்பினை குறித்துத் தங்கரின் சுயவிமர்சனமும் இதையே வரைகிறது.
ஒரு படைப்பாளி என்கிற முறையிலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என்கிற முறையிலும் "பண்பாடு' குறித்து இயக்குநர் தங்கர் என்ன சொல்கிறார்?
""ஓர் ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும். ஆனால், ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை என் திரைப்படங்கள் மூலம் பதிவு செய்து காட்டியிருக்கிறேன்.
குறிப்பாக எனது "தென்றல்' படத்தில் தாலி இல்லாமல்கூட இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும், தன் மனதைப் பறிகொடுத்தவன் நினைவிலேயே வாழ்ந்த பெண்ணைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
இப்போது வெளியாகியிருக்கும் "சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' படத்தின் ஹீரோயின் கூடப் பல சூழல்களிலும் தடம்புரளாமல் கற்பு நெறியோடு வாழ்வதைத்தான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
இவைகளை நான் ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நம் தமிழர்களின் கலாசாரத்தை தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மட்டுமே நான் பதிவு செய்து வந்திருக்கிறேன்'' என்கிறார் தங்கர்.
ஆண், சுதந்திரனாகப் படைக்கப்பட்டவன். பெண் அவனுடைய சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள். கற்பு என்பதும் ஒழுக்க நெறி என்பதும் பெண்ணுக்கே உரியது என்று தங்கர் வந்துதான் போதிக்கிறார்; பதிவு செய்கிறார் என்று போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் வெகு காலத்துக்கு முன்பே இங்கே பேசியும் பேணியும் வருகிற சாத்திர தருமமும் இதுதான்.
ஆண்கள் எப்படியும் வாழலாம் என்று போக்கிரித் தனத்துக்குப் பூரண சுதந்திரம் வழங்கி, அது இயற்கை அல்லது ஆண்டவன் விதித்த நியதி, அது ஆண்களின் கேள்வி கேட்கப்பட முடியாத உரிமை என்று தடித்த குரலில் போதிக்கும் ஒரு சமூக அமைப்பை நியாயப்படுத்துகிறார் தங்கர்.
தங்கரின் தென்றல் கற்பு நெறியை மாத்திரமல்லாது "தமிழ் உணர்வின்' தரம் குறித்தும் விரிவுரை செய்கிறது.
கதாநாயகன் ஒரு தமிழ் பாதுகாப்பாளன். தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திச் சிறைக்குச் செல்கிற ஓர் "இலட்சிய' எழுத்தாளன். அவனால்தான் கதாநாயகி சீரழிக்கப்படுகிறாள். பெண் என்பவள் ஆசைக்கு அணைத்துக் கொள்ளவும், மோகத்தை தீர்த்துக் கொள்ளவும் வசதிக்கேற்ற விலைக்கு விற்கப்படும் ஒரு கவர்ச்சிப் பொருள் என்பது இந்தத் தமிழ் உணர்வில் மூழ்கிய இலட்சியவாதியின் கருத்து. தேவைப்படும் போதெல்லாம் இருக்கிற பணத்துக்கு ஏற்ப கிடைக்கிற பெண்ணுடன் படுத்துப் புரண்டு மறந்து விடுவது அவனுடைய சுபாவம்.
தமிழ் உணர்வாளனை இவ்வளவு தரங்கெட்ட முறையில் யாரும் சித்திரித்ததில்லை. ஆனால், இது குறித்து யாரும் பொங்கி எழவும் இல்லை.
தங்கரின் "தென்றல்' தமிழ் உணர்வையும் தமிழியக்கத்தையும் இழிவு செய்தபோதிலும், ஆண்களுக்குள்ள "தனி உரிமை'யை எந்தப் பெண்ணையும், எத்தனை பெண்களையும் அனுபவிக்கலாம் என்கிற சுதந்திரத்தை மறுக்கவில்லை என்பதால் பண்பாட்டுப் பூசாரிகள் யாரும் பதறிவிடவில்லை.
திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்குப் பின்பும் ஆண்கள் எப்படியும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம்; அது தப்பில்லை என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சமூக அமைப்பில் பெண்களின் "கற்புக்கு' என்ன உத்தரவாதம்?
ஊர்ப் பெண்களையெல்லாம் நான் அனுபவிப்பேன். ஆனால், எனக்கு மனைவியாக வருகிறவள் மாத்திரம் "உத்தம பத்தினி'யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவெல்லை கடந்த ஆணவம் நிறைந்த ஆசையல்லவா?
ஆண்கள் யோக்கியர்களாக இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் "கறை' படாதவர்களாக இருக்க முடியாது என்கிற எதார்த்தம் எதிர்கொள்ளும்போது, அந்தோ, தனக்குள்ள "சுதந்திரமே' அச்சுறுத்தலாகவும் மாறிக் கலங்கித் தவித்து ஒவ்வொரு நிமிடமும் தனது மனைவியைக் கண்காணித்து, இத்தனை கட்டுப்பாட்டுக்குள்ளும் எப்படி இவளால் சிரித்து சிங்காரித்து வாழ முடிகிறது என்று சந்தேகித்து, அவள் அழகாய் இருப்பது வேறொருத்தனுக்காகத்தானோ என்று குமுறிக் குமைந்து நிம்மதியற்று நித்தம் நித்தம் வெந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?
இம்மாதிரியான கலகத்திலும் குழப்பத்திலும் தவிப்பிலும் தகிப்பிலும் ஆண்கள் நிம்மதியற்றுப் போனதால்தான் கற்பு ஒழுக்கம், பண்பாடு என்கிற கூப்பாடு வெகுகாலமாய்க் காதைக் கிழிக்கிறது.
தன்னைப் பற்றிய குற்ற உணர்வும் பெண்ணைப் பற்றிய சந்தேக உணர்வும் ஒன்று திரண்டு ஒவ்வொரு ஆணையும் மிரட்டுகிறது. இந்த அச்சத்திலிருந்து தப்பும் மார்க்கமாக அவன் பத்தினித் தெய்வங்களையும் கற்புக்கரசிகளையும் தேடித் திரிந்து புனைந்துருவாக்கி ஆறுதலடைகிறான்.
தன்னைப் போன்ற "சாத்தான்கள்' உருவாக்கிய "தெய்வம்' தான் கற்புக்கரசி என்கிற நினைப்பு வருகிறபோது, தன் மனைவி தன் மரணத்துக்குப் பிறகும் கற்பு நெறியில் இருப்பாளா? என்கிற சந்தேகம் அவனைக் குத்திக் கிழிக்கிறது.
சஞ்சலப்படும் அவன் குரூரமான முடிவுக்கு வருகிறான். "கணவன் இறந்தால் அவனுடைய மனைவியும் அவனுடன் எரிந்து சாம்பலாக வேண்டும். "உடன்கட்டை' ஏறுதலே பெண்மைக்குப் பெருமை'' கற்பின் கனலி சீதையின் வழிவந்தவளே நீ தெய்வப் பிறவி. வா, இந்த நெருப்பில் இறங்கு, போ அந்த சொர்க்கத்தில் சுகமாக உறங்கு''என்று சதி தருமம் பேசும் கொலைகாரனாகவும் மாறுகிறான். இந்தக் கொலைவெறியை ஒரு சமூக நீதியாகவும் பாரதப் பண்பாடாகவும் இன்றும் போற்றுகிறவர்கள் இல்லையா?
கணவன் இறந்த பிறகும் வாழும் "விதவைக்கு' மனித அந்தஸ்து மறுக்கப்படுவதுடன் ஒரு பிடி சோற்றுக்குக்கூட இரக்கமுள்ளவர்களின் கருணைக்குக் காத்திருக்கும் நிலை.
ஆணாதிக்க சமூக அமைப்பு பெண்ணைச் சாகும்வரை துரத்துகிறது.
இந்த ஆணாதிக்க அக்கிரமத்துக்கு அடிப்படைக் காரணம் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லாதது தான். தனிச் சொத்துரிமையின் முதல் தாக்குதல் பெண்மீதே தொடங்கியது என்று கல்வியும் பெரியார்களும் பெண்ணுக்குப் புரிய வைத்தபோது, பிடி சோற்றுக்காக அடிமையாக வாழ்வதைவிட தனது உழைப்பின் மூலம் சுதந்திரமாக வாழ முடியும் என்று தன்னம்பிக்கையோடு மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் வெளியே வந்தால் காஞ்சி சங்கராச்சாரி போன்ற மதகுருக்கள் "நெற்றிக்கண்' திறக்கிறார்கள்.
"வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் ஒழுக்கக்கேடானவர்கள்'' என்று சங்கராச்சாரி உழைக்கும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் சூட்டியபோது, பெண்கள் மீதான தங்கள் ஆதிபத்திய உரிமையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இழந்துவிடுவோமோ என்று கலக்கமுற்றிருந்த ஆண்களுக்கு அது வீசுதென்றலாய் வருடியது. பெண் சமூகமும் சங்கராச்சாரியின் அவதூறு குறித்து ஆத்திரம் கொண்டு துடைப்பக்கட்டை தூக்கவில்லை.
""பணத்துக்காக நடிக்கும் நடிகைகளும் விபச்சாரிகளே'' என்று தங்கர்பச்சான் எப்படிக் கூறலாம் என்று கொதித்தெழுந்த நடிகைகள் சங்கராச்சாரி உழைக்கும் பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று வசைபாடியபோது, செவிடராய், ஊமையராய்ச் சலனமற்றுக் கிடந்தது ஏன்?
இன்று நடிகை குஷ்பு கூறிய கருத்துக்களால் தமிழ்ப் பெண்களின் மானமே தாக்கப்பட்டு விட்டதாகப் "புண்பட்ட நெஞ்சோடும்' போராடும் துணிவோடும் புறப்பட்டிருக்கும் மகளிர் அணிகூட சங்கராச்சாரிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்?
படுக்கையறை அந்தரங்கங்களைப் பகிரங்கமாகப் பாடித் திரிந்த ஆண்டாளையும், அவள் பாசுரங்களைப் பஜனை பாடிக்களிக்கும் அடியார் கூட்டத்தையும் போற்றித் துதிப்பது எப்படி?
பெண்களை இழிவு செய்வதிலும் அடிமைப்படுத்துவதிலும், மதகுருமார்களின் பங்கை நேர்மை உணர்ச்சியுள்ள யாராலும் மன்னித்து விட முடியாது.
இந்து (ஆரிய) மதத்தில் கடவுள்கள் கூடக் குடிகாரனாகவும், காமுகனாகவும், ஒழுக்கக் கேடானவனாகவும், ஓரினச் சேர்க்கையிலும், மிருகங்களைப் புணர்வதிலும் வெறிகொண்ட வெட்கமற்ற கழிசடையாகவுமே இருக்கிறார்கள். பண்பாட்டுப் போராளிகள் யாரும் இந்த ஆபாசங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
இந்து மதம் பெண்களை மாத்திரமல்ல, ஆரியரல்லாத அனைத்து மக்களையுமே இழிவு செய்கிறது. ஆரியரல்லாத மக்களை அரக்கர்களாகவும், அழிக்கப்பட வேண்டியவர்களாகவுமே சித்திரிக்கிறது.
ஆனாலும், மதமில்லாத, இறையச்சம் இல்லாத உலகத்தை நினைக்கவே நமது சமூகம் அஞ்சுகிறது. "தேசியப் பெருமிதங்கள்(!)' "தமிழ் முழக்கங்கள்' எல்லாம், வீர சைவமாய், விஷ்ணு பக்தியாய் வீழ்ந்து பணிவதிலிருந்து விடுபட முடியவில்லை.
பிரதமர் குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களும் விஞ்ஞானிகள் என்று பசப்புகிறவர்களும் கூட மத பீடங்களுக்கு முன் மண்டியிடும்போது, யாருக்குத்தான் மத நம்பிக்கைகளிலிருந்து விடுபடவும், மதகுருமார்களை எதிர்க்கவும் துணிச்சல் வரும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், மக்களுக்கு உண்மையாயிருப்போம் என்று மக்கள் சக்திக்குத் தலை வணங்காமல் கடவுள் பெயரால் பதவி ஏற்கும்போது, கடவுளே அனைவர்க்கும், அனைத்துக்கும் மேலான அதிபதி என்று முட்டாள் தனத்தை வளர்க்கும்போது, பெண்ணுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, மனித உரிமை எல்லாமே மலிவான வெற்று முழக்கங்களாக மாறிவிடுகின்றன.
பக்திப் பரவசம், பரத்தையர்சேரி, பத்தினிக் கதைகள், பால்வினை நோய்கள், மாயாவாதம், மரணபயம், அகிம்சாவாதம், ஆயுதப்படைகள், சக்தி வழிபாடு, உடன்கட்டை ஏற்பாடு... இந்த இரட்டை நிலைதான், பொய்முகத்துடன் திரியும் ஆசாரக் கள்ளர்கள் போற்றிப் புகழும் "தமிழ்ப்பண்பாடு', பாரதப் பண்பாடு, வாழ்ந்து தீர்ந்து போன உலகளாவிய நிலப்பிரபுத்துவப் பண்பாடு.
பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சி, நிலப்பிரபுத்துவத்தை உலுக்கியது. புதிதாய் எழுந்த ஆலைச் சங்கொலிகள் பழைய சமூகக் கட்டமைப்பின் இறுதியை முன்னறிவித்தன.
எங்கெல்லாம் முதலாளித்துவ ஆதிக்கம் நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா விதமான பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழிச் சமுதாய உறவுகளுக்கும் கிராமியப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது.
"தெய்வீக உரிமை பெற்ற மேலோர்'க்குத் தாள் பணியுமாறு கட்டிப்போட்ட பல்வேறு விதமான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது.
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தைத் தவிர பரிவுணர்ச்சியில்லாப் "பணப் பட்டுவாடா'வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கியது.
சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், உளநெகிழ்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களையெல்லாம் சுயநலவேட்கையெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துவிட்டது.
மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாக வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கிறது.
சுருங்கச் சொல்வதெனில் மதப்பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.
ஆதிக்க சக்தியாக மாறிவிட்ட முதலாளித்துவத்தின் வசீக முழக்கங்களும் சுதந்திரப் பிரகடனங்களும், வெகுகாலமாய் ஆணாதிக்கக் கொடுமையின் கீழ் அழுந்தி வதைபட்ட பெண்ணின் மனத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பின் நவீனத்துவம், கட்டுடைத்தல் என்கிற கருத்தியல், புதிய சமுதாயத்திற்கும் பெண் விடுதலைக்குமான போராயுதமாக மின்னிச் சுடர்கிறது.
பிரபுத்துவக் கட்டமைப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த "அடிமைப் பெண்களை' முதலாளித்துவம் சுதந்திரமான அழகிகளாய் உலகுக்குக் காட்டுகிறது.
கணவன் விருப்பப்படியான உடலுறவுக்குப் பதில் கட்டுத் தளையற்ற காமத்துக்கு வரவேற்பளிக்கிறது. மறைவில் நடந்த கள்ள உறவுகளை அலங்கார மேடைகளில் வெளிப்படையாய் அரங்கேற்றுகிறது.
"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரொக்கத்துக்கு முன் விசாரணை செய்கிறது.
சந்தைப் பொருளாதாரத்தை விரிவு செய்கிறது. ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையடிக்க எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பளிப்பதாக ஒப்பந்தம் செய்கிறது. உலகைக் கொள்ளையடிக்க விரும்பும் ஒரு சமூகம் பழைய பண்பாடுகளையும் "பாரம்பரியப் பெருமை(!)'களையும் காதல், கற்பு, திருமணம் என்னும் "புனித (!)' உறவுகளையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது.
தாகத்துக்காகக் "கிணறு' தோண்டிக் கொண்டிராதே; கிணற்றை வழிபடாதே; எதையுமே பயன்படுத்தித் தூக்கியெறி என்னும் நுகர்வுக் கலாச்சாரம் ஒன்று உருவாகிறது. இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண் ஒரு கவர்ச்சியான விற்பனைச் சரக்காகிறாள். கலை, இலக்கியம், பத்திரிகை, இணைய தளம் எங்கும் எதிலும் வெறியூட்டும் கவர்ச்சி, வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது.
"உலகமயமாக்கலின்' தவிர்க்க முடியாத தேவையாக மக்களைப் போதையிலாழ்த்தும் விபரீதங்கள் புதிது புதிதாய் மலர்கின்றன. முன்பு சபிக்கப்பட்ட அபலையாய் அழுது கொண்டிருந்த பெண், இப்போது "சுதந்திர'ப் பிறவியாய் எல்லா விளம்பரங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
முன்பு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த பெண் இப்போது புன்னகையோடு புதைந்து கொண்டிருக்கிறாள்.
முன்பு ஆணின் தனிச்சொத்தாக இருந்த பெண் இப்போது உலகமயமாக்கப்பட்டு விட்டாள்.
பிரபுத்துவ சமூக அமைப்போ தனது அழிவின் விளிம்பில் நின்று கடைசி முயற்சியாகப் "பண்பாட்டுப் பதாகை'யை உயர்த்திப் பிடித்து இன்னும் தன்னிடமிருந்து வெளியேறாத பெண்களின் காலடியில் விழுந்து மன்றாடுகிறது.
ஒருபுறம் நிலப்பிரபுத்துவப் பழமைவாதம்; மறுபுறம் முதலாளித்துவ ஏகாதிபத்தியப் புதுமை மோகம்! இருபுறத்திலும் இரு தத்துவங்களும் பெண்ணையே முன்னிறுத்துகின்றன. இந்த இருபுறத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரமில்லை என்பதை இரு தரப்பிலும் பெண்கள் உணரவில்லை.
அங்கே தனது விலங்கை மெச்சிக் கொள்கிறாள் பெண்.
இங்கே தனது விலையை மெச்சிக் கொள்கிறாள் பெண்.""ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழலாம். ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழவேண்டும்'' என்றொரு "பண்பாடு' வலியுறுத்தப்படும்போது,
ஆண்கள் எப்படியும் வாழ உரிமை பெற்ற ஒரு சமுதாயத்தில், "அதுதான் பண்பாடு' என்று போதிக்கும் ஒரு சமூக அமைப்பில்,
"எப்படியும்' வாழும் உரிமை பெற்ற ஆண்களால் "இப்படித்தான்' வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கூட ஆணின் மோக வெறிக்கு இரையாக மாட்டாளா? இங்கே பெண்ணின் "கன்னித்தன்மைக்கு' என்ன உத்தரவாதம்?
இந்தப் பின்னணியில் தான் "பெண்கள் திருமணமாகும்போது கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமுதாயம் விடுதலை பெறவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன்பு "செக்ஸ்' வைத்துக் கொள்ளும்போது, கர்ப்பம், பால்வினை நோய் முதலியவற்றைத் தவிர்க்க பெண்கள் பாதுகாப்போடு செயல்பட வேண்டும்'' என்று குஷ்பு கூறுகிறார்.
""தென்றல்' கதாநாயகியின் நிலை எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது'' என்பதுதான் குஷ்புவின் கருத்து.
ஆனால், ""பாதுகாப்பான செக்ஸ் என்பது ஆணுறை விளம்பரத்துக்கே உதவும் ஆணாதிக்கத்தை ஒழிக்காது'' என்கிறார் தொல்.திருமாவளவன். அவருடைய வாதம் நியாயமானதுதான். ஆனால், தீர்வு?
""ஆண்களின் நலனுக்காக ஆண்களால் கற்பிக்கப்பட்டு, பெண்களின் மீது திணிக்கப்பட்ட வன்முறை தான் கற்பு.
ஊரறியத் திருமணம் செய்து கொண்டாலும் பிறக்கிற குழந்தை தனக்குப் பிறந்ததே என்று உறுதி செய்து கொள்வதற்காகப் பெண்களின் மீது திணிக்கப்பட்டதுதான் கற்பு.
ஆண்களின் சொத்தாசை தான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியுள்ளது'' என்று சரியாகவே கூறிய திருமாவளவன் (இந்தியா டுடே ஜனவரி 16, 2005) குஷ்புவால் தமிழ்ப் பண்பாடு கெட்டுவிட்டதாக இப்போது சொல்வது, முரண்பாட்டின் முட்டுச் சந்தில் அவர் சிக்கிக் கொண்டதையே காட்டுகிறது.
திருமாவளவனின் முற்போக்குச் சிந்தனை, அவரை உயரமான இடத்துக்குக் கொண்டு வருகிறது. தனிப்பட்ட கோபதாபமோ அவரைப் பள்ளத்தாக்கில் இழுத்துத் தள்ளிவிடுகிறது.முற்போக்குச் சிந்தனையாளர்கள்,
பெண், தலித், கறுப்பின மக்கள்
இவர்களின் குரலை அக்கறையுடன் பரிசலீக்க வேண்டும். "நாடு கடத்துவோம்; தூக்கிலிடுவோம்' என்று உணர்ச்சிமீதுறப் பேசுவது பாசிசப் போக்கே ஆகும்.
நிலப்பிரபுத்துவமோ, முதலாளித்துவமோ, ஏகாதிபத்தியமோ பெண் விடுதலையை அனுமதிக்காது. பெரியாரியமுமே மார்க்சியமுமே உண்மையான பெண் விடுதலையை உறுதி செய்யும். சோஷலிசமே சமூகக் கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் என்கிற புரிதலுடன் இயக்கம் நடத்தும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்.
இவர்கள் சங்கராச்சாரிகளையும் எதிர்ப்பார்கள். சங்க இலக்கியமே ஆனாலும் தவறென்றால் எதிர்ப்பார்கள்.
தனிச் சொத்துரிமையின் அழிவிலேதான், வர்க்கப் பகைமையின் இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட புதிய சமூகத்திலேதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். அங்கே அவள் அடிமை அல்ல; விளம்பர "அழகி' அல்ல; சுதந்திரச் சிந்தனைகள் மலர்ந்த அன்புமயமான தோழி!'
நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்.